வெள்ளிமணி

படிகள் உணர்த்தும் படிப்பினை!

27th Dec 2019 03:43 PM

ADVERTISEMENT

படி பூஜை என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பனின் சரண கோஷமும், அந்த பதினெட்டாம் படிகளும் ஆகும். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பதினெட்டு படிகளை பூஜிப்பதே படி பூஜை. மனிதனின் பஞ்ச இந்திரியங்களான கண் (பார்த்தல்), காது (கேட்டல்), மூக்கு (நுகர்தல்), நாக்கு (சுவைத்தல்), உணர்ச்சி (தொடுதல்) ஆகியவை முதல் ஐந்து படிகளாகவும், அஷ்டா-ரஹஸ் எனப்படும் மனிதனின் எட்டு வகை குணங்களான காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்ய, அசுயை மற்றும் அகங்காரம் ஆகியவை அடுத்து வரும் எட்டு படிகளாகவும்; சத்வ, ரஜஸ், தமஸ் என்ற குணங்களை அடுத்து வரும் மூன்று படிகளாகவும்; அவித்யா (அறியாமை) மற்றும் வித்யா (படிப்பு) ஆகியவற்றை கடைசி இரண்டு படிகளாகவும்; நம் வாழ்க்கையை ஏற்றிவிடும் உயர்நிலைகளை படிகளாக; சபரிமலையில் பதினெட்டாம் படிகள் அமைந்துள்ளது.
 இது இப்படி என்றால், முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள சுவாமிமலையில் தமிழ் வருடம் அறுபதையும் குறிக்குமுகமாக அதன் பெயர்கள் பொறிக்கப்பட்டு அறுபது படிகளாக அமைந்து; என் மீது கால் வைத்து சுலபமாக ஏறிச் சென்றால் சிவனாரின் மைந்தன் சுவாமிநாதனின் அருள் இனிதே கிட்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தப்படிகள்.
 சுவாமிமலை அதிகம் பிரபலமாகாத காலத்தில் ரயில்வேயிலிருந்து ஓய்வு பெற்ற தனி ஒருவரின் முயற்சியால், ஒவ்வொரு ஆங்கில வருடம் ஜனவரி முதல் நாள் பித்துக்குளி முருகதாஸ் காவிரிக்கரை பிள்ளையார் கோயிலிலிருந்து தன் விரலோட்ட ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டு, மயங்கவைக்கும் தன் வெங்கலக் குரலால் திருப்புகழைப் பாடிக்கொண்டே நான்கு வீதிகளிலும் வலம் வந்து; பின் நெல்லி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட, படியேறும் அடிவாரத்தில்; கடல் போல் கூடியுள்ள ஜனசமுத்திரத்தின் இடையே நின்று கொண்டு "முருகா" என அழைக்கும்போது ஏற்படும் பக்திப் புல்லரிப்பு இனி நிகழுமா என்ற ஏக்கம் நமக்கு வருகிறது!
 அறுபது படிகளிலும் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை மற்றும் கற்பூரம் வைத்துவிடுவார்கள். திருப்புகழை முருகதாஸ் ஆரம்பித்தவுடன் முதல் முப்பது படிகளில் கற்பூரம் ஏற்றப்படும். பாடிக்கொண்டே ஏறி; அடுத்த நிலைக்குச்சென்று பின் அடுத்து வரும் முப்பது படிகளும் இது போன்று கற்பூரம் ஏற்றப்பட்டு மேலே சென்று திருப்புகழை பூர்த்தி செய்து, சுவாமிக்கு மகாஅபிஷேகம் செய்வார்கள்.
 இதில் மனித தத்துவம் உள்ளது. மனிதனின் முதல் முப்பது வருடம் தாய் தந்தையை சார்ந்திருந்து பொறுப்பு அனைத்தையும் பெற்றோரிடம் விட்டுவிட்டு, தான் குடும்பஸ்தனாக ஆன பின்; அடுத்து வரும் முப்பது வருடங்களில் அந்த மனிதன் பிள்ளைப் பேற்றினை பெற்று, வாழ்க்கையின் சாதக பாதக பகுதிக்குள் வந்து; தன் அறுபதாவது வயதில், அனைத்தும் அவன் செயல் என்ற இறைவனை நினைக்கும் நிலையை அடைகிறான் என்கிறது நம் சனாதன தர்மம். இந்த தத்துவத்தின் சாராக சுவாமிமலை உள்ளது.
 வயலும் வயல் சார்ந்த இடமும் இவ்வூரைச்சுற்றி சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் நன்செய் நிலத்தில் ஏர் ஓட்டும் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பதால், "திரு ஏர் அகரம்' என்ற பெயரோடும் சிறப்பு சேர்க்கிறது. முருகதாஸிற்குப் பின் தற்போது, தமிழ்மறை தெரிந்த ஓதுவார்களைக் கொண்டு இந்த படிவிழா ஒவ்வொரு ஜனவரி முதல் நாள்; சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பக்தரால் தொடர்ந்து இந்த தொண்டு நடைபெறுகிறது.
 இது போன்று, அறுபடைவீடுகளில் ஒன்றான திருத்தணியில் முன்னூற்று அறுபத்தைந்து படிகள்; நம் ஒரு வருடத்தினை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. 1917 -ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட "படி பூஜை‘ தொடர்ந்து ஒவ்வொரு ஆங்கில வருட கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி மிகச்சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.
 அரக்க அரசன் ஹிரண்யகசிபு இரவிலோ, பகலிலோ, வெளியிலோ, உள்ளேயோ, மனிதராலோ, மிருகத்தாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெற்றான். கொடுக்கத் தெரிந்த எனக்கு அழிக்கத் தெரியாதா ! மனிதனே அகங்காரத்தை விட்டொழி என்று அறைகூவல் விடுக்கும் முகமாக நரசிம்ம அவதாரம் ஸ்ரீமந்நாராயணனால் எடுக்கப்பட்டு, படியில் அமர்ந்து கொண்டு தன் மடியில் வைத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். அதனால் தான் வீட்டு வாசல் படியிலிருந்து கோயில் வாசல் படிவரை; படியில் உட்காரக்கூடாது என்பது நம் முன்னோர் வழி வகுத்துள்ளார்கள்.
 தர்மபுரியிலுள்ள கல்யாண காமாட்சி திருக்கோயில்; தருமபுரி "கோட்டை கோயில்' என அழைக்கப்படுகிறது. இங்கு காமாட்சியின் சந்நிதியை அடைய 18 திருப்படிகள் உள்ளன. அமாவாசை தினங்களில் பெண்கள் இந்த திருப்படி பூஜையை விமரிசையாக செய்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கைலாசபுரம் நெடுங்குடியிலுள்ள கைலாசநாதர் கோயிலில் இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்' என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
 "படியாய் கடந்து உன் பவள வாய் காண்பேனே" என குலசேகர ஆழ்வார் திருப்பதி ஏழுமலையானை வேண்டி தன் பாசுரத்தில் பாட; அவரது வேண்டுதலின் விடியலாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட அனைத்து வைணவக் கோயிலில் உள்ள கருவறைக்கு முன்னுள்ள படியினை "குலசேகரன் படி" என அழைக்கலாயினர். அந்த படியினை யாரும் மிதிக்காமல் தாண்டிச்செல்வது மரபு.
 இறை மதிப்பு மிக்க இப்படிகள் உணர்த்தும் படிப்பினையை ஏற்று, நம்மை வழி நடத்திச்செல்லும் அந்த மகாசக்தியை வணங்கி மகிழ்வோம்.
 - எஸ். எஸ். சீதாராமன்

ADVERTISEMENT
ADVERTISEMENT