அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!

அமாவாசை மற்றும் பெளர்ணமிக்குப் பின் வரும் 13 நாள்களை- பிரதமையிலிருந்து சதுர்த்தசி வரை திதி என்பர்.
அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!

அமாவாசை மற்றும் பெளர்ணமிக்குப் பின் வரும் 13 நாள்களை- பிரதமையிலிருந்து சதுர்த்தசி வரை திதி என்பர். ஒருவருடைய பிறப்போ, இறப்போ இந்த திதியை மையமாக வைத்துத்தான் கணிக்கப்படுகின்றது. இதில் சுபகாரியங்கள் செய்வதற்காக ஒரு நாள் பார்த்துக் கூறவேண்டுமென ஜோசியரிடம் நாம் சென்று கேட்டால்; அஷ்டமி, நவமி இல்லாத நாளாக பார்த்து நாள் குறித்துக் கொடுப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் இது பற்றி தேடும்போது 8 என்ற எண் சனி கிரகத்தைக் குறிக்கிறது. சனி தாமஸ குணமுள்ளவன். 9 என்ற எண் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இவன் கடுமையான வேகம் கொண்டவன். இதனால் இந்த இரண்டு நாள்களையும் தவிர்ப்பது நல்லது என அவர்கள் கூறுகிறார்கள்.
அஷ்டமியில் கிருஷ்ணனும், நவமியில் ராமனும் ராஜ வம்சத்தில் பிறந்தாலும்; மானிடராக பிறந்ததால் அவர்கள் பட்ட துன்பங்கள் நாம் அனைவரும் அறிவோம் என அவர்கள் தனக்கு சாதகமாக இதைக் கூறுவார்கள். கம்சனை வதம் செய்வதற்காக எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணனுக்கு ரோகிணி நட்சத்திரம் ஆகையால், இதில் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும் கூறுவார்கள்.
அஷ்டமியும் நவமியும் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட இந்த துன்பத்தை எடுத்துக்கூறினர். மனமிறங்கிய நாராயணன், "கவலை கொள்ளேல், உங்கள் இருவரது பெயரும் வரலாற்றில் பொறிக்கப்படும்'"என ஆசீர்வதித்து தீயோரை அழிக்கவும் நல்லோரைக் காக்கவுமே இந்த இரண்டு நாள்களையும் ஸ்ரீமந் நாராயணன் தன் அவதார நாள்களாக தேர்ந்தெடுத்தார். ஒருத்தி (தேவகி) மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி (யசோதை) மகனாய் வளர்ந்தவனான மதுராவாசன், நவநீதசோரன், த்வரகாபுரீசன், அச்சுதன், அனந்தன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன் என பல பெயர்களால் போற்றப்படும் கள்வன் மாயக் கண்ணன் பிறந்த திதி அஷ்டமி; நட்சத்திரம் ரோகிணி!

இந்த அஷ்டமி நாளை கோகுலாஷ்டமி என்று ஸ்மார்த்த சித்தாந்தவாதிகள் (சைவம் வைணவம் இரண்டும் ஒன்றென வணங்குபவர்கள்) கொண்டாடுகிறார்கள். வைணவ சித்தாந்தவாதிகள் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை ஸ்ரீஜெயந்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியென கொண்டாடுகிறார்கள்.
ராமாவதாரத்தில் எந்த ஓர் இடத்திலும் தன்னை ஓர் அவதாரமாக காட்டிக் கொள்ளாமல் கோசலையின் மகனாக மனிதனாய் இருந்தார். மாறாக கிருஷ்ணாவதாரத்தில் தன் தாய் யசோதை உட்பட அனைவரிடத்திலும் தான் ஓர் அவதார புருஷன் என்பதை வெளிச்சமிட்டு காண்பித்தான். யார் யாரிடம் எந்த மொழியில் பேசவேண்டுமோ அந்த மொழியில் பேசினால் தான் காரியம் முடியுமென்பதை ஒவ்வொரு அணுத்துளியிலும் சொல்லும் கீதை நாயகன் கண்ணன் குருஷேத்திரக்களத்தில்; தர்மத்தை நிலை நாட்டுவதற்கு "யுகம்தோறும் அவதரிப்பேன்' என்கிறான்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சமஸ்கிருதத்தில் கூறும் இந்நாளை வட இந்தியர்கள், "ராசலீலா' மற்றும் "தகி அண்டி' (தயிர் கலசம்) என்றும் கேரளாவில் "அஷ்டமி ரோகிணி' என்றும் கொண்டாடுகிறார்கள். உறியடி விழா மற்றும் வெண்ணைத்தாழி உடைத்தல் என்று வீதிகளில் உயரத்தில் பானையை கயிற்றினால் தூக்கி இறக்கி அதை குச்சியால் அடிப்பவரது கண்ணை கட்டி, பானையை அடித்து உடைப்பவர்க்கு பரிசு கொடுத்து இளைஞர்களுக்குள் போட்டியை ஏற்படுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவினை கிராமங்களில் நடத்துவார்கள். குருவாயூர் கோயிலில் இந்த நாளில் மிகச்சிறப்பாக விழா எடுப்பார்கள்.
கண்ணன் ஆட்சிசெய்த துவாரகாபுரி, குஜராத் மாநிலத்தின் கடற்கரையோரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டு; 72 மிகப்பெரிய தூண்களைக் கொண்ட இக்கோயில், சுமார் 2000 வருடங்களுக்கு முன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இக்கோயில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதனை "துவாரகாதீஷ்' மற்றும் "ஜகத் மந்திர்' எனக் கூறுகின்றனர். இங்கு குடி கொண்டிருக்கும் கண்ணனை துவாரகையின் மன்னன் என்றழைக்கின்றனர். வடக்கில் ஒன்றும்; கிழக்கில் ஒன்றுமாக இக்கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. வடக்கு வாயிலுக்கு "மோக்க்ஷ துவாரம்' என்றும் கிழக்கு வாயிலுக்கு "சுவர்க்க துவாரம்' என்றும் பெயர். கருவறை உயரம் சுமார் 78 மீட்டர் உள்ளது. இதன் வழிபாட்டு முறைகள் குரு வல்லபாச்சார்யாரால் வகுக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகின்றது. இது 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று என திவ்ய பிரபந்தத்தில் தெளிவாக சொல்கிறது. 1963 -ஆம் ஆண்டிலிருந்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் இக்கோயிலை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து வருகின்றது.

இந்த கருவறையில் மேலுள்ள கலசத்திற்கு மிக அருகாமையில் ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரம்மாண்டமான வண்ணமயமான (ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணம்) கொடியினை ஏற்றுகிறார்கள். இந்த கொடியேற்றி இறக்கும் வைபவத்தை காண்பதற்கு பெரும் கூட்டம் கூடுகிறது. இதற்கு ஆகும் கட்டணத்தை கோயில் நிர்வாகத்தில்; நாம் அபிஷேகத்திற்கு பணம் கட்டுவோமே அதுபோல் கட்டினால், நமக்கு ஒரு நாள் மற்றும் நேரம் தருவார்கள். அந்த நாளில் இந்த கொடியேற்றப்படும். இக்கொடி இறக்கப்பட்டு வேறொரு கொடி ஏற்றப்படும். இறக்கப்பட்ட கொடி அதற்காக பணம் கட்டியவருக்கு பிரசாதத்துடன் கொடுக்கப்படும். இந்த கொடியினை ஏற்றி அதை தன்னுடன் வைத்துக் கொள்வதை அப்பகுதி மக்கள் தன் வாழ்நாளின் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். இங்கு ஜாதி, மத பேதமின்றி இந்த கண்ணன் எங்கள் மன்னன் அவரை வணங்கி அருள் பெறுவதில் எங்களுக்கு பேதமே இல்லை; நாங்கள் ஆசையோடு குடும்பத்துடன் இங்கு வந்து வழிபடுவோம் என்கிறார்கள்.
இவ்வாண்டு, இன்று (ஆகஸ்ட்- 23) வெள்ளியன்று ஒரே நாளில் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இதனை வட மாநிலங்களில் வெகு விமரிசையாக 3 நாள்கள் கொண்டாடுகிறார்கள். நம் தென்னாட்டில் அந்த நந்நாளில், வீட்டிலிருக்கும் குழந்தையின் பிஞ்சு பாதத்தை இழை கோலத்து மாவில் பதியவிட்டு அடியடியாக தோய்த்து; வாசலிலிருந்து பூஜை அறை வரையிலும், பாலகிருஷ்ணன் நம் வீட்டிற்குள் அடியெடுத்து உள்ளே வருவதாக கோலம் போட்டு; கண்ணனுக்கு பிடித்த முறுக்கு, வெல்ல சீடை, உப்பு சீடை, தட்டை, அதிரசம் போன்றவைகளை முன்னமே செய்து, அன்றைய தினம் வடை பாயசத்துடன் சாப்பாடு செய்து, பழம் பாக்கு வெற்றிலை; முக்கியமாக அவல் மற்றும் வெண்ணெய் வைத்து பூஜை செய்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்கிறார்கள். நாளெல்லம் என்றும் திருநாளே என்று அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அந்த அச்சுதனைக் கொண்டாடுவோம்!
- எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com