குண்டனி சக்தி அருளும் குண்டலீஸ்வரர்!!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வெண்பாக்கம் கிராமத்தில், தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூன்று வகையிலும் சிறந்து
குண்டனி சக்தி அருளும் குண்டலீஸ்வரர்!!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வெண்பாக்கம் கிராமத்தில், தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூன்று வகையிலும் சிறந்து விளங்கிய ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ குண்டலீஸ்வரர் திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையானது.
 தொண்டைவள நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான திருக்கச்சூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்கு மேற்கிலும், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு மேற்கிலும் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வெண்பாக்கம் கிராமமாகும். இந்த ஊரின் பழைமையான பெயர் கல்வாடி என்பதாகும். இவ்வூரின் கிழக்கே கல்லடி மலை எனும் சிறப்பு வாய்ந்த அறியவகை மூலிகைகள் நிறைந்த மலை உள்ளது. இம்மலையில் தேவர்களும், ரிஷிகளும், சித்தயோகிகளும் தவமியற்றியுள்ளனர்.
 இந்த மலையடிவாரத்தின் அருகே உள்ள ஏரியை மழைக்காலத்தில் பலப்படுத்த மராமத்துப்பணிகள் செய்யும்போது பூமிக்கு அடியில் சிவலிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அடித்தளமும் சுவர்களும் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. இத்திருக்கோயில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.
 இந்த ஊருக்கு செல்லும் வழியில் கொளத்தூர் என்ற கிராமத்தில் அகத்தியரால் துளசியால் பூஜிக்கப்பட்ட துளசீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு அகத்தியர் மூலிகை ஆராய்ச்சி செய்துள்ள தகவலும் தெரிய வருகிறது.
 வெண்பாக்கம் ஸ்ரீ குண்டலீஸ்வரரும், கொளத்தூர் துளசீஸ்வரரும், திருக்கச்சூர் மருந்தீஸ்வரரும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதும் சிறப்பாகும்.
 மார்கண்டேய புராணப்படி, எமனைக்கண்டு பயந்து 16 வயது பாலகன் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டித் தழுவிக் கொண்டு பரமனை துதித்த ஸ்தோத்திரம் ஸ்ரீ சந்திரசேகர அஷ்டகம் எனப் பெயர் பெற்றது. அதில் ஆறாவது ஸ்லோகத்தில்
 "குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹணம்'" என்று வருகிறது. நாகத்தை காதில் வளையமாக அணிந்தவன் பரமேஸ்வரன் என்பது பொருள்படுகிறது.
 குண்டலினி யோகத்தில் கூறப்படும் சூக்ஷ்ம நாடியில் செல்லும் சர்ப்பமும் அந்த குண்டலினி தேவதை தலையின் உச்சியில் சதாசிவனுடன் ஐக்யம் ஆவது எல்லாம் இவ்வாறே என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே, ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் சுவாமியை தரிசித்து முக்கியமான ஜீவபிரம்ம ஐக்யம் அடைய முடியும். ஏரிக்கரை அருகிலேயே புதியதாக கோயில் கட்டப்பட்டுள்ளது.
 கருவறை : கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் குண்டலீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
 அம்பிகை சந்நிதி : தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகை யோகாம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
 நந்திமண்டபம் : சிறிய நான்குகால் மண்டபத்தில் நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார். விநாயகர் சந்நிதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர் சந்நிதி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரஹ மண்டபம், தனிச் சந்நிதிகளாகவும் அமைந்துள்ளது. கோஷ்டங்களில் தெற்கில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மஹாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் அமைய உள்ளனர்.
 பரிகாரங்கள்: திருக்கோயில் அருகிலுள்ள குண்டலி தீர்த்தக் குளத்தில் நீராடினால் குட்டநோய், சரும நோய்கள் குணமாகும். திருமணத் தடைகள் நீங்கும். புத்திரப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் குறைகள் அகன்று குழந்தை பாக்கியம் கிட்டும். கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கி மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமும் ஈடுபாடும் ஏற்பட்டு மேன்மை பெறுவர்.
 இச்சிவாலய வளர்ச்சியிலும், குடமுழுக்கு வைபவத்திலும் நாமும் பங்கேற்போம். வளமும் நலமும் பெற்று நீடுவாழ எம்பெருமான் ஸ்ரீ குண்டலீஸ்வரர் திருவருள் கூட்டுவார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
 பிப்ரவரி 22 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி பிப்ரவரி 24 -ஆம் தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 பேருந்து வசதிகள் : சிங்கபெருமாள் கோயில் இருந்து தனியார் சிற்றுந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சென்று வருகிறது. தாம்பரத்திலிருந்து வெண்பாக்கம் செல்ல அரசு பேருந்து தடம் எண். 500 குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகிறது.
 தொடர்புக்கு : 93806 76799 / 94447 07073.
 - க. கிருஷ்ணகுமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com