22 செப்டம்பர் 2019

பரத்திலும் பாச நபிகளின் நேசம்

By - மு.அ. அபுல் அமீன்| DIN | Published: 07th June 2019 12:00 AM

 

இக வாழ்வின் இலக்கு பர வாழ்வில் பரிபூரணம் பெறுவதே. பரிபூரணத்தில் பெருமகிழ்வெய்த பேரானந்தம் பெற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற்று நெருங்கி இருக் வேண்டும். இதனை இறைமறை குர்
ஆனின் 59- 20 ஆவது வசனம் சொர்க்கவாசிகள் பெரும் பேறு பெற்றவர்கள் என்று பேசுகிறது. நபிமார்களும் இறைதூதர்களும் சொர்க்கத்தில் மக்களை விட மதிப்பு மிக்கவர்களாக வீற்றிருப்பார்கள். அவர்களில் முதன்மையானவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் பெற்று முன்னணியில் இருப்பார்கள்.
சொர்க்கத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்மையில் இருப்பது உயரிய நேசத்தின் நெருக்கம். பெரும் மதிப்பு உடையது. பெறற்கரிய பேறு. உண்மையான இறையடியார்கள் சொர்க்கத்தில் இறைதூதரின் அருகில் இருக்க ஆவலுறுகின்றனர். ஆவலை அடைவதற்கு அல்லாஹ் ஏவியபடி மேவும் நற்செயல்களை நாளும் செய்கின்றனர். நபி வழியில் அபிமானம் உடையவரோ இல்லாதவரோ எல்லோருக்கும் ஏற்ற ஆக்க பூர்வ பணிகளை ஊக்கமுடன் செய்கின்றனர். 
மறுமையில் நாம் நேசிப்பவரோடு இருப்போம் என்று திருநபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- அஹ்மத். இந்நிலையை அடைய நந்நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய நந்நெறியில் நடக்க வேண்டும். நற்குணங்களை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். புண்ணிய நபி (ஸல்) அவர்கள் போதித்ததைக் கண்ணியமாய் கடைபிடித்து திண்ணியராய் திகழ வேண்டும். நுண்ணிய செயலையும் எண்ணி துணிய வேண்டும். துணிந்தபின் துவள கூடாது;  தொடர்ந்த முயற்சி முற்றிலும் வெற்றியைத் தரும். திருநபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் தாக்கமே பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அருமைத் தோழர் ஸவ்பரன் (ரலி) அவரின் உயிரைவிட அவரின் பிள்ளைகளை விட குடும்பத்தினரைவிட விழுமிய நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாக கூறினார். மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து வீட்டிற்குச் சென்று வேறு வேலைகளில் ஈடுபட்டு திரும்பி வந்து திருநபி (ஸல்) அவர்களைப் பார்க்கும் வரை அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்றும் மறுமையில் மாநபி (ஸல்) அவர்களைப் பார்க்காமல் எப்படி இருப்பேன் என்பதை எண்ணி வருந்துகிறேன் என்று சொன்னார்.
பாசநபி (ஸல்) அவர்கள் பதில் கூறாது வானவர் வருகையை எதிர்நோக்கினார்கள். வானவர் ஜிப்ரயீல் 4-69 ஆவது வசனத்தைக் கொண்டு வந்தார்கள். ""எவர் அல்லாஹ்விற்கும்  தூதருக்கும் வழிபடுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருள் கொடைகளைப் பெற்றவர்களான நபிமார்கள் சத்தியவான்கள் தியாகிகள் நற்செயல் புரிந்தவர்களோடு இருப்பர். இத்தகையோர் தோழமைக்கு அழகானவர்கள்.''
""பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற சட்டங்களைச் சரியாக பின்பற்றி சட்டபடி திட்டமிட்டு இறைவன் இட்ட கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஐந்து கடமைகளை நிறைவேற்றி பெற்றோர்களை நோகடிக்காது அவர்கள் விரும்புவதை விரும்பியவாறு செய்து பெற்றோரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் நபிமார்கள். உண்மையானவர்கள் தியாகிகள் ஆகியோருடன் மறுமையில் இப்படி இணைந்திருப்பார்கள்'' என்று இனிய நபி (ஸல்) அவர்கள் இரு விரல்களை இணைத்துக் காட்டி இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள். இதன்படி அல்லாஹ்வின் கட்டளைகளைக் கவனமாய் கடைப்பிடித்து பெற்றோர் மகிழ அவர்களைப் பேணி நடப்பவர்கள் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர்.
இஸ்லாமிய கடமைகளில் முக்கியத்துவம் உடையது தொழுகை. ஐங்கால கடமைகளான தொழுகைகளை நாளும் தொழுது மேலும் அதிகமாக நபில் (கூடுதல்) தொழுகைகளையும் தொழுபவர் பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். ரபீஆஇப்னு கஃப் அல் அஸ்லமி (ரலி) ஓர் இரவு பிரிய நபி (ஸல்) அவர்களுடன் தங்கி அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கும் உளு செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தோழரிடம் வேண்டுவதை விளம்ப சொன்னார்கள். மறுமையில் மாநபி (ஸல்) அவர்களின் அருகில்  இருப்பதையே விரும்புவதாக விளம்பினார் தோழர். வேறு ஏதேனும் வேண்டுமா? என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கேட்ட பொழுது வேறு எதுவும் வேண்டாம் என்று உறுதியாக உரைத்தார் உத்தம நபி தோழர். கோரிக்கை நிறைவேற தொழுகையை நிலைநிறுத்த நீதர் நபி (ஸல்) அவர்கள் நீதிபோதனை புரிந்தார்கள். நூல்- முஸ்லிம். 
அழகிய நற்குணங்களோடு பொற்புடையவராய் தற்பெருமை இன்றி நல்லன செய்வோர் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். அழகிய நற்குணம் சமூகத்தில் பாசத்தோடு பழகி ஒருவருக்கொருவர் அக்கறையோடு ஆர்வமாக ஆதரவு நல்கி ஒத்துழைத்து தக்க சமயத்தில் மிக்க உதவிகள் செய்து மரியாதையோடும் மதிப்போடும் வாழ்வது. இவ்வாறு இகத்தில் வாழ்வோர் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர்.
பெண் குழந்தைகளை, சகோதரிகளைச் சரியாக வளர்த்து முறையாக மணம் முடித்து கொடுப்பவர்களும் மறுமையிலும் மாநபி (ஸல்) அவர்களின் அருகில் இருக்கும் நேசத்தைப் பெறுவர். நூல்- முஸ்லிம். அநாதைகளை ஆதரித்து அவர்களின் நல்வாழ்விற்கு உயர்விற்கு உரியன செய்து உதவுவோரும் அவர்களின் வளர்ச்சியைக் கண்ணும் கருத்துமாக கவனித்து புவனத்தில் பூரிப்புடன் வாழ வகையாய் வழிகாட்டும் தகையுடையோரும் தாஹா நபி ( ஸல்) அவர்களின் நேசத்தைத் தரணியிலும் பரத்திலும் பெறுவர்.
நாளும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஸலவாத் ஓதி வருகிறாரோ அவரும் அஸ்ஸலவாத்தை வெள்ளிக்கிழமை அதிகமாக ஓதுவோரும்பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். அல்லாஹ்வும் அவனின் மலக்குகளான வானவர்களும் சொல்லும் ஸலவாத்தை நாமும் சொல்ல அல்லாஹ் கட்டளை இடுவதை இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 33- 56 ஆவது வசனம். இந்த கட்டளை ஈமான் கொண்டவர்கள் கோமான் நபி (ஸல்) அவர்கள் மீதுளள பிரியத்தைத் தெரிவிக்கும் வெளிப்பாடு. நல்வழி காட்டிய நந்நபி (ஸல் ) அவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும் அமையும் அனுதினமும் சொல்லும் ஸலவாத்து. இந்த ஸலவாத்து பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற்று நெருங்கி இருக்க செய்யும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தில் நெருங்கி இருக்க நிறையருள் புரியும் இறைவனிடம் இறைஞ்சுவார்கள்.நூல்- அஹ்மத். நாமும் அவ்வாறே அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். அதோடு இறைவன் இட்ட கட்டளைகளை நிறைவாய் நிறைவேற்றி இறைதூதர் இறுதி நபி (ஸல்) அவர்கள் உறுதியாய் வாழ்ந்து காட்டிய நன்மை பயக்கும் நற்செயல்களைப் பொற்புடன் செய்து அற்புத ஸலவாத்தைச் சளைக்காது மொழிந்து இகத்தில் மிக நேசிக்கப்படுபவராக நெறியோடு பிறழாது வாழ்ந்து பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவோம்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்
பொருநை போற்றுதும்! 59
கொன்றைப்பூ விசேஷம்!
மண்ணில் தோன்றிய மாலோலன்!
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26