தேடி வந்து நலம் தரும் தேவன்

"நலமா... சுகமா... எப்படி இருக்கின்றீர்கள்?' என நலம் விசாரிப்பதும் "நலமாக இருக்கின்றேன்' என பதில் அளிப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
தேடி வந்து நலம் தரும் தேவன்

"நலமா... சுகமா... எப்படி இருக்கின்றீர்கள்?' என நலம் விசாரிப்பதும் "நலமாக இருக்கின்றேன்' என பதில் அளிப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம். நோய் வந்த போது நாம் போய் பார்த்து நலம் விசாரித்து தைரியம் சொல்வது நமது வழக்கம். பலர் வந்து நலம் விசாரித்தாலே பாதி நோய் நீங்கி சுகம் அடைவது உண்டு. நலம் விசாரிப்பது நமது உறவை, நட்பை, பாசத்தை வெளிப்படுத்தும் நல்ல செயல்.
 வேதாகமத்தில் தேடிச் சென்று சுகம் அளித்த இயேசு ஆண்டவரைப் பற்றிய நிகழ்ச்சி இருக்கிறது. எருசலேம் நகரத்துக்கு ஐந்து பிரதான வாசல்கள் உள்ளன. அதில் ஒரு வாசலின் பெயர் ஆட்டு வாசல். அதன் அருகே பெதஸ்தா என்ற பெயர் கொண்ட ஒரு குளம் இருந்தது. அக்குளத்தைச் சுற்றி படிகள் கட்டப்பட்டிருந்தன. அப்படிகளில் நோயால் துன்புற்றவர்கள் படுத்திருந்தனர். அக்குளத்தின் சிறப்பு என்னவென்றால், இரவோ, பகலோ, நடு இரவோ எதுவாக இருந்தாலும் அச்சமயம், தேவதூதன் குளத்தைக் கலக்குவான். குளத்தின் நீர் கலங்கும் , கொப்பளிக்கும். அப்பொழுது நோயாளிகள் உடனே குளத்தில் இறங்கி குளிப்பர். அதில் முதலில் குளிப்பவர் எவராக இருந்தாலும், அவர் எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும் முற்றிலும் சுகம் பெறுவார். இது ஓர் அற்புத குளம்!
 எருசலேமுக்கு வந்த இயேசு தம் சீடருடன் அக்குளம் இருக்குமிடத்திற்குப் போனார். குளத்தைச் சுற்றி பார்வையற்றோர், கை, கால்கள் முடமானவர்கள் படுத்திருந்தனர். அவர்களின் நோக்கம் குளம் எப்போது கலக்கப்படும் என்பதும் அதில் முதலில் இறங்குவது தாங்களாக இருக்கவேண்டும் என்பதே!
 இயேசு அக்குளத்தைச் சுற்றி வந்தார். முப்பதெட்டு வருடங்களாக வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனைக் கண்ட இயேசு , அவன் வெகு காலமாய் வியாதியுடன் போராடுவதை அறிந்தார். அவனை நோக்கி, "" சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?'' என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன் ""ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போவதற்குள்ளாகவே வேறொருவன் குளத்தில் இறங்கி விடுகின்றான்'' என்றான்.
 இயேசு அவனிடம், ""எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட!'' என்றார். உடனே அந்த மனிதன் குணமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:6-9)
 முப்பதெட்டு ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்தவனை இயேசு தாமே அவன் துன்பத்தை அறிந்து தேடி வந்து சுகம் அளித்தார். நாம் கேட்பதற்கு முன்னரே இயேசு ஆண்டவர் நம் நிலையறிந்து உதவி செய்வார். நாம் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் உதவி அளிப்பார். குணமாக்குவார். நம் துன்பத்தையும் வறுமையையும் நீக்குவார்.
 - தே. பால் பிரேம்குமார்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com