பூமி பூஜைக்கு அருள் புரியும் செவலூர் ஸ்ரீபூமிநாதர்!

செவ்வலூர் அதாவது செவ்வல் + ஊர் செவலூர் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் சிவந்த மண்ணை உடைய ஊர் என்பதால் செவ்வலூர் என்ற பெயர் பெற்றது என அறியலாம்.
பூமி பூஜைக்கு அருள் புரியும் செவலூர் ஸ்ரீபூமிநாதர்!

செவ்வலூர் அதாவது செவ்வல் + ஊர் செவலூர் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் சிவந்த மண்ணை உடைய ஊர் என்பதால் செவ்வலூர் என்ற பெயர் பெற்றது என அறியலாம். செவலூரின் தெற்கில் ஊரணியின் வடகரையில் அருள்மிகு ஆரணவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூமிநாதர் கோயில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இவ்வாவலயம் செயல்பட்டு வருகிறது.
 இந்த கோயிலானது சுவாமி கோயில், அம்மன் கோயில் என தனித்தனிக் கோயில்களாக கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன. சுவாமி கோயிலானது கருவறை அர்த்த மண்டபம், இடைக்கட்டு, மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. கோயில் கட்டட அமைப்பை பொருத்தவரை உபானம், ஜகதி, முப்பட்டைக் குதம், பட்டி, வேதிகை சுவர், போதிகை, பிரஸ்தரம், யாளிவரி என்ற அமைப்புடன் கருவறை முதல் மகாமண்டபம் வரை இவ்வமைப்பே காணப்படுகிறது.
 கருவறையில் தெற்கு மேற்கு, வடக்கு பக்கங்களில் மொத்தம் மூன்று தேவகோட்டங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு தேவகோட்டங்கள் உள்ளன. கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் மட்டும் தட்சிணாமூர்த்தி உள்ளார். மற்றவைகளில் தெய்வ உருவங்கள் இல்லை. சுவரில் ஆங்காங்கே அரைத்தூண்கள் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் ஒவ்வொன்றும் கால், குடம், கலசம் பலகை என்ற அமைப்பினை உடையதாக உள்ளது. போதிகைகள் பிற்கால பாண்டியர் காலத்து போதிகைகளாகும்.
 கருவறையில் லிங்கமூர்த்தியாகக் காணப்படும் மூலவர், 16 பட்டைகளை உடைய பாணலிங்கமாகும். இக்கோயிலின் பழைய மூலவர் சிதிலமடைந்ததின் காரணமாக அதை எடுத்து வைத்துவிட்டு புதிதாக லிங்கம் செய்து வைக்கப்பட்டு தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது. ஆவுடையார் வட்டவடிவமுள்ளது. சுவாமி கோயிலுக்கு வடகிழக்கில் பைரவருக்குத் தனிக்கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
 சுவாமி கோயில் வசந்த மண்டபத்தில் நந்தியும், நந்திக்கு அடுத்து பலிபீடமும் உள்ளது. பின்புறத்தில் தென்மேற்கு மூலையில் மூலப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலப்பிள்ளையார் சுமார் 9, 10 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது கோயிலின் காலத்திற்கு முற்பட்டவராக காணப்படுகிறார்.

ஆரணவல்லி அம்மன் கோயில் சுவாமி கோயிலுக்கு வடபுறத்தில் தனிக்கோயிலாக கிழக்கு பார்த்து கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் ஆகியவைகளைக் கொண்டதாகும். அம்மன் கோயில் உபபீடம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், பட்டி, சுவர், பிரஸ்தரம் ஆகியவைகளை கொண்டதாகும். இது கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.
 சுப்பிரமணியர் ஆறுமுகங்கள், பன்னிரு கைகள் உடையவராக மயில் மீது அமர்ந்துள்ளார். வலப்புறத்தில் தெய்வானை, இடப்புறத்தில் வள்ளி ஆகியோருடன் அமைந்துள்ளார். சண்டிகேசுவரர் கருவறையின் வடபுறம் கருவறையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.
 மகாமண்டபத்தின் வாசற்படிக்கு தென்புறத்தில் சூரியன் மேற்கு பார்த்து நிற்கிறார். வலது இடது கைகளில் தாமரை மொட்டுகள் உள்ளன. இக்கோயிலில் சந்திரன் கிடையாது. வாஸ்து நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இடம் வாங்க, விற்க, புதிதாக பூமிபூஜை போடுவதற்கு முன்பாக இங்குள்ள பூமிநாதரை வேண்டி அர்ச்சனை செய்து அந்த வேலையை தொடங்கினால் தடையில்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம்.
 வழித்தடம்: புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் செவலூர் உள்ளது. அங்கிருந்து தென்புறத்தில் 3 கி.மீ. தொலைவில் கோயிலை அடையலாம்.
 தொடர்புக்கு- 98426 75863 / 97512 39014.
 - பொ.ஜெயச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com