கல்லுவயல் ஸ்ரீகண்டீஸ்வரர்!

கல்லுவயல் ஸ்ரீகண்டீஸ்வரர்!

ஒரு கோயிலை பார்க்கும் போது அதில் உள்ள கல் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் மற்றும் பண்டை ஓவியங்கள் அக்கோயிலின் தல வரலாற்றை எடுத்துரைக்க உதவுகிறது.

ஒரு கோயிலை பார்க்கும் போது அதில் உள்ள கல் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் மற்றும் பண்டை ஓவியங்கள் அக்கோயிலின் தல வரலாற்றை எடுத்துரைக்க உதவுகிறது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வைப் பிராட்டியாரின் நல்லுரையாகும். அறம் காத்த பண்டைத் தமிழ் மன்னர்கள் அறச்சின்னங்களாக ஆலயங்களை எழுப்பி, தத்தம் இயல்பிற்கேற்றவாறு பொன்னும் பொருளும் வழங்கி அவைகளைப் பண்புக் களஞ்சியங்களாக உருவாக்கி வைத்துள்ளனர். இப்படிப் பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம்; அதைவிட இன்னும் வெளி உலகிற்கு வராத சில கோயில்கள் சிதிலமடைந்து இருக்கின்றன. அதில் ஒன்று தான் கண்டீஸ்வரமுடையார் திருக்கோயில்.
 இவ்வாலயம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் தொலையானூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பெரிய கல்லுவயலில் அமைந்துள்ளது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதைப் போல கண்டீஸ்வரமுடையார் கோயில் சின்னஞ்சிறிய கோயிலாக இருப்பதாலும் சுமார் 1000ஆண்டுப் பழைமையான கட்டடக் கலை மரபைக் கொண்ட முற்காலச் சோழர்கள் கலைப்பாணியில் அமைந்த கோயிலாகவும் சூரக்குடி குறுநில மன்னர்களின் ஆதரவிலும், போற்றுதலிலும் வளர்ந்து வந்த கான நாட்டைச் சேர்ந்த கோயிலாகும்.
 கானநாடு என்பது வடக்கில் வெள்ளாற்றையும் மேற்கில் புதுக்கோட்டை மலைக்கோயிலையும், விராச்சிலையின் கிழக்கு பகுதியையும், கண்ணனூரையும், துருமாவையும், தெற்கில் காரைக்குடியையும், கிழக்கில் நெடுங்குடியையும், மிரட்டு நிலையையும் எல்லையாகக் கொண்ட நாடாகும். தொலையானூர் கானநாட்டின் எல்லையும், கல்வாசல் நாட்டு எல்லையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
 கண்டம் என்றால் கழுத்து, ஈசுபரன் என்றால் சிவன்- கண்டீசுபரன் என்பதற்கு சிவன் தேவர்களுக்கு நன்மை செய்தல் பொருட்டு ஆலகால விஷத்தை (நஞ்சை) உண்டு அது கழுத்தில் தேங்கியதால் கண்டீசுபரர் என்ற பெயர் ஏற்பட்டதாகும். கோயில் அமைப்பு கிழக்குப் பார்த்த கோயிலாகும் இது கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும். கோயிலின் கூரையிலுள்ள போதிகைளும் அரைத்தூண்களின் வடிவமைப்பும் பார்க்கின்றவர்களை ஆச்சரியப்படப் வைக்கிறது. கோயில் கருவறை அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய அங்கங்களையும், உபானம், ஜகதி, முப்பட்டை குழுதம், கண்டம்பட்டி, சுவர், கூரை, அரைத்தூண்கள் ஆகிய கோயில்களுக்குரிய பொதுவான கட்டட அமைப்பைக் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலின் கட்டடக்கலை சோழர்கால அமைப்பாக இருந்தாலும், சோழர்களது கல்வெட்டு ஒன்று கூட இங்கே இல்லை.
 பிற்கால பாண்டிய மன்னர்களின் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள், சடையவர்மன் குலசேகரனின் ஒரு கல்வெட்டும், கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்குரிய விஜயநகர அரசரின் கல்வெட்டும், வன்னியன் சூரக்குடி சிற்றரசர்களது நான்கு கல்வெட்டும் இந்த கோயிலின் பூசைகள், விழாக்களுக்கு கொடுத்த கோயிலின் வனப்பையும், வளத்தையும் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கே அம்மன் கோயில் சிலை இருந்ததாகக் செவி வழிச்செய்தி சொல்லப்படுகிறது ஆனால் இப்போது அந்த அம்மன் இல்லை ஆனால் சின்ன பலிபீடம் இருந்ததை இப்போது உள்ள அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 அதனால் அவ்விடத்தில் முதல் பணியாக அம்மனுக்கு என்று ஒரு தனி சிறிய கோயிலை முதலில் எழுப்புவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாலயத் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு நலம் பெறலாம்.
 வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி காட்டுபாவா பள்ளிவாசல் நிறுத்தத்தில் இறங்கி 1.கி.மீ. செல்லவேண்டும்.
 தொடர்புக்கு: 94435 51794.
 - பொ.ஜெயச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com