அகிலம் காத்தருளும் ஆட்சீசுவரர்!

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் - மேல்மருவத்தூரை அடுத்துள்ளது அச்சிறுபாக்கம்.
அகிலம் காத்தருளும் ஆட்சீசுவரர்!

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் - மேல்மருவத்தூரை அடுத்துள்ளது அச்சிறுபாக்கம். இங்கு, தொண்டை நாட்டில் அமைந்துள்ள 32 தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது, அருள்மிகு இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் பிப்ரவரி 10 -ஆம் தேதி நடைபெறுகின்றது.
 புராண வரலாறு: பாண்டிய மன்னன் ஒருவர் முல்லைக் கொடிகள் சூழ்ந்த இப்பகுதியில் செல்லும் பொழுது பொன் நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அதனைத் துரத்திச் சென்றான். அந்த உடும்பு சரக்கொன்றை மரத்தில் இருந்த பொந்தில் புகுந்து கொண்டது. அரசனது ஆணைப்படி காவலர்கள், அம்மரத்தினை வெட்ட அம்மரத்திலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. இதனை "திருநேத்திரதாரி' என்ற முனிவரிடம் கூறி இறைவனுக்கு திருக்கோயில் எழுப்பக் கூறினான். அம்முனிவர் தம்மை ஆட்கொண்ட சுயம்புவடிவான இறைவனுக்கு என ஒரு கருவறையும், மன்னன் வழிபட உமையாட்சீசுவரர் சந்நிதியையும் எழுப்பினார். ஆக, இத்திருக்கோயிலில் இறைவனுக்கு இரண்டு சந்நிதிகள் அமைந்துள்ளன.
 சுயம்புவடிவாக அருள்புரியும் இறைவனுக்கு ஆட்சீசுவரர், ஆட்சிகொண்ட நாதர், பார்க்கபுரீசுவரர் எனவும், இறைவி இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை எனவும் போற்றப்படுகின்றனர். மற்றொரு சந்நிதியில் அருள்புரியும் இறைவனுக்கு உமையாட்சீசுவரர் என்றும், அம்பிகைக்கு உமாதேவி, மெல்லியலாள் என்றும் திருநாமங்கள். உமையாட்சீவரருக்கு பின்புறம் கருவறை சுவரில் திருமணக் கோலத்தில் இறைவனும், இறைவியும் காட்சியளிப்பது சிறப்பு. அகத்தியருக்கு திருமணக் கோலத்தோடு இறைவன் காட்சி தந்த திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
 திரிபுராந்தகர்: சிவபெருமான் எடுத்த பல வடிவங்ளில் திரிபுராந்தகர் வடிவம் சிறப்பானது. தேவர்களுக்கு துன்பம் அளித்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழிக்க சிவபெருமான் தேரில் செல்லும் முன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் தேரின் அச்சு முறிந்தது. இதனை அருணகரிநாகர் பெருமான் தனது திருப்புகழில் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த "அதிதீரா" எனப் போற்றுவதைக் காணலாம். ஒரு செயலை தொடங்கும் முன்னர் விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும் என்ற விதியினை உலகத்தாருக்கு உணர்த்தவே சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளார் என்பர்.
 இலக்கியச் சிறப்பு: இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை திருஞானசம்பந்தர் பெருமான் போற்றி பதிகம் (முதல் திருமுறை) பாடி அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவில் "அச்சிறுபாக்கம் ஆட்சிகொண்டவரே" எனப் போற்றுவதைக் காணலாம். அவர் அருளிய பதிகங்களில் "ஏறுமொன்றேறி" எனத் தொடங்கும் 7 -ஆவது பாடலில் இத்தலவரலாற்றினை குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். மற்றும் அவர் அருளிய திருசேத்திரக் கோவை, திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப்பதிகத்திலும், சேக்கிழார் பெருமானின் திருஞானசம்பந்தர் புராணத்திலும் இத்தலத்தினைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் உமாபதி சிவாச்சாரியார், வள்ளலார் பெருமானும், இத்தலத்தினை போற்றுகின்றனர்.
 திருக்கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில் வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுர திருப்பணி செய்யப்பட்டு வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது. நுழைவு வாயிலை அடுத்து தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. தேவி, கரண்ட மகுடம் அணிந்து மேலிரு கரங்களில் தாமரை - அல்லி (நீலோத்பவம்) மலர்களைத் தாங்கியும், முன் இரு கரங்கள் அபய - வரத முத்திரைத் தாங்கி அருள்புரியும் அழகியவடிவினைக் கண்டு வணங்கி மகிழலாம்.
 கோபுர வாயில் எதிரே பலிபீடம், கொடி மரம் அடுத்து நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இக்கோயிலின் உள் திருச்சுற்றில், சித்தி புத்தி விநாயகர், நால்வர், பரவையார் - சுந்தரர் சந்நிதி, அறுபத்து மூவர், ஸ்ரீநிவாசப் பெருமாள் - தாயார், உமையாட்சீசுவரர் சந்நிதி, அவரை நோக்கி யோகநிலையில் அமைந்த நந்தி, ஆகியவை அமைந்துள்ளன.
 கருவறை சுவரில் சண்டேசுவரர், கண்ணப்பர் வரலாறு, யானை வழிபடும் காட்சி போன்ற புராண வரலாற்றைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன.
 வெளித்திருச்சுற்றில் கல்யாண மண்டபம், சனீசுவரர் - சித்தரகுப்தர் சந்நிதிகள், தலவிருட்சமான கொன்றைமரம், அதன் கீழே திரிநேத்தரரி முனிவர் வழிபடும் காட்சி, சிம்மதீர்த்தம், யாகசாலை அமைந்துள்ளன.
 கல்வெட்டுகள் வரலாறு: இக்கோயிலில் கருவறை சுவரில் காணப்படும் இருபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இக்கோயிலின் வரலாறு, எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. இக்கோயிலுக்கு சோழமன்னர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் தானமளித்து சிறப்பான வழிபாட்டிற்கு தொண்டு செய்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து களத்தூர்க் கோட்டத்து ஸ்ரீமதுராந்தக சதுர்வேதி மங்கலத்து தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்" என்று ஊர்பெயர் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் தொன்மையானது முதலாம் ராஜேந்திர சோழனது (கி.பி. 1015) ஆகும்.
 உற்சவங்கள், வழிபாடுகள்: இத்திருக்கோயிலில் பௌர்ணமி, பிரதோஷ நாள்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும், கார்த்திகை நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாதந்தோறும் இறைவன் திருவீதி எழுந்தருளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரைப் பெருவிழாவின் 7 -ஆம் நாள் இறைவன் தேரினின்றும் இறங்கி திரிநேத்ரதாரி முனிவருக்கு காட்சியளிக்கும் "கொன்றையடி சேவை' என்ற வைபவமும் சிறப்பானதாகும். 11 -ஆம் நாள் ஆட்சீசுவரர் இளங்கிளி அம்மையோடு அருகில் உள்ள பெரும்பேறு தலத்திற்கு எழுந்தருளி முருகப்பெருமானுடன் அகத்தியருக்கு காட்சியளிக்கும் பைவமும் சிறப்பான ஒன்றாகும்.
 கும்பாபிஷேகம்: இவ்வாலயத்தில் தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்தினருடன் இவ்வூரில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இணைந்து திருப்பணி வேலைகளை மேற்கொண்டு பணிகள் முடிவுற்றுள்ளன. கும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 10 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது.
 தொடர்புக்கு: 99440 70920 / 94432 09267 / 98423 09534.
 - கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com