வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

6th Dec 2019 03:47 PM

ADVERTISEMENT

• வயது, அறிவு, செல்வம், பேச்சுத்திறமை, அணிந்திருக்கும் உடை, மற்றும் தாங்கள் செய்யும் செயல்களுக்கேற்ப வருமானத்தை மக்கள் தேடிக்கொள்ள வேண்டும். இது போன்ற வருமானம் அநியாயமானதாக இல்லாமல் நியாயமானதாக இருக்க வேண்டும்.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• "வாழ்க்கையின் அந்திம நேரத்தில் பகவானை நினைக்க வேண்டும் அவரது திவ்ய நாமத்தைச் சொல்ல வேண்டும்' என்று நாம் நினைத்தால், அப்போது அவை நம் நினைவுக்கு வராது. நமது உடலும், உள்ளமும் ஒத்துழைக்காத நேரம் அது!
• ஆதலால், நாம் ஆரோக்கியமாக இருக்கும்போதே, தினமும் பகவானை நினைத்துக்கொண்டிருப்பதையும், அவனது திருவடிகளைப் பூஜித்து வருவதையும், அவனது திவ்ய நாமங்களைச் சொல்லி வருவதையும் செய்து வர வேண்டும். அவ்விதம் நாம் செய்து வந்தால் நம்முடைய பிறவியின் அந்தக் கடைசி விநாடிகளில், இறைவனின் திவ்ய தரிசனமும், நாம அனுபவமும் நமக்குத் தானாகவே வந்துவிடும்.
- ஸ்ரீமந் நாராயணன் கருட பகவானுக்கு உபதேசித்தது 
• கலியுகத்தில் எவரெல்லாம் ஸ்ரீ ராமநாமத்தைச் சொல்கிறார்களோ, எவரெல்லாம் ஸ்ரீ ராமபிரானை பூஜிக்கிறார்களோ, எவரெல்லாம் அயோத்யா திருத்தலத்தை தங்கள் பிறவியில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கிறார்களோ, எவரெல்லாம் ஒரு தடவையாவது சரயு புண்ணிய நதியில் நீராடும் பாக்கியத்தைப் பெறுகிறார்களோ, அவர்களை நான் தீண்டமாட்டேன்.
- கலிபுருஷன் மன்னர் பரீக்ஷித்திடம் சத்தியம் செய்து கொடுத்தது 
• காய்க்காக மரம் பூக்கிறது. காய் தோன்றியதும் பூ உதிர்கிறது. அதுபோல, ஞானத்திற்காக வினை செய்தால், ஞானம் கிடைத்ததும் வினை அழியும்.
- கபீர்தாசர்
• அறிவின்றி தியானமில்லை, தியானமின்றி அறிவில்லை. அறிவும் தியானமும் யாரிடமுண்டோ அவரே சாந்தி அடைகிறார்.
- புத்தர்
• உளுந்தின் தோல் வேறு, அதன் பருப்பு வேறு. அதுபோல்தான் இந்த ஆன்மாவும் உடலும் வெவ்வேறாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டைக் குறித்துச் சதா சிந்தித்து வந்ததன் பயனாக உள்ளத்தூய்மை பெற்றுவிட்ட மகானுக்கு எழுத்தறிவில்லாவிடினும், "பூரண ஞானம் கைவந்துவிட்டது' என்று சொல்லலாம்.
- மகாவீரர்
• "என்னுடையது என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது'' என்று சொல்கிறவன் அதமன். 
"என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது'' என்று சொல்கிறவன் மத்திமன்.
"உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது'' என்று சொல்கிறவன் உத்தமன்.
"உன்னுடையதுமன்று, என்னுடையதுமன்று, எல்லாம் பகவானுடையது'' என்று சொல்லுகிறவன் ஞானி.
- இந்துமதம்

ADVERTISEMENT
ADVERTISEMENT