அயலகத்தாரோடு நயத்தகு நட்பு

அயலகத்தாரோடு அவர் அந்நியராயினும் நன்மை செய்யுங்கள் என்று செம்மறை குர்ஆனின் 4-36 ஆவது வசனம் செப்புகிறது. இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் அயலகத்தார் உறவினராகவும் இருக்கலாம்.
அயலகத்தாரோடு நயத்தகு நட்பு

அயலகத்தாரோடு அவர் அந்நியராயினும் நன்மை செய்யுங்கள் என்று செம்மறை குர்ஆனின் 4-36 ஆவது வசனம் செப்புகிறது. இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் அயலகத்தார் உறவினராகவும் இருக்கலாம். உறவினர் அல்லாதவராகவும் இருக்கலாம். அதனால்தான்அந்நியராயினும் என்றுஅழுத்தம் கொடுக்கப்படுகிறது. அயலகத்தார் அறிந்தவராக இருந்தாலும் அறியாதவர் ஆனாலும் தெரிந்தவர்களாக இருந்தாலும் தெரியாதவர்கள் ஆயினும் அவர்களிடம் நட்போடு பழகி நன்மை செய்ய வேண்டும். அயலகத்தார் நோயுற்று இருந்தால் நலம் விசாரிப்பதோடு மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, மருந்து வாங்க உதவுவது, அவருக்கு நேரும் இடையூறுகளைத் தகர்க்க தக்கன செய்வது, அல்லல்படும் பொழுது ஆறுதல் கூறி ஆவன செய்வது, அயலகத்தாரைக் காணும் பொழுது புன்முறுவல் பூக்க முகமன் கூறுவது, அவருக்கு நல்லன நடக்கும்பொழுது வாழ்த்துரைப்பது முதலியவை அயலகத்தாரோடு நயத்தகு நட்பு பேணும் நற்செயல்கள்.
 அயலகத்தார் யார் என்பதற்கு வரையறை வகுத்த சட்டமேதை ஷாபியீ (ரஹ்) அடுத்துள்ள நாற்பது வீடுகள் என்றார். அதனை யொட்டி பெரியார் ஹஸன் பஸரீ (ரஹ்) அயலகம் என்பது முன்னால் நாற்பது வீடுகள், பின்னால் நாற்பது வீடுகள், வலது புறத்தில் நாற்பது வீடுகள், இடது புறத்தில் நாற்பது வீடுகள் என்று விளக்கம் தருகிறார். இவ்விரிவான விளக்கம் அயலகம் என்பதைச் சுருக்காது விரிவாக்கி நட்பை உறவைப் பெருக்கி ஒருவருக்கொருவர் உதவும் உன்னத பண்பைப் பரவலாக்குகிறது. இருபக்க அயலகத்தாரில் அன்பளிப்பு அளிக்கும்பொழுது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்று கேட்ட பொழுது வீட்டு வாசலுக்கு மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை கொடுக்க கோமான் நபி (ஸல்) அவர்கள் பதிலிறுத்ததைப் பகர்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- புகாரி.
 ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிப்பது அவரைப் பற்றி அவரின் அயலகத்தாரின் அபிப்ராயம் என்று எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அறிவிக்கிறார் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்- இப்னு மாஜா. அயலகத்தாரால் பயனுடையவர் என்று நயமாக உரைக்கப்படுபவர் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர் என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் அப்துல்லாஹ் பின் அமரு (ரலி) நூல்- திர்மிதீ. இந்நபி மொழியை நடைமுறைப்படுத்திய நிகழ்ச்சி.
 ஸயீத் இப்னு ஆஸ் (ரலி) அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை ஒருவர் விலைக்குக் கேட்டார். அவ்வீடு சாதாரணமான எளிய வீடு. வீட்டிற்கு உரியவர் ஒரு லட்சம் திர்ஹம் விலை கூறினார். வாங்க வந்தவர் வீட்டின் விலையை விட பன்மடங்கு அதிக விலை கேட்பதின் காரணத்தை வினவினார். பக்கத்து வீட்டில் வாழ்பவர் ஸயீத் இப்னு ஆஸ் (ரலி) பக்கத்து வீட்டுக்காரனின் தேவையை தெரிந்து தேவைக்குரிய பணத்தைக் கொடுத்து தேவையை நிறைவேற்ற உதவி அயலகத்தார் அவரின் வீட்டில் தொடர்ந்து வாழ துணை புரிந்தார்.
 ஒருநாள் அன்னை ஆயிஷா (ரலி) தன் கைகளால் மாவு அரைத்து ரொட்டிகள் தயாரித்தார்கள். வீட்டிற்கு வந்த விழுமிய நபி (ஸல்) தொழ துவங்கினார்கள். அயர்ச்சியில் அன்னை ஆயிஷா (ரலி) உறங்கி விட்டார்கள். அடுத்த வீட்டு ஆடு இவர்களின் வீட்டில் புகுந்து ரொட்டிகளைத் தின்று விட்டது. திடுக்கிட்டு விழித்த அன்னை ஆயிஷா (ரலி) ஆட்டைத் துரத்திச் சென்று அடிக்க முயன்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் அடுத்த வீட்டு ஆடும் அண்டை அயலாரே. நம் உணவில் அவைகளுக்கும் பங்கு உண்டு என்று பதறாமல் பகர்ந்தார்கள், "அயலகத்தாரை எனக்கு வாரிசுகளாக ஆக்கி விடுவாரோ' என்று எண்ணும் அளவுக்கு அயலகத்தாரோடு நயத்தகு நட்பு பூண வானவர் ஜிப்ரயீல் அவர்கள் தொடர்ந்து போதித்ததாக பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 அயலகத்தார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் உண்மையான இறையச்சம் உடையவன் அல்லன் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- மிஷ்காத். குழம்பு சமைக்கும்பொழுது அயலகத்தாருக்குக் கொடுக்கும் அளவு நீர்விட்டு நிறைய காய்ச்சிட நீதர் நபி (ஸல்) அவர்கள் நினைவுறுத்தியதை அறிவிக்கிறார் அபூதர் (ரலி) நூல் - முஸ்லிம். ஓர் ஆட்டுக்கால் குழம்பாயினும் அயலகத்தாருக்குக் கொடுப்பதைக் குறைவாக எண்ணி கொடுக்காதிருக்க வேண்டாம் என்று பெண்மணிகளுக்குப் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் போதித்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 எவரின் தீங்குகளை விட்டும் பக்கத்து வீட்டுக்காரர் பயமின்றி இருக்கின்றாரோ அந்த வீட்டுக்காரரே இறை நம்பிக்கை கொண்டவர் என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். ஒரு சமயம் அவன் உண்மை விசுவாசியல்ல என்று மும்முறை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்த பொழுது அவன் யார் என்று வினவினர் தோழர்கள். அயலகத்தார் அவதியுற எவன் தீங்கிழைக்கிறானோ அவனே என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. அயலகத்தார் பயமின்றி வாழ அவர்களோடு நயமாய் பழகி நட்பைப் பேணி ஒல்லும்வகை எல்லாம் ஓவாது- நல்லுதவி செய்ய வேண்டும்.
 மாநபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். சிறுமிகள் சிலர் தஃப் அடித்து பாட்டு பாடினர். அப்பாட்டில் நாங்கள் பனூநஜ்ஜார் குடும்பத்து சிறுமிகள். ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் ஏற்றமான அண்டை வீட்டுக்காரர் என்ற கருத்து கீழையோடியது. நான் நேசிப்பதை இச்சிறுமிகள் யோசித்து பாடுகின்றனர் என்று பாராட்டினார்கள் பாச நபி (ஸல்) அவர்கள். அறிவிப்பவர் -அனஸ் (ரலி) நூல்- இப்னு மாஜா.
 அருமறை குர்ஆன் கூறுகிறபடி அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் நடந்து காட்டிய நன்முறையில் அயலகத்தாரோடு நடத்தகு நட்பு பேணி வியத்தகு சாதனைகள் புரிவோம். வியனுலகு போற்ற வாழ்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com