கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!

கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!

சண்டாசுரனை அழித்தாள் பராசக்தி! தேவர்கள் காணும் வகையில் அவர்களுக்கு ஞானக்கண் தந்து உய்ய வழிகாட்டியதால் கண்ணாத்தாள் என்று பெயர் பெற்றாள். சிவகங்கையில் இருந்து

சண்டாசுரனை அழித்தாள் பராசக்தி! தேவர்கள் காணும் வகையில் அவர்களுக்கு ஞானக்கண் தந்து உய்ய வழிகாட்டியதால் கண்ணாத்தாள் என்று பெயர் பெற்றாள். சிவகங்கையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டை என்னும் ஊரில் அவள் குடிகொண்டு அருள்வழங்கி வந்தாள்.
 அவ்வூரில் இருந்த மக்கள் கண்ணாத்தாளை தங்கள் காவல் தெய்வமாக கொண்டவர்கள். வெகுநாள்கள் வெளியூரில் இருப்போம் என முடிவு செய்பவர்கள் கோயில் மண்ணை சிறிதளவு மூட்டையாகக் கட்டி தெய்வசக்தி தங்களுடன் இருப்பதாக நம்பி எடுத்துச் செல்வது வழக்கம்.
 சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஒருவன், வட தமிழகத்தில் நாடுகளை பிடிப்பதற்காக தன் படையுடன் வந்து வெவ்வேறு இடங்களில் பாடி வீடு அமைத்து தங்கினான். அவனிடம் நாட்டரசன்கோட்டை பக்கமிருந்து வந்த குழு ஒன்று எட்டிக்காட்டில் தங்கினர். அவர்களது விருப்ப தெய்வமான கண்ணாத்தாளை மண்ணில் உருவாக்கி அங்கு வைத்து பாடிவீடு அமைத்து தினமும் வழிபட்டு வந்தார்கள். எட்டி மரங்கள் நிறைந்த எட்டிக் காட்டுக்குள் கோயிலை அமைத்து அதன் எதிரில் ஒரு குளமும் வெட்டி , பணி முடிந்து வந்து தினமும் குளத்தில் முழுகி அம்பாளை தரிசனம் செய்வார்கள். போருக்குச் செல்லும் முன் கண்ணாத்தாள் உத்தரவு பெற்று சென்று வென்று வரும் பழக்கத்தைக் கைக் கொண்டு இருந்தார்கள்.
 மன்னன் நாடு திரும்பியபிறகு வீரர்களில் பலர் ஊர் திரும்பாமல் அங்கேயே தங்கியவர்கள் மணம் புரிந்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்து மண்ணின் மைந்தர்களுடன் கலந்து வாழ்ந்தனர். அவர்களின் குலதெய்வமாக நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள், தேவி கண்ணாத்தாள் என்ற பெயரோடு குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்வழங்கிக் கொண்டிருந்தாள்.
 இக்கோயில் கருங்கல் முன்மண்டப மேற்கூரைகளில் பாண்டிய மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்கிறது. அந்நாள்களில் இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் கோலோச்சியதற்கு ஆதாரமாக திருவொற்றியூர் கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன. எனவே, சுமார் 13 -ஆம் நூற்றாண்டு முதல் இக்கோயில் மக்களால் வழிபடப்பட்டுள்ளது. அந்நாள்களில் வயல்வெளிகளும் தோப்புகளும் கோயிலைச்சுற்றி இருக்க, சென்னை அம்பத்தூரில் எட்டிக்காடான இவ்விடத்தில் குடிகொண்டிருந்த கண்ணாத்தாள் அருகிலிருந்த ஏழு ஊர்களுக்கும் சக்திமிகு தெய்வமாக விளங்கும் நிலை இருந்துள்ளது.
 அருகிலுள்ள மங்களபுரம் வெள்ளாளர் தெரு, குப்பம், ராமாபுரம், வரதராஜபுரம், கல்யாணபுரம், வெங்கடாபுரம் மற்றும் சோழபுரம் ஆகிய ஊர்களில் அனைவருக்கும் கண்கண்ட சக்தியாக விளங்கிய அம்மன் ஸ்ரீ தேவி கண்ணாத்தாள் ஆகும். அவள் குலதெய்வமாக மட்டுமில்லாமல் வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டும் நேரத்தில் தடையின்றி வழங்கும் கண்கண்ட தெய்வமாகவும் விளங்கினாள். எனவே அந்தப் பெயரிலேயே வணங்கி தொழுதனர். கருவறையில் கண்ணாத்தம்மன் மூல விக்கிரகம் நான்கு கைகளில் மழுவும் பாசாங்குசமும் கீழ் கை அபய வரத ஹஸ்தமாகவும் ஒரு கால் மடித்து ஒரு கால் தொங்கவிட்டும் பத்திரபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள்.
 தினமும் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரையும்; மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யும் நேரமாகும். திருக்கோயிலில் தீபமேற்றி வைத்து தனது பிரார்த்தனையைச் சொல்லி வரம் கேட்பது வழக்கமாக உள்ளது. வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை ஆகிய நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.
 தை வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்தல் போன்றவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. குலதெய்வக்காரர்களுக்கும் மற்றையோர்க்கும் கருணை செய்வதால் சக்திவாய்ந்த பரிகார தெய்வமாகவும் கண்ணாத்தாள் விளங்குகிறாள். வீட்டில் எந்த ஒரு சுப காரியம் தொடங்குவது என்றாலும் முதலில் கண்ணாத்தம்மனுக்கு பொங்கல் வைத்து தொடங்குவது இந்த ஏழு ஊர்களை சேர்ந்தவர்களுக்கு வழக்கமாக உள்ளது.
 ஒவ்வோர் ஆண்டும் சித்திராப்பெளர்னமியை நிறைவு நாளாகக் கொண்டு சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அந்நாள்களில் கண்ணாத்தம்மன் ஏழூர்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊருக்கும் சென்று தங்கி அபிஷேகம் கண்டு, பின்னர் அலங்காரத்துடன் மக்களுக்கு ஆசி வழங்கி வரும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

காவல் தெய்வமாகவும் போர் தெய்வமாகவும் விளங்கி அருள் வழங்கி வரும் கண்ணாத்தாளை வணங்கி பூரண சக்தியுடன் அருளியவளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கும்பம் படைத்து கூழ் ஊற்றுதல் திருவிழா நடைபெறும். எதிர்வரும் 6 -ஆம் ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 -ஆம் தேதி காலை இத்திருவிழா நடைபெறுகிறது.
 கோயில் சந்நிதி சிறியது ஆனாலும் அதன் முன்புறம் உள்ள அர்த்த மண்டபத்தின் விதானத்தில் மீன் சின்னமும்; ராகு-கேதுக்கள் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு முன்புறம் மகாமண்டபம், பெரிய மண்டபம், பெரிய தகர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளன.
 உடல் உபாதைகள் இருப்போர், உடல்நலம் குறைவுபெற்றோர், மனம் பேதலித்து இருப்போர், குழந்தை வரம் வேண்டுவோர், திருமணம் கைகூட பிரார்த்தனை செய்து கொள்வோர் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 எட்டித்தோப்பு தேவி கண்ணாத்தம்மன் மக்களின் கவலைகள் போக்கி நலம் தருவதில் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். நீங்களும் ஒருமுறை இவ்வாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து வாருங்களேன்!
 செல்லும் வழி : சென்னை அம்பத்தூர் டன்லப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்கு பின்புறம் உள்ளது.
 - ஆர். அனுராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com