காலங்களில் காஞ்சி!

காஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சி, கச்சி, கச்சிப்பேடு, கச்சியம்பதி, காஞ்சீபுரம், காஞ்சனபுரம், காஞ்சீபுரி, கம்பாபுரி, பல்லவேந்திரபுரி என்ற பல பெயர்கள் இவ்வூருக்கு வழங்கியுள்ளன.
காலங்களில் காஞ்சி!


அத்திகிரி -1

காஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சி, கச்சி, கச்சிப்பேடு, கச்சியம்பதி, காஞ்சீபுரம், காஞ்சனபுரம், காஞ்சீபுரி, கம்பாபுரி, பல்லவேந்திரபுரி என்ற பல பெயர்கள் இவ்வூருக்கு வழங்கியுள்ளன. காஞ்சி என்னும் சொல் மகளிர் இடையணி, எதிர்த்துப் போர் புரிதல் என்ற பொருளும் உடையது. காஞ்சி மரங்கள் மிகுந்திருந்த ஊர்  காஞ்சிபுரம் எனப் பெயர்பெற்றது. "கலைவாழ் காஞ்சி' என்றும், "என்றுமுள காஞ்சி' என்று நூல்களிலும். திருநாவுக்கரசரால்  "கல்வியில் கரையிலாத காஞ்சி' எனவும் சிறப்பிக்கப்படுகிறது. நகரங்களில் சிறந்தது காஞ்சி  (நகரேஷூ காஞ்சி) என்று காளிதாசன்  பாராட்டுகிறான்.

இவ்வூர் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி, பெளத்த காஞ்சி என்று நான்கு பிரிவுகளாக இருந்தது. சிவகாஞ்சி என்பது இன்றைய பெரிய காஞ்சிபுரம் ஆகும்; விஷ்ணு காஞ்சி இந்நாளில் சின்ன காஞ்சிபுரம் எனப்படுகிறது. அருகேயுள்ள திருப்பருத்திக்குன்றப்  பகுதி  சமணம் வளர்த்த ஜைன காஞ்சியாகும். காமாட்சியம்மன்  கோயிலைச் சுற்றியுள்ள  பகுதியே பெளத்த காஞ்சி எனப்பட்டது .

தொண்டை நாட்டில், வேகவதியாற்றின் கரையில் அமைந்திருக்கும் பழம் பெரும் பதி காஞ்சிபுரம். காஞ்சிமரம் (ஆற்றுப் பூவரசு) மிகுந்து இருந்ததால் காஞ்சிபுரம் எனப் பட்டது. பூதேவியான நிலமகளுக்கு ஒட்டியாணம்  போன்று இவ்வூர்  விளங்குவதால் இப்பெயர் என்பர். 

கல்விக்கும், கலைக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற இவ்வூரில்   ஆதி சங்கரர், அறவண அடிகள், மணிமேகலை, தின்னாகர், தருமபாலர், சீன யுவான்சுவாங், கெளடில்யர், ராமானுசர், வேதாந்த தேசிகர், கணிகண்ணன், மகேந்திரபல்லவன், நந்திவர்மன், கச்சியப்ப சிவாச்சாரியார், சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர்,  பரிமேலழர், சியாமா சாஸ்த்திரிகள், நயினாப்பிள்ளை, எல்லப்பபிள்ளை, பச்சையப்பர் போன்ற  பெருமக்கள் வதிந்த ஊர்.

எட்டுத் திக்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து பட்டொளி வீசும் இந்நகர், தெய்வ மணங்கமழும் திருநகராகத் திகழ்கிறது. எந்நாட்டவரும் தென்னாட்டவருடன் வணங்கும் பெருமை மிக்க பொது புண்ணிய பூமி.

காஞ்சியின் வரலாறு:  கரிகாலன் இமயமலையில் புலிச்சின்னத்தைப் பொறிக்க வடதிசை சென்ற போது   இந்நகரின் வளமையைக்  கேட்டு,  நான்கு காலங்கள் சதுரத்திற்குக் காஞ்சி மாநகருக்கு குன்றுபோல் மதில் அமைத்து, குடி அமர்த்தினான் என்பார்  சேக்கிழார். இந்த வரலாற்றுச் செய்தியைச் சோழர் செப்பேடுகளும் கூறுகின்றன. கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர் 900 முதல் 1300 வரை சோழப் பேரரசர் ஆளுகையின் கீழ் இவ்வூர் இருந்தது. கோதாவரி ஆறு வரையும் அதற்கப்பாலும் பரந்த அவர்கள் ஆட்சிப் பகுதியில் வடபகுதிக்கு அது துணைத் தலைநகராய் இவ்வூர் அமைந்திருந்தது.

அக்காலக் காஞ்சியில்  யோக முனிவர்களும் யோகினிகளும் போற்றும் யோகபீடம்  இருந்தது என்பர் சேக்கிழார். அங்கு உருத்திரசோலை,  தவசிகள் தொட்டால் யாவற்றையும் பொன்னாக மாற்றும் சிலை. அந்தணர் இருக்கை, அரசர் குலப் பெருந்தெருக்கள், ஆயுதங்கள் பயிலும் இடங்கள் யானை, குதிரை ஏற்றம் பயிலிடங்கள், வணிகர் வாழ் மாநகர்கள், வேளாண்குடிப் பெருஞ்செல்வர் வாழ் இடங்கள் அனுலோமர், பிரதிலோமர் ஆகிய குடிமக்கள் தொழில் புரிந்து வாழும் பகுதிகள் தனித்தனியாக  இருந்த குறிப்புகள் உள்ளன.
சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்தில் அசோகன் எடுத்த பெளத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது. அது சுமார் 100 அடி உயரத்திற்குமேல் இருந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்தப் பள்ளிகள் இருந்தன. இவற்றில் பௌத்த சமயத்தில் தீவிரப்பிரிவைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் வசித்தார்கள் என்று ஹூவான் "சுவாங்' குறிப்பிடுகிறார். கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இங்கு  பெளத்தமும் சிறந்திருந்தது. இங்கு வசுந்தரா என்னும் பெயர் பெற்ற தாராதேவிக்கு ஒரு கோயில் இருந்தது.

காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ்மிக்கது. உலகளந்த பெருமாள் கோயில், பரமேச்சுர விண்ணகரம் என்னும் வைகுந்த பெருமாள் கோயில், பச்சைவண்ணன் கோயில் முதலிய கோவிந்தன் கோயில்கள் புகழ் மிக்கவை. அருளாளப் பெருமாள் கோயில் என்னும் வரதராசர் கோயில் வைணவப் பெரியார் ராமானுஜரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றது. தொண்டை மண்டலத்துக்கே சிறந்த தலைநகராகக் காஞ்சிமாநகர், 18-ஆம் நூற்றாண்டுவரை சீரும் சிறப்புமாகத் திகழ்ந்தது. 

திருமால் உறைவிடம்:  நல்யாற்று நடுவில் திருமால் எழுந்தருளுவதாக பரிபாடல்  கூறுகிறது. காவிரி - கொள்ளிடத்தின் நடுவே பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இப்பாடலுக்கு விளக்கமாக அமைகிறார். மாயோன் மேய காடுறை உலகமும் என தொல்காப்பியம் மாயோனின் உறைவிடமாக கானகத்தைக் குறிப்பிடுகிறது.  காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலக் கடவுளாக திருமால் வழிபடப் பெறுகிறான். திருமால் காடு, மலை, ஆற்றிடைக் குறை ஆகிய இடங்களில் உறைவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மருதநிலத்திலும் சங்ககாலத்திலிருந்தே திருமால் கோயில் உண்டென்று தெரிகிறது.

காஞ்சியும் திருமாலும்:  வேகவதி, பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்ற காஞ்சியில் பண்டைய காலத்திலிருந்தே வைணவம் தழைத்து வளர்ந்துள்ளது. திருமால் உறைவிடங்களாக  தமிழ் நிலத்தின் நாற்திணைகளிலும் வைணவக்கடவுள் வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதைக் காண்கிறோம் . காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும். காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும். 

இப்பகுதி முழுவதும் காடு சூழ்ந்த முல்லைப்பகுதியாகவும், மூன்று ஆறுகள் ஓடுகின்ற செழித்த வேளாண் பூமியாக மருதத்திணையாகவும், கடல்மல்லை போன்ற கடற்கரைப் பட்டினம் கொண்ட நெய்தல் நிலமாகவும் காஞ்சிபுரம் அன்றிலிருந்து இன்று வரை விளங்குகிறது. இத்தகு புவியியல் அமைப்பு சார்ந்த இந்நிலப்பரப்பில் தமிழ் மரபின் நாற்திணைக்கும் தலைவனாக திருமால் விளங்கியுள்ளமையும் அறிய முடிகிறது. பக்தி இயக்கக் காலத்தில் வைணவம் காஞ்சியில் பொது சமயமாக தொழிலாளர், பழங்குடியினர், விலக்கப்பட்டோர் ஆகியோரையும் அரவணைத்துச் செல்லும் அருள்நெறியாக தழைத்திருந்தது என்றால் அது மிகையில்லை. 

திருமாலின் 108 திவ்விய தேசங்களில் பெருமாள் கோயில்  என அழைக்கப்பட்ட திருத்தலம் அமைந்ததால் தனிச்சிறப்புப் பெற்ற ஊர் காஞ்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com