வெள்ளிமணி

பொருநை போற்றுதும்!55 டாக்டர் சுதா சேஷய்யன்

23rd Aug 2019 10:29 AM

ADVERTISEMENT

அரியநாயகிபுரக் கைலாசநாதர் திருக்கோயில், 16-17 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மிகச் சிறந்த திருமணப் பிரார்த்தனைத் தலம். 
அரியநாயகிபுரத்தை வடக்கு அரியநாயகிபுரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். நேர் எதிரில், பொருநையின் தென் கரையில், தெற்கு அரியநாயகிபுரம் என்றும் ஒரு சிற்றூர் உள்ளது. பொருநையின் தென்கரைக்கு வந்துவிட்டோமே, சேரன்மாதேவியையும் பத்தமடையையும் பார்க்காமல் பயணப்படமுடியுமா? 
சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர்தான், இப்போது சேரன்மாதேவி ஆகிவிட்டது. உள்ளூர்க்காரர்களுக்குச் செல்லமாகச் சேர்மாதேவி. சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது என்றும் சேரமன்னர் இதனைத் தம்முடைய மகளுக்குச் சீதனமாகத் தந்தார் என்றும் தெரிகிறது. 
கிழக்கே திருநெல்வேலியும் மேற்கே அம்பாசமுத்திரமும், இவற்றுக்கிடையே மையத்தில் அமைந்துள்ள சேரன்மாதேவி, அழகான ஊர். ஊருக்கு வடபுறத்தில் பொருநை ஆறு. தென்புறத்தில் கன்னடியன் கால்வாய். இதனால் நீருக்குப் பஞ்சமில்லாமல், வளமும் நலமும் செழித்ததாகவே இவ்வூர் இருந்துள்ளது. 
1940 - களில் இவ்வூர் எவ்வாறு விளங்கியது என்பதை சங்கரநயினார் கோயில் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை இவ்வாறு வர்ணிக்கிறார்: 
கன்னடியன் கால்வாய், ஆற்றங்கரைவரை சிறு சிறு கால்வாய்களின் வழியே ஓடிவந்து, அளவிடமுடியாத நஞ்சை நிலங்களைத் தட்டின்றி விளைவிக்கின்றது... ஊரின் நடுவே பல சிறு சிறு குளங்கள் உள்ளன... தண்பொருநையாற்றுக்கும் கன்னடியன் காலுக்கும் இடையே எங்கும் நஞ்சை நிலங்களினாலே சூழப்பெற்று இவ்வூர் விளங்குகின்றது. நெடுக வானளாவிய மரங்கள் இருக்கின்றன. ஆதலினாலே மிகக் கொடிய வெப்பத்தை உடையதேனும் இவ்வூர் வாழ்க்கைக்கு வசதியானது. 
1900 -களின் தொடக்க காலங்களில் வடக்குக் காருக்குறிச்சியும் சேரன்மாதேவியோடு சேர்த்தே பார்க்கப்பெற்றது. அம்மைநாதர் திருக்கோயில், வைத்தியநாத சுவாமி திருக்கோயில், பக்தவத்சல விஷ்ணு கோயில், கொழுந்து மாமலை முருகன் கோயில், நடுவுள் அப்பர் கோயில், அப்பன் வேங்கடாசலபதி கோயில், தெய்வீச்சரமுடையார் கோயில் என்று ஏராளமான கோயில்களால் புகழ்பெற்ற இவ்வூரில், ரயில் நிலையம் அமைந்திருக்கிற பகுதிக்கு, முன்பெல்லாம் சேரன்கோவில் பத்து என்று பெயர். இந்தப் பகுதியில்தான், சேரர் அரண்மனை இருந்ததாம். கோ + இல் = கோயில்; கோ = அரசன்; கோ இல் = அரசனின் அரண்மனை. 
பொருநையாற்றின் குறுக்கே இருக்கும் ரயில் பாலத்திற்கு அருகில், ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது, அருள்மிகு அம்மைநாதசுவாமி ஆலயம். 1902 -இல் முதலில் கட்டப்பட்ட ரயில் பாலம், 1914 மற்றும் 1923 ஆண்டுகளின் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுச் சிதிலமாகிப் பின்னர் வலுவானதாக அமைக்கப்பட்டது. 
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர், பொருநையாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவ திருக்கைலாயக் கோயில்களில், சேரன்மாதேவி அருள்மிகு ஆவுடையம்மை உடனாய அருள்மிகு அம்மைநாதசுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். மார்கழி மாத வியதீபாத நாளில், தன்னுடைய பாவங்களைப் போக்கிக்கொள்வதற்காக கங்காதேவி, சேரன்மாதேவி அம்மைநாதசுவாமியை வழிபட்டுப் பொருநையில் மூழ்கி எழுகிறாள் என்பது ஐதீகம். இதனால், இந்த நாளில், பொருநைக்கரையில் பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். 
- தொடரும்...

ADVERTISEMENT
ADVERTISEMENT