பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்

அம்பாசமுத்திரத்திற்குச் சிறிது வடக்கே பிரம்மதேசம். ராஜராஜப் பேரரசர் காலத்தில், வேதம் ஓதுகிற அந்தணர்களுக்கு நிவந்தமாக, அவர்களின் குடியிருப்புக்காகக் கொடுக்கப்பட்ட பகுதி.
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்

தாயமும் தேயமும்
 அம்பாசமுத்திரத்திற்குச் சிறிது வடக்கே பிரம்மதேசம். ராஜராஜப் பேரரசர் காலத்தில், வேதம் ஓதுகிற அந்தணர்களுக்கு நிவந்தமாக, அவர்களின் குடியிருப்புக்காகக் கொடுக்கப்பட்ட பகுதி. "பிரம்ம வித்யைக்காக வழங்கப்பட்ட இடம் அல்லது பங்கு' என்பதே இவ்வூரின் சிறப்பு. பிரம்ம தாயம் என்பதாகவே முதலில் இப்பெயர் இருந்திருக்கவேண்டும். "தாயம்' என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, 1. குறிப்பிட்ட காரணத்துக்காக வழங்கப்படுகிற சொத்து அல்லது பொருள், 2. ஒருவருக்கு இடப்படுகிற உணவு, 3. தந்தையிடமிருந்து பிள்ளைக்கு வருகிற மரபுவழித் தன்மைகள், 4. இயல்பான ஈர்ப்பை உண்டாக்குகின்ற ஒன்று, 5. ஒன்றினைத் தடைப்படுத்துவது போன்ற பொருள்கள் உண்டு. சொத்து, மரபுவழி என்பதன் சாயலாகத்தான், வம்சாவளிப் பங்குதாரர்களைக் குறிக்கும் "தாயாதி' என்னும் சொல் தோன்றியது. பிரம்மதாயம் என்பதே காலப்போக்கில், பிரம்மதேயம் என்றாகிப் பின்னர் பிரம்மதேசமும் ஆகிவிட்டது. "இடம்' என்பதைக் குறிப்பதற்கு, "தேசம்' என்கிற சொல் இருப்பதனால், இந்தப் பெயரும் ஒருவகையில் பொருத்தமே!
 இங்குள்ள கைலாசநாதர் கோயிலை வைத்து, ஊர்ப்பெயருக்கும் காரணம் கூறுகிற செவிவழிக் கதைகள் ஏராளம்.
 ஆதி கைலாயமான அயனீச்வரம்
 அகத்தியருடைய மாணாக்கரான ரோமச முனிவர், பொருநைக் கரையில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வரலாறு நமக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு இவர் வழிபட்ட தலங்களே, "நவ கைலாயங்கள்' என்றழைக்கப்படுகின்றன என்னும் தகவலும் தெரியும். நவ கைலாயங்கள் பட்டியலில், பிரம்மதேசத்தையும் சிலர் சேர்க்கிறார்கள்; நவகைலாயங்களில் பிரம்மதேசமே முதன்மைத் தலம் என்கிறது குற்றாலத் தலபுராணம். பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீ வைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகியவையே நவகைலாயத் திருத்தலங்கள். இந்த ஒன்பது தலங்களும் பொருநை ஆற்றின் நேர்க்கரையிலே இருக்கின்றன.
 பொருநை ஆற்று நீரில் அகத்தியர் தாமரை மலர்களை இட, அவை சென்று எங்கே கரை ஒதுங்கினவோ அங்கெல்லாம் ரோமசர் வழிபாடு செய்தார் என்று பார்த்தால், பொருநை ஆற்றின் நேர்க்கரை ஊர்களே நவகைலாயத் தலங்களாக இருக்கமுடியும். பிரம்மதேசம், பொருநை ஆற்றின் நேர்க்கரையில் இல்லாமல், சற்றே எட்டி, கடனா நதியின் தென்கரையிலே இருக்கிறது. லேசாக மேடிட்ட பகுதி என்பதாலேயே, பொருநை ஆற்று வழிப் போக்குவரத்தும் வணிக ஓசைகளும் இல்லாமல், யாகங்கள் செய்வதற்கும் வேதம் ஓதுவதற்கும், அதே சமயம் கடனா நதியின் நீர்ப்பெருக்கினால் வளம் பெறுவதற்கும் ஏதுவாக, இப்பகுதியானது அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது. அப்படியானால், பிரம்மதேசம் எப்படி நவகைலாயங்களில் ஒன்றாகும் என்கிறீர்களா?
 பொருநை ஆற்றின் வழியே அகத்தியர் இட்ட தாமரை மலர்களுக்குப் பின்னால் தன்னுடைய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், கடனா நதிக் கரையின் பிரம்மதேச இறைவனாரை வழிபட்டாராம் ரோமசர். ஆகவே, இது ஆதி கைலாயம். பிரம்மாவின் வழித்தோன்றலான ரோமசர் வழிபட்டதாலும், நவகைலாயங்களுக்கு இதுவே ஆதித்தலம் என்பதாலும், இத்தலம் "பிரம்மதேசம்' (பிரம்ம = பெரிய, தொடக்க, ஆரம்பகால) என்று வழங்கப்பட்டதாக, இச்செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
 பிரம்மாவின் பெயரால் அயனீச்வரம் (அயன்=பிரம்மா) என்றும், ராஜராஜ மன்னர் வழங்கியதால் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையில், ரோமசருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்தது என்றும் அதனைப் போக்கிக் கொள்ளவே அவர் வழிபாடு செய்தார் என்றும் அதற்கு உதவியதால், பிரம்மஹத்தியைப் போக்கடித்த இத்தலமே பிரம்மதேசம் என்றும், சற்றே அகல்விக்கப்பட்ட கதைகளும் உள்ளன. சிவசைலம் அருள்மிகு சிவசைலநாதரும் திருவாலீச்வரம் அருள்மிகு வாலீச்வரரும் பிரம்மதேசம் அருள்மிகு கைலாயநாதரும் மக்களுக்கு நற்கதி வழங்குவதற்காக கடனா நதிக்கரையில் தோன்றிய சுயம்புச் சிவலிங்கங்கள் என்று கடனா நதி மஹாத்மியம் தெரிவிக்கிறது.
 உயர் பெருந் திருக்கோயில்
 எப்படியாயினும், பிரம்மதேசத்தின் அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயில், பலவிதங்களில் அற்புதமானது. அருள்மிகு கைலாயநாதர், ரோமசருக்குக் காட்சி கொடுப்பதற்காக கடனா நதிக்கரையில் சிவலிங்க வடிவில் எழுந்தருளினார். ஆயினும், இதற்கு முன்னரே, இங்கிருந்த இலந்தை வனத்தில், இலந்தை மரத்தடியில் சுயம்புநாதராக, சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார் இறைவனார். இவரே, இலந்தை நாதர். இலந்தைநாதரை ரோமசர் வழிபட, முனிவருக்கு அருள்வதற்காக, கடனா நதியிலிருந்து வெளிப்பட்டவர் கைலாயநாதர் என்று தோன்றுகிறது.
 - தொடரும்...
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com