வெள்ளிமணி

புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 23

30th Aug 2019 10:57 AM

ADVERTISEMENT

இயேசு செய்த முதல் அற்புதம்-கானா ஊர் (இஸ்ரேல்)
கானா (Cana) என்னும் ஊர் புதிய ஏற்பாட்டில் சிறப்பாகக் குறிக்கப்படுகின்ற ஓர் இடம் ஆகும். கானாவூர் என்றதும் நினைவில் வருவது இயேசு, அந்த ஊரில் நிகழ்ந்த திருமணத்தின்போது தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார் என்பதே. இது இயேசு செய்த முதல் அற்புதம். இதை யோவான் மட்டுமே பதிவு செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் திருமணக் கொண்டாட்டம் பல நாள்கள் நீடிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது விருந்தினர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். கானாவிலும் ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்தில்தான் இயேசுவும், அவருடைய தாயும், இயேசுவின் சீடர்களான யாக்கோபு, அந்திரேயா, சீமான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விவிலியத்தின் யோவான் 2-ம் அதிகாரம் 1 முதல் 11-ஆம் வசனங்களின்படி, மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சை ரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சை ரசம் இல்லை என்றாள்.
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைக்கப்பட்டிருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளில் நீரை நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 
அந்தத் திராட்சை ரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சை ரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சை ரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
இந்த முதலாம் அற்புதம் நடைபெற்ற இடத்தில் ஒரு சிற்றாலயம் (சினாகா) கட்டப்பட்டுள்ளது. எங்கே 10 யூத குடும்பங்கள் இருக்கிறதோ அங்கு ஒரு சினாகா கட்டப்படுவது வழக்கம். இயேசு முதல் அற்புதம் செய்தபோது மணமக்கள் இருந்த குகைக்கு மேல் சிற்றாலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சிற்றாலயத்தில் இயேசு முதல் அற்புதம் செய்தபோது பயன்படுத்தப்பட்ட கற்சாடியில் ஒன்று இப்போதும் உள்ளது. இதில் ஒரு கற்சாடி ரோம் நகரில் இருப்பதாக விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சீடர்களில் ஒருவரான நத்தானியேலுக்கு, கானா தான் சொந்த ஊர்.


- ஜெபலின்ஜான்
(தொடரும்...)

ADVERTISEMENT
ADVERTISEMENT