புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16

விவிலியத்தின் பழைய ஏற்பாடு பகுதியில் கர்மேல் மலை முக்கியமான இடமாக இடம் பெற்றுள்ளது. இந்த கர்மேல் மலையில் தான் கர்மேல் பர்வதம், எலியா குகை, பாகாய் தோட்டம் ஆகியவை உள்ளன.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16

கர்மேல் மலை, எலியா குகை, சிசரேயா, யோப்பா பட்டணங்கள் 
விவிலியத்தின் பழைய ஏற்பாடு பகுதியில் கர்மேல் மலை முக்கியமான இடமாக இடம் பெற்றுள்ளது. இந்த கர்மேல் மலையில் தான் கர்மேல் பர்வதம், எலியா குகை, பாகாய் தோட்டம் ஆகியவை உள்ளன.
விவிலியத்தில் இஸ்ரேலில் இருந்த முக்கியமான தீர்க்கத்தரிசிகளில் இவரும் ஒருவர்.
இயற்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்களில், எலியாவும் ஒருவர். எந்த ஒரு முன்னுரையும் இல்லாமல் வேதத்திற்குள் திடீரென நுழையும் எலியா தீர்க்கத்தரிசி, கர்த்தருக்காக அதிக வைராக்கியம் காட்டுகிறார். மழையையும், பனியையும் தனது வார்த்தையினால் நிறுத்தி வைத்தவர். அப்போதைய அரசு 24 மணி நேரத்திற்குள் எலியாவை கொலை செய்ய கட்டளை போடப்பட்டது ( ஐ இராஜாக்கள் 19:2). கடவுளால் உயிருடனே பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர் எலியா தீர்க்கத்தரிசி.
மோசே செங்கடலை தனது கோலால் இரண்டாக பிரித்தது போல, தனது கையில் இருந்த சால்வையால் யோர்தான் நதியை இரண்டாக பிரித்தவர் எலியா தீர்க்கத்தரிசி. தான் வாழ்ந்த காலத்தில் 17 அற்புதங்களை செய்தவர். இவரது காலத்தில் சமாரியா (இஸ்ரேல்) நாட்டில் பஞ்சம் வந்தபோது கடவுள் காக்கையை அனுப்பி இவருக்கு அப்பம் கொடுத்து பசியாற்றினார் என விவிலியம் கூறுகிறது. அதேபோல கர்மேல் மலையில் பாகாய் தீர்க்கத்தரிகளுக்கும், எலியாவுக்கும் இடையே நடந்த போட்டியில் எலியா வெற்றி பெற்று பாகாய் தீர்க்கத்தரிசிகள் 450 பேரையும் ஓட ஓட விரட்டி கொலை செய்த மலை இது. (விவிலியத்தில் 1 இராஜாக்கள் 18-ஆம் அதிகாரம்).
எலியா வாழ்ந்த குகை இங்கு உள்ளது. அதற்கு மேல் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. கர்மேல் பர்வம், கர்மேல் மலையின் உச்சியில் உள்ளது. 
பாகாய் தோட்டம் 
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டை போலவே பாகாய் வழிபாடு செய்பவர்களும் இங்கு உள்ளனர். இவர்களுக்கு இது முக்கிய புனித இடமாக கருதப்படுகிறது. உலக புராதன இடங்கள் பட்டியலில் பாகாய் தோட்டம் 2008-ஆம் ஆண்டு ஜூலை சேர்க்கப்பட்டது. ஓர் ஏக்கரில் அழகான தொங்கு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பூத்துக்குலுங்கும் மலர்கள், பசுமையான செடிகளால் பாகாய் தோட்டம் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாகாய் தோட்டத்தில் இருந்து எலியா குகையை எளிதாக பார்க்க முடியும்.
இந்த தோட்டம், மிகவும் புனிதமாக இடமாக கருதப்படுவதால் உணவு பண்டங்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை. முழு சோதனைக்கு பின்னரே இந்த தோட்டத்துக்குள் புனித பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேசியா இங்கு தான் வருவார் என்பது பாகாய் வழிபாடு செய்வோர்களின் முழுமையான நம்பிக்கை.
சிசரேயா பட்டணம் 
இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பட்டணம் இது. ஏரோது மன்னர் இஸ்ரேலை ஆண்டபோது கர்மேல் மலையில் இருந்து தொங்கு பாலம் அமைத்து சிசரேயா பட்டணம் வரை (சுமார் 80 கி.மீ. தூரத்துக்கு) நல்ல தண்ணீரை எடுத்து வந்துள்ளார். இதை பறைசாற்றும் வகையில் இந்த தொங்கும் பாலம் இப்போதும் மத்திய தரைக்கடல் கரையில் சிதலமடைந்த நிலையில் உள்ளது. இயேசுவின் சீடரான சீமோன் பேதுருவிடம் திருமுழுக்கு பெற்றவர் ரோமரான கொர்னேலியஸ். அவர் வாழ்ந்த இடமும் இந்த சிசரேயா பட்டணம் தான்.
யோப்பா பட்டணம் (JOPPA)
விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் வரும் யோனா சரித்திரம் இங்கு தான் நடைபெற்றது. நினிவே மாநகர் மக்கள் நெறிகெட்டவராய் வாழ்ந்து, பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்தனர். ஆகவே, அந்நகருக்கு அழிவு வரப்போகிறது என்று அறிவிக்க, கடவுள் யோனாவை அனுப்பினார். ஆனால் முதலில் கடவுளின் விருப்பத்தை ஏற்க யோனா முன்வரவில்லை. மாறாக, நினிவே நகருக்கு எதிர்த்திசையிலிருந்த தர்சீசுக்கு ஓடிப் போக முனைந்தார். எனவே, யோப்பா துறைமுகம் சென்று அங்கு ஒரு கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணமானார். கடலில் ஒரு பெருங்காற்று வீசியது. கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. இத்தீங்கு ஏற்பட யார் காரணம் என்றறியச் சீட்டுப் போட்டார்கள். யோனாதான் குற்றவாளி என்று தீர்மானித்து, அரைகுறை மனத்தோடு அவரைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்.
(தொடரும்)
- ஜெபலின் ஜான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com