உளமே உயர்வின் தளம்

மனிதனின் உயர்விற்கும் தாழ்விற்கும் தளம் அவனின் உள்ளமே. நல்ல உள்ளம் நற்பண்புகளைப் பெறுகிறது. தீய உள்ளம் தீயினும் கொடிய மாய வலையில் வீழ்கிறது.
உளமே உயர்வின் தளம்

மனிதனின் உயர்விற்கும் தாழ்விற்கும் தளம் அவனின் உள்ளமே. நல்ல உள்ளம் நற்பண்புகளைப் பெறுகிறது. தீய உள்ளம் தீயினும் கொடிய மாய வலையில் வீழ்கிறது. நற்குணம் பெற்றோர் நற்பண்புகளால் தெளிந்த நீரோடையினும் தெளிவான உள்ளம் உடையோராய் அழுக்கில்லா அறிவினால் நெறிபிறழாது ஒழுக்கமுடன் இழுக்கின்றி வாழ்வர். தீயோர் இதற்கு முற்றிலும் முரணான ஒழுக்கமற்ற இழுக்குடையோராய் அழுக்கிலே அழிவர்.
 அதிக வெப்பமோ அதீத குளிர்ச்சியோ இல்லாத நடுநிலையான உடல்நிலையே நலமான வாழ்விற்கு உகந்தது. அதுபோல உணர்ச்சிகள் வரம்பு மீறாமலும் மரக்கட்டையை போல மரத்து உணர்வற்ற பிண்டமாக இல்லாமலும் உள்ள நடுநிலையான மனநிலையே உள்ளத்தின் நல்ல நிலை. இந்நிலை மாறி இரு நிலைகளில் எந்நிலை மிகைத்தாலும் அது மன நோயே.
 மனித உடல் பிறப்பிலேயே முழுமை பெறுவதில்லை. வயது கூட வயதிற்கேற்ற வளர்ச்சி பெற்று முழுமை அடைகிறது. வளர்ச்சிக்குரிய ஊட்டத்தைக் கொடுத்து உதவுவது உணவு. அதுபோல பிறப்பில் உள்ளமும் முழுமை பெறுவதில்லை. அழுக்கற்ற அகப்பயிற்சியால் பக்குவப்படுத்தி முயற்சியால் முழுமை பெற செய்ய வேண்டும். உடல் வளர உணவு உதவுகிறது. உள்ளம் வளர எது வேண்டும்? எண்ணி பார்த்தால் எதிர்ப்படும் விடை நற்குணம்.
 உடல் நலனுக்கு ஊறு ஏற்படும்பொழுது ஊறு விளைவித்த காரணத்திற்கு எதிரான காரணியே ஏற்ற மருந்தாகும். வெப்பம் கூடும்பொழுது குளிர்ச்சியைக் கொடுக்க வேண்டும். குளிர்ச்சி கூடினால் கதகதப்பைப் பதமாக இதமாக கொடுக்க வேண்டும். அதுபோலவே உள்ளத்தைக் கெடுக்கும் தீய குணங்களைத் தீய்க்க அதற்கு எதிரான ஏற்ற நற்செயல்களை நாட வேண்டும். அறியாமை பிணி அகற்ற அறிவு வேண்டும். கஞ்சத்தனத்தை விஞ்சிட தயாள குணம் வேண்டும்.
 மாலிக் பின் தீனார் (ரஹ்) கடைத்தெருவைச் சுற்றி வரும்பொழுது அவர்களின் மனம் விரும்பும் எந்த பொருளைக் கண்டாலும் "" மனமே! பொறுமையோடிரு! உன் நன்மைக்காகவே கூறுகிறேன்'' என்று சொல்லி உள்ளத்தை உறுதியாக்குவார்கள். விரும்பும் பொருளை வாங்கி உண்ணமாட்டார்கள்.
 நன்மையை கேட்பதில் தளராத மனிதன் துன்பம் ஏற்படும்பொழுது துவண்டு நம்பிக்கை இழக்கிறான் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 41- 49 ஆவது வசனம். வளமாய் வாழ செல்வம் வேண்டும். செல்வத்தைப் பெருக்கி அதனைத் துய்த்து வாழ நோயற்ற உடல்நலம் வேண்டும் என்று இறைவனைக் களைப்பின்றி கணமும் வேண்டும், மனிதன் வறுமை, நோய், துன்பம் வந்து விட்டால் நிராசை உள்ளவனாகி நிரந்தரமான அல்லாஹ்வை மறந்து விடுகிறான். இன்பமும் துன்பமும் சூழ்ந்த உலகில் இரண்டும் மாறி மாறி வரும். மாறும்பொழுது மனம் மாறாமல் அணுவையும் அசைக்கும் அல்லாஹ்விடம் முறையிடாது முரண்படும் மனிதனைச் சாடுகிறது இந்த வசனம். உள்ளத்தில் உறுதி இல்லாததே இவ்வாறான நம்பிக்கை இழப்பிற்குக் காரணம். உறுதியான உள்ளம் இறுதிவரை எந்நிலையிலும் இறை நம்பிக்கையை இழக்காது. அத்தகு உள்ளத்தில் இழப்பே இருக்காது. அவ்வுளமே உயர்வின் தளம்.
 ஒருவர் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நல்வழி காட்ட வந்தீர்கள். அந்த நல்வழி எது என்று கேட்டார். நந் நபி (ஸல்) அவர்கள் நற்குணம் என்று பதில் அளித்தார்கள். மற்றொரு முறை உயர்ந்த செயல் எது ? உத்தம நபி (ஸல்) அவர்களிடம் வினவிய பொழுதும் நற்குணம் என்றே பதில் அளித்தார்கள். நற்குணங்களை நவிலுமாறு புவிபுகழ் பூமான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது "" மன்னிக்கும் மனப்பான்மை, நற்செயல் செய்ய தூண்டல், மூடர்களின் நிந்தனைகளைப் புறந்தள்ளல், தொடர்பைத் துண்டித்தவனும் உறவை , நட்பை விலக்கிவிடாது விவேகமாக பேணல், உதவி செய்யாதவனுக்கும் உதவி செய்தல், தீங்கிழைத்தவனுக்கும் பாங்காய் நன்மை செய்தல் நற்குணங்களில் சில'' என்று எடுத்துரைத்தார்கள்.
 நற்செயல்களை இறைவனுக்காக செய்பவன் மனிதர்களிடம் பாராட்டை எதிர்பார்க்க கூடாது என்று அறிவுறுத்தினார்கள் ஈசா நபி. இதனை ஒட்டி இறைவன் மீது உண்மையான நல்லெண்ணம் கொள்வதே உளத்தூய்மை என்று இப்ராஹீம் பின் அத்ஹம் விளக்கம் அளித்தார்கள்.
 அதாவு என்ற பெரியார் உயர் பதவி பெற்றவர்கள் நற்குணத்தால் உயர்ந்தவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பரிபூரண நற்குணம் பெற்றவர்கள். நற்குணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பவர்களே உலகில் உயர்வு பெறுவதோடு இறைவனின் நெருக்கத்தையும் பெறுவர் என்று அறிவித்தார்கள்.
 உளமே உயர்வின் தளம் என்பதை உணர்ந்து உள்ளத்தை நற்குணங்களால் நிரப்பி அடித்தளத்தை உறுதியாக்கி உயர்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com