புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22

முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு, மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார்.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22

முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு, மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய "திருக்குடும்பம்" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது.
இயேசு திருமுழுக்கு பெற்ற ஜோர்தான் நதி (இஸ்ரேல்):
இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் நாட்டுக்கு எல்லையாக இந்த நதி உள்ளது.இஸ்ரேலில் ஜோர்தான் நதி அமைந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் கிழக்கு எல்லையூடாக இது செல்கிறது. பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசி எலிசா காலத்தில் ஜோர்தான் நதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகமான் எனும் சிரிய ராஜாவின் படைத்தளபதி தனது குஷ்டரோகத்தை குணப்படுத்த எலிசாவிடம் வரும் போது, எலிசா அவனிடம் இந்த நதியில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணும் படி சொன்னான். இதன் மூலம் அவனது வியாதி மறைந்து போனது. புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானகன் இந்த இடத்தில் தான் மக்களுக்கு பிரசங்கம் பண்ணி பலருக்கு ஞானஸ்நானம் (திருமுழுக்கு) கொடுத்தான். இயேசுகிறிஸ்துவும் இங்கே தான் ஞானஸ்நானம் பெற்றார். சிகிச்சைமுறை நோக்கங்களுக்காக இன்றும் ஜோர்தான் நதிக்கு பலர் செல்கின்றனர். 
இதன் புவியியல் அமைப்பை பார்ப்போமானால், இது ஹேர்மன் எனும் மலைச்சரிவிலிருந்து தொடங்கி சிரியா-லெபனான் எல்லையூடாக பயணிக்கிறது. அதோடு கலிலேயா கடலின் தெற்கு பக்கமாக இது பாய்கிறது. 1312 அடி கடல் மட்டத்திற்கு கீழுள்ள சாக்கடலுக்குள் (Dead sea) இது விழுகிறது. கலிலேயா கடல் மற்றும் சாக்கடல் இடையே 124 மைல்கள் ஆகும்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் 125 முறையும், புதிய ஏற்பாட்டில் 15 முறையும் ஜோர்தான் நதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. விலிலியத்தின்படி ஜோர்தான் ஆறு மூன்று முறை பிளவுப்பட்டுள்ளது (ஆதாரம்: யோசுவா 4:7,19 வசனங்கள், 2 இராஜாக்கள் 2:8, 2 ராஜாக்கள் 2: 13, 14-ஆவது வசனங்கள்). விவிலியத்தின்படி பல முக்கிய சம்பவங்கள் நடந்தாலும், இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றது தான் பிரதான செய்தியாக பார்க்கப்படுகிறது. 
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே! உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15-ஆவது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (லூக்கா 3:1). இது கி.பி. 28-29-ஆம் ஆண்டு ஆகும். இதை வைத்து பார்க்கும்போது அவர், திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார் என கணக்கிடப்படுகிறது.
இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீர் என்னிடம் வருகிறீர்?'என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'(மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு'பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).
திருமுழுக்கு பெறும் புனித பயணிகள்: 
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் புனித பயணிகள் இயேசு திருமுழுக்கு பெற்ற இடத்தில் திருமுழுக்கு பெறுகின்றனர். இங்கு திருமுழுக்கு பெற விரும்பும் புனித பயணிகள் வெள்ளை நிற ஆடை எடுத்துச் செல்லவேண்டும். இல்லையெனில் அங்கு வாடகைக்கு வெள்ளை நிற ஆடை பெற்றுக்கொள்ள வேண்டும். வெள்ளை நிற ஆடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு வழங்கப்படும். திருமுழுக்கு பெற விரும்பாத பயணிகள் ஜோர்தான் ஆற்றில் குளித்து மகிழலாம். அதிக அளவு ஆழம் இல்லாத ஆறாக இது உள்ளது. இக்கரைக்கும், அக்கறைக்கும் இடையே குறைந்தபட்சம் 60 அடி மட்டுமே இருக்கும்.
- ஜெபலின் ஜான்
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com