ஏற்றமான கிப்லா மாற்றம்

கிப்லா என்னும் அரபி சொல்லின் பொருள் எதிரிலே உள்ள ஒன்று-ஒருவர் முன்னோக்கும் ஒன்று என்பது.
ஏற்றமான கிப்லா மாற்றம்

கிப்லா என்னும் அரபி சொல்லின் பொருள் எதிரிலே உள்ள ஒன்று-ஒருவர் முன்னோக்கும் ஒன்று என்பது. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் அறிவுரைக்காக- ஆலோசனைக்காக முன்னோக்கப்படும் அறிஞர் ஹழரத் கிப்லா என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவார். தற்பொழுது கிப்லா தொழும் திசையை குறிப்பதாக உள்ளது. கிப்லா தொழும்பொழுது முகம் நோக்கும் திசை. ஏற்றமான கிப்லா மாற்றம் குறித்து குர்ஆனின் 2-142, 143, 144 ஆவது வசனங்கள் விவரிக்கின்றன.
 தானியல் ஜெருசலத்தைக் கிப்லாவாக முன்னோக்கி ஒரு நாளில் மூன்றுமுறை தொழுததாக பைபிளில் கூறப்படுகிறது. ùஸமிட்டிக் இன மக்கள் கிழக்குத் திக்கைக் கிப்லாவாக நோக்கி தொழுதனர். ஞாயிறு எழும் திக்கே சிலரின் கிப்லாவாக இருந்தது. சிரியன் கிறித்துவர்கள் கிழக்கு திசையை நோக்கி தொழுதனர். மூசா நபி அவர்களைப் பின்பற்றியோர் கஃபாவை நோக்கி தொழுதனர். இப்ராஹீம் நபி கஃபாவைக் கிப்லாவாக நோக்கி தொழுதார்கள்.
 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று குடியேறிய பின்னும் ஏறத்தாழ 17 மாதங்கள் வரையிலும் அல்லாஹ் அருளியபடி பைத்துல் முகத்தûஸக் கிப்லாவாக நோக்கி தொழுதார்கள் என்பதைப் புகாரி, முஸ்லிம் நூல்களில் காணலாம். கண்ணிய நபி (ஸல்) அவர்களுக்குப் புண்ணிய கஃபாவை நோக்கி தொழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளுக்குள் உருவாகி இருந்தது. ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எண்ணியதை எவரிடமும் வெளிப்படுத்தவில்லை. உள்ளக் கிடக்கையை உணரும் அல்லாஹ் விழைவை வினையாக்கி தருவான் என்ற வேணாவுடன் காத்திருந்தார்கள் காருண்ய நபி (ஸல்) அவர்கள்.
 குறைஷிகளின் கொடுந் தொல்லையினால் மக்காவில் இருந்த பொழுது மாநபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கி தொழ இறைவன் கட்டளையிட்டான் என்று இயம்புகிறார் பராஉபின் ஆஜிப் (ரலி) நூல்- புகாரி. கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் நாடியோரை நேரிய பாதையில் நடத்தாட்டுவான் என்று நவில்கிறது நற்குர்ஆனின் 2-142 ஆவது வசனம். இந்த வசனம் கிப்லா மாற்றப்பட்டால் ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் தொடுக்கும் வினாக்களுக்கு விடுக்கும் விடையாக பகரப்பட்டது. மதீனாவிலிருந்து கஃபாதெற்கிலும் பைத்துல் முகத்தஸ் வடக்கிலும் உள்ளன. அவ்விரு திசைகள் மட்டும் அன்றி கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன என்று உரைக்கிறது இந்த வசனம். திசைகளைப் படைத்தவனே பாராளும் அல்லாஹ் என்பதைப் பாரில் வாழும் மக்களுக்குப் பறைசாற்றுகிறது இந்த வசனம்.
 பைத்துல் முகத்தûஸ கிப்லாவாக நோக்கி தொழுவதை யூதர்கள் அவர்களின் கிப்லாவை நோக்கி தொழுவதாக நோகும் வண்ணம் கொடிய சொற்களால் இடித்துரைத்தான். கிப்லாவாக கஃபா மாற்றப்பட்டதும் எதிர்ப்போரை வலுவிழக்க செய்ததைச் செப்புகிறது 2-143 ஆவது வசனம். இப்ராஹீம் நபி அவர்களின் கிப்லா கஃபா. கஃபா பைத்துல் முகத்தûஸ விட பழைமையானது 144 ஆவது வசனம் உங்கள் முகம் வானின்பால் திரும்பி கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் பார்க்கிறோம். நீங்கள் பொருந்தும் கிப்லாவிற்கு உங்களைத் திருப்புகின்றோம். ஆகவே நீங்கள் தொழுகையின் பொழுது புனித கஃபாவின் திசையில் உங்கள் முகத்தைத் திருப்புங்கள் என்று ஏவியது இவ்வசனம். மாலை அசர் தொழுகையின் முதல் இரு ரக்அத்துகள் முடிந்த நிலையில் அருளப்பட்டது. வடக்கு நோக்கி தொழுத தோழமை நபி (ஸல்) அவர்கள் தெற்கில் திரும்பி தொழுதார்கள். பின்னால் நின்றவர்களும் எதிர்திசையில் திரும்பி தொழுதனர். அப்பள்ளி இரட்டை கிப்லா என்று அழைக்கப்படுகிறது. மதீனாவிற்கும் உஹதுக்கும் இடையில் பனூசலீமுக்கு உரிய நிலத்தில் இப்பள்ளி மஸ்ஜிதுல் கிப்லதைன்- இரு கிப்லாக்கள் உள்ள பள்ளி இன்றும் இருக்கிறது. என் புனித ஹஜ் உம்ரா பயணங்களில் அப்பள்ளியில் நான் தஹிய்யத்துல் மஸ்ஜித் என்னும் காணிக்கை நபில் தொழுகை தொழுதேன். இவ்வாறு கிப்லா மாற்றப்பட்டு தொழுத பழுதிலாத பாசநபி (ஸல்) அவர்களுக்கு ஸாஹிபுல் கிப்லதைன் (இரு கிப்லாக்களைப் பெற்றவர்கள்) என்ற சிறப்பு பெயரும் உண்டு.
 கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் கிப்லா இருப்பதாக இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ. இந்த நபி மொழிக்கு உமர் (ரலி) அவர்கள் அளித்த விளக்கம். மதீனாவில் வாழ்வோர் அவர்களின் வலது கையை மேற்கு பக்கமாகவும் இடது கையைக் கிழக்கு பக்கமாகவும் வைத்துக் கொண்டு கிப்லாவை நோக்கினால் கஃபா கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் இருக்கிறது. அறிவிப்பவர் - நாபிஃ. நூல் - முஅத்தா.
 இந்தியாவிற்கு மேற்கே கஃபா இருப்பதால் இந்த இஸ்லாமியர்கள் மேற்கு நோக்கி தொழுகின்றனர். தென்அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கிழக்கு நோக்கியும் கிரீஸில் வாழும் இஸ்லாமியர் தெற்கு நோக்கியும் தொழுகின்றனர். இதனையே பாரதியார் திக்கை வணங்கும் துருக்கர் என்று பாடினார். கஃபாவைச் சூழ சுற்றி நின்று தொழுகின்றனர். அங்கே திக்கு நோக்கி தொழும் நிலை இல்லை.
 இமாம் ஜமா அத்தில் கூட்டாக தொழும்பொழுது இமாம் எம்முறையில் கிப்லாவை நோக்கி நிற்கிறாரோ அம்முறையில் இமாம் பின்னால் வரிசையில் நின்று தொழுபவர்களும் கிப்லாவை நோக்கி நிற்க வேண்டும். தொழும் பள்ளிகளில் கிப்லாவைக் காட்டும் அடையாளமே மிஃராப். கிப்லாவை நோக்காத தொழுகை நிறைவேறாது. தொழுபவரின் முகம், நெஞ்சு, காலின் பெருவிரல்கள் கிப்லாவை நோக்கி இருக்க வேண்டும். பெரியார் ஜாஃபர் சாதிக் (ரஹ்) இதனைக் கவனமாக கடைபிடித்ததாக அறிவிக்கிறார்கள்.
 புதிய ஊருக்குச் செல்பவர் கிப்லாவைச் சரியாக தெரிந்து தொழ வேண்டும். கேட்டறிய யாரும் இன்றி கிப்லாவை அனுமானித்து தொழுதபின் நோக்கி தொழுதது கிப்லா அல்ல என்று அறிந்தால் மீண்டும் சரியான கிப்லாவை நோக்கி தொழ வேண்டும். வாகனங்களில் செல்லும்பொழுது கிப்லாவை நோக்கி தொழத் துவங்கியபின் வாகனம் வேறு திசையில் திரும்பினாலும் தொழுகை நிறைவேறும். இறந்தவர்களின் முகம் கிப்லாவை நோக்கும் வண்ணம் வைத்தே இறந்தவர்களைப் புதைக்க வேண்டும். கிப்லாவின் திசையில் கால்களை நீட்டுவதோ எச்சில் துப்புவதோ சிறுநீர் மலம் கழிப்பதோ கூடாது.
 கணித்து பணித்த வண்ணம் நோக்கும் நோக்கம் அறிந்து நோக்க வேண்டிய கிப்லாவாம் கஃபாவை நோக்கும் முறையில் நோக்கி நோக்கம் நிறைவேற இறைவனை இடையறாது தொழுவோம். இடையூறு இன்றி இனிதாய் வாழ்வோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com