தேவன் மனிதருக்கு கற்பித்த ஜெபம்

கடவுளால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளும் இறைவனோடு தொடர்பு கொள்கின்றன.
தேவன் மனிதருக்கு கற்பித்த ஜெபம்

கடவுளால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளும் இறைவனோடு தொடர்பு கொள்கின்றன. மனிதரும் இறைவனோடு தொடர்பு கொள்வது ஜெபம் எனப்படும். மனிதர் தன்னைத் தாழ்த்தி முழங்காலில் நின்று கண்களை மூடி ஜெபிக்கின்றனர். காலங்காலமாக மனிதர் இறைவனிடம் ஜெபம் என்ற தொடர்பால் இறைவனோடு பேசுகின்றனர். தெய்வமும் மனிதர் ஏறெடுக்கும் ஜெபங்களை கேட்கின்றார். அவரவர் ஜெபங்களுக்கு பதில் அளிக்கின்றார்.
ஜெபத்தின் மூலம் மனிதர் இறைவனின் அருள் ஆசீர்வாதத்தைப் பெற்று நோய் நீங்கி வறுமை நீங்கி, துன்பம் நீங்கி கடவுளின் அன்பு பெற்று நல்ல இன்ப வாழ்வை பெற்றுக் கொள்கின்றனர். எல்லா மக்களும் ஜெப தொடர்புக் கொண்டு இறைவனிடம் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர்.
இயேசு ஆண்டவர், இப்பூமியில் வாழும்போது அவர் அதிகமாக செலவழித்த நேரம் ஜெப நேரமே. வனாந்திரத்திலும் மலை உச்சியிலும் தெய்வ ஆலயத்திலும் அவர் ஜெபித்தார். மனிதருக்கு ஜெபம் அவசியம்! ஜெபம் இல்லா வீடு கூரையில்லா வீடு என்ற பழமொழி அந்நாளில் கூறப்பட்டது. இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் ஜெபிக்க கற்றுத் தரும்படி வேண்டினர். இயேசு அவர்களுக்கு ஒரு ஜெபத்தை கற்றுக்கொடுத்தார். இந்த ஜெபம் (Lords Prayer) இயேசு கற்பித்த ஜெபம் என எல்லா இடங்களிலும் வீடுகளிலும் ஆலயத்திலும் எல்லா கூட்டங்களின் இறுதியிலும் தனி மனிதர் ஜெபத்தின் இறுதியிலும் சொல்லப்படுகிறது. 
இயேசு கற்பித்த ஜெபமானது: " நீங்கள் ஜெபம் பண்ண வேண்டியவிதமாவது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தபடுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல் எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று ரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே" - ஆமேன் (மத்தேயு 6:9-13)
இந்த ஜெபம் ஒரு மந்திரம்போன்று இன்று உலகமெங்கும் ஜெபிக்கப்படுகிறது. அவர் ஒரு தந்தையின் அருள் உள்ளவர். எனவே, அவர் எல்லாருக்கும் அப்படி அப்பா, தன் பிள்ளையின் பேரில் எவ்வளவு அன்பு, பரிவு, பாசம், அர்ப்பணிப்பு தியாகம் அக்கறையுள்ளவராக இருக்கிறாரோ அப்படி, நம் இறைவன் நம் பேரில் அன்புள்ளவர். அப்பா- மகள் உறவு, நம் இறை உறவு! சக மனிதரை மன்னிக்கவும் நம் உணவு தினமும் அளிக்கப்படவும் வேண்டும். இறைவனின் திட்டம் நம்மில் செய்யப்பட்டு நாம் சுகமாக வாழ, இயேசு ஆண்டவர் இந்த ஜெபத்தை ஜெபிக்கும்படி இது நம் வாழ்வின் மந்திரமாக ஜெபிக்கும் போதெல்லாம் இயேசு கற்று தந்த ஜெபத்தை ஜெபிப்போம். நம் ஜெபம் இறைவனால் கேட்கப்பட்டு இறைவனின் ஆசி என்ற அருள் பதில் பெற்று இப்பூவுலகில் இன்பமாக வாழ்வோம்.
- தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com