பொருநை போற்றுதும்! 25 - டாக்டர் சுதா சேஷய்யன்

வானதீர்த்தம், காரியாறு மேலணையிலிருந்து பாய்ந்து வருகிற பொருநை நல்லாளோடு, சேர்வலாறு வந்து சேர்ந்துகொள்கிறது.
பொருநை போற்றுதும்! 25 - டாக்டர் சுதா சேஷய்யன்

வானதீர்த்தம், காரியாறு மேலணையிலிருந்து பாய்ந்து வருகிற பொருநை நல்லாளோடு, சேர்வலாறு வந்து சேர்ந்துகொள்கிறது. இந்த இடத்தைத் தாண்டியதும், இயற்கையாக அமைந்த பள்ளத்தாக்கு.
 இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான், வளைந்து நெளிந்து பிரிந்து சேர்ந்து பொருநையாள் விளையாடினாள். பிரிந்து பிரிந்து சேர்ந்ததால், ஆங்காங்கே அகலமும் ஆழுமும் குறைந்து, இடையிடையே பாறைகளைத் தொட்டு விளையாடியபடி இவள் மிளிர்ந்த இந்த இடமே, கல்யாண தீர்த்தம் என்று வழங்கப்பட்டது. இவ்வாறு விளையாடியபின்னர், மலைப் பாறைகளின்மீது படர்ந்து, இடுக்குகளில் சுருண்டு, ஒரு பாறையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக் குதித்து, சுமார் 300 அடிக்குக் கீழே சரிந்தாள். இந்த அருவியானது, நேர்ச் செங்குத்தாக இருக்கவில்லை. ஆனால், பாறையிலிருந்து பாறை என்பதாக, அடுக்கடுக்காகவும், பாறைகளுக்கு இடையில் நிறைய இடுக்குகளோடும் அமைந்தது. இதனால், மேலிருந்து கீழே விழுகிற நீரின் வேகமும் குதிப்பும் புரட்டலும் அதிகமாக இருந்தன. இப்படிப்பட்ட புரட்டலில்தான், வ.வே.சு.ஐயரைத் தனது மடியில் உறங்க வைத்துக் கொண்டாள் பொருநையாள்.
 மேலே குறிப்பிட்டவாறு, நுப்பும் நுரையுமாகக் கீழே விழுந்த அருவிக்குக் கல்யாண தீர்த்த அருவி, பாபவிநாச அருவி, தாமிரவருணி அருவி, பாபநாசத் தீர்த்தம், அகத்தியர் அருவி, கல்யாணி அருவி (கல்யாணியான பார்வதி நீராடுகிற அருவி), திருமணப் புண்ணிய தீர்த்தம் என்று பலவிதமான பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. 300 அடி உயரத்திலிருந்து கீழே விழும்போது, பாறைப் பிளவுகள் அதிகமான ஒரு பகுதியில், இரண்டாகப் பிரிந்து, ஆனால், கீழே தரையைத் தொடுவதற்கு முன்பாகவே ஒன்றாகச் சேர்ந்து இந்த வீழ்ச்சி இருந்துள்ளது. பிரிந்து சேர்ந்த கடைசிப் பகுதி மட்டும், 90 அடிக்குக் கீழே விழுந்தது. ஆற்றின் பிரவாகம் முழுமையாக இருந்த காலங்களில், இரண்டு பிரிவுகளும் கலந்து, பிரம்மாண்டமான நீர்ச் சுவர்போல் காணப்படுமாம். தரையைத் தொடும்போது, மூன்று கிளைகளாகப் பிரிந்து பொருநையாள் பாய்ந்துள்ளாள்.
 மலைப் பகுதிகளில் பாய்ந்து தவழ்ந்து, ஓடிப் பெருகி, வளைந்துச் சுழிந்து நீண்டு நெளிந்து, சமவெளிகளைத் தொடுவதற்காகப் பேரொலியுடனும் பேரழகுடனும் உயரத்திலிருந்து கீழே விழுகிற தாமிராவைக் கண்ட நம்முடைய முன்னோர், இந்த நீர்வீழ்ச்சியில் நீராடினால், பாவங்கள் தொலைவதை உணர்ந்தனர். எனவே இந்த இடத்திற்கு பாபவிநாசம், பாபநாசம், பாவநாசம் என்றே பெயர்கள் சூட்டினர் (தமிழில் "பாவம்' என்று வழங்கும் சொல், வடமொழியில் "பாபம்' எனப்படும்).
 மூன்று கிளைகளாகப் பிரிந்து பாய்ந்தபோது, மூன்றாவது கிளையின் கரையில், அருவியிலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாம் அருள்மிகு பாபவிநாசர் திருக்கோயில். பெரிய அருவியாக இருந்தாலும், பாபநாசம் ஊருக்குள் வந்தால்தான், இதனை முழுமையாகக் காணமுடியும் என்பதைக் கீழ்க்காணுமாறு பதிவிடுகிறார் ஜகதீச ஐயர்: பாபநாசம் சென்றாலொழிய இவ்வீழ்ச்சி முற்றும் கண்ணுக்குத் தெரிய முடியாதபடி, பாறைகளும் குன்றுகளும் இயற்கையாக ஏற்பட்டிருக்கின்றன. "பாபவிநாசர் கோயில், அதன் மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள் ஆகிய யாவும் சேர்ந்து "பாபநாச மஜரா' ஏற்பட்டது' என்கிறார் ஜகதீச ஐயர் (மஜரா என்றால் குறுங்கிராமம் என்று பொருள்).
 பாபநாசம் கீழணை கட்டப்பட்டபிறகு, நீர் வரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, கல்யாண தீர்த்தம், பாபநாச அருவி, கீழே பாய்ந்த கிளை நீரோட்டங்கள் ஆகியவற்றின் போக்குகளும் பரிமாணங்களும் நிறையவே மாறிவிட்டன. கீழணையின் கிழக்குக் குழை ஒன்றின் நீர், ஏற்கெனவே பாறைப் பிளப்புகளில் இறங்கிக்கொண்டிருக்கும் நீரோட்டத்தில் கலக்கிறது. இவ்வாறு கலந்துவிழும் நீரோட்டத்திற்கு "மேலருவி' அல்லது "அகத்தியர் அருவி' என்று மராமத்துத் துறையினர் பெயர் சூட்டிவிட்டனர். கீழணையின் மேற்குக் குழைகளின் நீர், புனல் மின் நிலையம் சென்று, மின் உற்பத்திக்குத் துணை புரிந்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு கீழே விழும் நீர், மேலருவிக்குக் கீழே இருக்கிறது; "கீழருவி' என்றும் "பாபநாச அருவி' என்றும் அழைக்கப்படுகிறது.
 இதே பகுதியில்தான், அகத்தியருக்கு ஆதிப்பரம்பொருள் தம்முடைய திருமணக் கோலம் காட்டினார். ஆகவேதான், அகத்தியரோடும் திருமணக் காட்சியோடும் தொடர்புள்ள பெயர்கள். பழைய அருவி சமவெளியைத் தொட்ட இடத்தில், அகத்தியர் கோயிலிருக்கிறது. இந்தப் பகுதிக்கு இப்போது பழைய பாவநாசம் என்று பெயர். இப்போதும், சிவபெருமானுடைய வாக்கையும் செயலையும் நிறைவேற்றும்பொருட்டு, ஆண்டுதோறும் சித்திரைத் திருமண விழாவின்போது, அகத்தியர் கோயிலிலிருந்து அகத்தியத் திருவுருவச் சிலை, பாப விநாசர் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 அருள்மிகு உலகம்மை உடனாய பாபவிநாசர் திருக்கோயில், அளவில் பெரியது. கோயிலுக்கு முன்னர், பணிந்தோடுகிற பொருநையும் பொருத்தமான படித்துறையும் பக்தர்களின் மனங்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளன. திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர்த் தெருவழகு என்பதுபோல், "பாவநாசப் படி அழகு' என்றே சொலவடை உண்டு. "பொதும்பர் நிழல் குளிர் தூங்கப் பொலிந்த படித்துறை' என்று பாடுகிறார் புலவர் ஒருவர். பாவங்களை மட்டுமல்ல, நீரில் கலந்துள்ள மலை மூலிகைகளால், உடல் பிணிகளையும் ஆறும் தீர்த்தமும் போக்கவல்லன. மார்கழி மாதந்தோறும் கங்காதேவி இங்கு வந்து தங்கி விடுவதாக முக்களாலிங்கனார் இயற்றிய பாபநாசத் தலபுராணம் தெரிவிக்கிறது. ஆக, பாபநாசத் தீர்த்தத்தில் நீராடினால், காசியில் நீராடிய புண்ணியம் கிட்டும். சுவாமிக்குப் பாவநாசர், பழமறைநாதர், முக்களாலிங்கர், பரஞ்சோதி, வைராஜர் என்றெல்லாமும் திருநாமங்கள்.
 -தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com