மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!

வரதராஜப் பெருமாள் கோயிலைப் பொருத்தவரை வைணவம் திருமாலை தேவராஜனாய் போற்றி வணங்குகிறது . ஆனால் இக்கோயில் சிற்பக்கலைக் கருவூலமாகும்.
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!

அத்திகிரி - 6
 வரதராஜப் பெருமாள் கோயிலைப் பொருத்தவரை வைணவம் திருமாலை தேவராஜனாய் போற்றி வணங்குகிறது . ஆனால் இக்கோயில் சிற்பக்கலைக் கருவூலமாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற இக்கோயிலில் பல்லவர்களின் சிற்பக் கைவண்ணமாக, குளத்தின் உள்ளும் சக்கரத்தாழ்வார் சந்நிதியின் அருகிலும் பல்லவர் கால மணற்கல்லால் ஆன இரு தூண்கள் மட்டுமே எச்சங்களாகத் தற்போதைக்கு கிடைக்கின்றன.
 அருளாளப்பெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கட்டடக் கலைப் பாணியாகும். அதன் பின்னர் ஏனைய திருச்சுற்றுகள், சந்நிதிகள், மண்டபங்கள் விரிவாக்கம் அடைந்துள்ளன . அவ்வாறே கால நகர்தலில் பிற்காலச் சோழர், விஜயநகரர், நாயக்கர் கால சிற்பக்கலைகளும் இக்கோயிலில் உள்ளன.
 சோழர்கள் காலத்தில் பிற்காலச் சோழர்கள் முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரமச்சோழன் ஆகியோர் காலத்தில் செய்யப்பட்ட இக்கோயிலின் பல கருவறைக் கடவுளர்களின் உருவமைதிகள் எழில்மிக்கவையாக உள்ளன.
 மேல் கருவறையில் தேவராஜப் பெருமாள் நீண்டுயர்ந்த நெடுமாலாய் நாற்கரங்களுடன் பின்னிரு கைகளில் சங்கு சக்கரமும் இடது முன் கையை தன் கதாயுதத்தின் மேல் இருத்தியும் , வலது முன் கையால் அருள் வேண்டுவோர்க்கு அபயம் வழங்கியபடியும் காட்சியளிக்கிறார். தாமரைக்கண்ணனின் அதரங்கள் விரிந்த சிரித்த திருமுகத்துடன் விளங்குகிறார். கீழ் திருச்சுற்றில் கருவறையில் பத்மாசனத்தின் மீது வீற்றிருக்கும் நரசிம்மர் உத்குடிகாசனத்தில் அமர்ந்து யோகபட்டத்துடன் குகை நரசிம்மராக விளங்குகிறார். மற்றுமொரு கருவறை மூர்த்தியாக சயன கோலத்தில் ரங்கநாதராக இங்கு காட்சியளிக்கிறார். இத்திருக்கோலப் படிமம் விசயநகரர் காலத்திய கலைப்பாணியாக விளங்குகிறது.
 இரண்டாம் திருச்சுற்றில் பெருந்தேவி தாயார் சந்நிதி பிற்காலச் சோழர் காலத்தியது. தேவியின் திருவுரு தேவராஜனுக்கு ஏற்ற இணை அளவில் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. தேவி பத்மாசனத்தில் பின்னிரு கைகளில் தாமரை மலரும்; முன்னிரு கைகள் அபய வரத முத்திரையில் அருள்புரிகின்றாள். தாயார் சந்நிதியின் முன்மண்டபத்தில் விளங்கும் தூண்களில் காட்டப்பட்டுள்ள குதிரை வீரர்கள் சிற்பங்கள் உயிரோட்டமுடன் இயங்கு தன்மை கொண்ட சிற்பங்களாகும்.
 கருவறை தெய்வத் திருவுருக்கள் மண்டபத் தூண் புடைப்புச் சிற்பங்கள், தனி சிற்பங்கள் ஆகிய வகைகளில் சிற்பங்கள் மிளிர்கின்றன. இறையுருவங்கள், துவாரபாலகர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், அடியார்கள், அரசர்கள், அரசமாதேவியர், ஆடல் மகளிர், புராண மாந்தர்கள், பூதகணங்கள், விலங்கினங்கள், பறவைகள், தாவரஇனங்கள், வாழ்வியல் நிகழ்வுகள், குதிரை / யாளி வீரர்கள் ஆகிய பிரிவுகளில் சிற்பங்கள் வெகுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சாண் முதல் 12 அடி உயரம் உடைய மூலவர் வரை எல்லா அளவுகளிலும் அமைத்து உள்ளனர். கல் மட்டுமின்றி மதிற்சுவர்களின் நாற்திசைகளிலும் சுதையால் ஆன கருட திருவுருவும் , காவலர்களும் , பூதகணங்களும் உள்ளன.
 ஆண்டாள் சந்நிதி மற்றும் மலையாள நாச்சியார் சந்நிதிகளின் முன் மண்டபங்களில் அமைந்துள்ள தூண் புடைப்புச் சிற்பங்கள் ராமாயண, மகாபாரதக் காட்சிகளை கொண்டுள்ளன. பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக்காட்சிகள் தொடர்பான ஒரே காட்சிகள் பலவிடங்களில் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பினும் சிற்பத்தின் வடிவமைப்பு பாணியில் ஒவ்வொரு சிற்பமும் தனித்துவம் பெறுகின்றது. சக்கரத்தாழ்வார், அனந்தாழ்வார், சேனை முதலியார், ராமர் சந்நிதி ஆகிய திருச்சுற்றுக் கோயில்களின் கருவறையில் சிறப்பாக நேர்த்தியுடன் அக்கடவுளரின் தெய்வத்திருவுருக்கள் எழுந்தருளியுள்ளன.
 உற்சவர் மண்டபத்தின் நுழைவாயிலின் தரையில் ஆண் பெண் அடியவர் இருவர் குனிந்து வணங்கும் புடைப்புச் சிற்பம் வைணவத்தின் சரணாகதி உருக்களாக அமைந்துள்ளது. உற்சவர் சந்நிதியின் முன் மண்டபத்தூண்களில் நிறைய அதிகமான யானை உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இதற்கு முக்கிய காரணமுண்டு. இக்கோயிலில் பெருமாள் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததால் யானை உருவங்கள் வெவ்வேறு வடிவமைப்பில், காட்டப்பட்டுள்ளன. கி.பி.15-ஆம் நூற்றாண்டளவில் கோயில் தலபுராணங்களை சிற்பங்களாக வடிப்பதில் விசயநகர காலத்திய அரசர்களுக்கு பெரும் பங்குண்டு.
 கீழ் திருச்சுற்றில் அமைந்துள்ள நரசிம்மர் கருவறையின் முன் அமைந்துள்ள மண்டபத்தூண்கள் உருளை வடிவத்துடன் நீண்ட நெடிய வாய் சோழர்கால கலையுடன் திகழ்பவை. ராமர், கிருஷ்ணர், விஷ்ணு, சங்கநிதி, பதுமநிதி கணங்கள், பாகவத காட்சிகள் ஆகிய உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. தூண்களின் கட்டுப்பகுதியில் மிகச் சிறிய குறுஞ்சிற்பங்களாக பூதகணங்கள் சங்கினை வாயில் வைத்து ஊதியபடி காட்டப்பட்டுள்ளன. சங்கநிதி , கணங்களாக வடிக்கப்பட்டுள்ள இப்பூதகணங்களின் அங்க அசைவுகள் மனமுருகியல் உணர்வுடன் ரசிக்கத்தக்கவை.
 பெருந்தேவி தாயார் சந்நிதியின் இடது புறம் அமைந்துள்ள நீராட்டு மண்டபத்தின் கூரைப்பகுதியில் ராசி சக்கர புடைப்புச் சிற்பங்கள் எழிலார்ந்தவை.
 மூன்றாம் திருச்சுற்றில் உள்ள ராமர் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபம் சிற்பக் கருவூலம் எனலாம். இம்மண்டபத்துத் தூண்கள் கூட்டுத் தூண்களாக அமைக்கப்பெற்று சிறிய பெரிய பூதகணங்கள் மூன்று அடுக்குகளாக காட்டப்பட்டுள்ளன. மேலும் ஆடல் மகளிர் உருவங்கள் ஆடற்கலையை கண்முன் காட்டி நிற்கின்றன. இசைக்கலைஞர்கள், பெண்டிர், அடியார் உருவங்கள் என கண்கொள்ளாக் காட்சி தருகிறது.
 இக்கோயிலின் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் தாங்குதளத்திலும் கூட குறுஞ்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபம், வாகன மண்டபம், திருக்கச்சி நம்பிகள் மண்டபம் ஆகியன விசயநகர காலத்து சிற்பங்களைக் கொண்டுள்ளன.
 விஜயநகரக்காலத்தைச் சேர்ந்த கல்யாண மண்டபமான நூற்றுக்கால் மண்டபத்தில் ரதி, மன்மதன், விஜயநகர பேரரசர் சதாசிவராயர், மனைவி வரதாம்பிகை, அதிகாரி அச்சுதராயர் தனி உருவச் சிற்பங்கள், பிரம்மனின் வேள்வி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. ராமாயணக் காட்சிகள் ஜலக்கிரீடை காட்சி போன்ற பாகவதக் காட்சிகளும் தசாவதாரங்களில் கிருஷ்ணன், ராமன், நரசிம்மர் ஆகிய உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
 இறையுருவங்கள் தவிர்த்து ஏனைய வடிவங்களை பார்த்தால் திருக்கோயில் நலனில் அக்கறை கொண்டிருந்தவரான அழகிய மணவாள ஜீயரின் உருவங்கள் மண்டபத்தின் தூண்கள், போதிகைகளில் இடம் பெற்றுள்ளார்.
 நூற்றுக்கால் மண்டபத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களாக குறவன், குறத்தியர், கோமாளி, தெருக்கூத்துக் கலைஞர்கள் வடிவங்கள், சிருங்கார ரசம் எனப்படும் இன்பலீலைகளைக் காட்டும் வாழ்வியல் சிற்பங்கள் அமைந்துள்ளன. இது கோயிலோடு தொடர்புடைய குடிகளும், குடிகளுக்கான கோயிலுமாய் இத்திருக்கோயில் விளங்கியது எனலாம். உற்சவர் வரதராஜப் பெருமாள் பூதேவி-ஸ்ரீதேவி தாயார் உற்சவர் திருமேனியும் செப்புத் திருமேனிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
 - முனைவர் கோ . சசிகலா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com