வெண்ணெய் கண்ணன்!

கண்ண பெருமானின் விளையாட்டுகள்தான் எத்தனை எத்தனை? அவற்றில் ஒன்று நடந்த இடமே திருக்கண்ணங்குடி!
வெண்ணெய் கண்ணன்!

கண்ண பெருமானின் விளையாட்டுகள்தான் எத்தனை எத்தனை? அவற்றில் ஒன்று நடந்த இடமே திருக்கண்ணங்குடி!
 ஒருமுறை திருமால் ரிஷிகள் வேண்ட, அவர்களுக்கு காட்சி கொடுத்து அருள நினைத்தார். வசிஷ்டர், வெண்ணெய்யைக் கொண்டு கிருஷ்ண விக்ரகம் ஒன்று செய்து இளகாத வகையில் வைத்து நாராயணனை மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார். பகவான் கிருஷ்ணன், வசிஷ்டரை சோதிக்க ஒருநாள் அவரே குழந்தையாக வந்தார். வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய் கிருஷ்ணனை வாயிலிட்டுக் கொண்டு தளிர் நடையும் ஓட்டமுமாக ஓடினார். இதைக் கண்டு பதறி, வசிஷ்டர் குழந்தை கிருஷ்ணனை துரத்த, குழந்தை இந்த கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில்சென்று பதுங்கியது. அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனை யார் என்று அறியாமல் தாம்பால் கட்டிப் போட்டு தங்க வைத்து அங்கேயே குடிகொள்ளச் செய்ததால் இத்தலத்திற்கு திருக்கண்ணங்குடி என்று பெயர் வந்தது.
 திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயில் திருமதில் திருப்பணி செய்வதற்காக நாகப்பட்டினத்திலிருந்து ஏராளமான பொன்னும் மணியும் பொருளும் கொண்டு வந்து கொண்டிருந்தார். இந்த இடத்தைக் கடக்கும் போது, நள்ளிரவானதால் ஓய்வெடுக்க விரும்பினார். இத்தலத்தில் உள்ள சேற்றிலே கொண்டு வந்ததைப் புதைத்து விட்டு அருகில் உள்ள ஒரு புளியமரத்தின் அடியில் சென்று, "நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்காமல் இதனைப் பார்த்துக்கொள்' என்று புளிய மரத்திடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்று விட்டார். புளிய மரமும், திருமங்கையாழ்வார் சொல்படி உறங்காமல் அந்த பொருட்களைக் காத்தது. அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு "உறங்காப் புளிய மரம்' என்ற பெயரும் உண்டு.
 இங்குள்ள கிணறுகளில் தண்ணீர் எவ்வளவு தோண்டினாலும் தென்படுவதில்லை. இந்த ஊரில் என்ன வழக்கு துவங்கினாலும் அது கூடுமானவரை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் தேரா வழக்காகவே }முடிவில்லாத வழக்காகவே இருந்து வருகிறது எனப்படுகிறது.
 இத்தலத்தின் தலவிருட்சம் மகிழ மரமாகும். இம்மகிழ மரத்தடியில் கிருஷ்ணலீலை நடந்ததென்றும் அதன் அடியில் திருமங்கை ஆழ்வார் பசியால் வாடியிருந்தபோது பகவான் வந்து பசியாற உணவு கொடுத்ததாகவும் அதனால் அந்த மகிழ மரத்தை எப்போதும் பசுமையாக இருக்க கூறியதாகவும் அதனால் அது காயா (த) மகிழ் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வூரை காயாமகிழ், ஊறாக்கிணறு, உறங்காப்புளி, தீராவழக்கு திருக்கண்ணங்குடி என்ற பழமொழி இவ்வூரைப்பற்றிச் சொல்லுவது வழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
 இங்கு, நாராயணர் முதலில் கிருஷ்ணராகக்காட்சி தந்து பின்னர் நாராயணத் திருவுருவைக் காட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் கருவறையிலிருந்து காட்சி தருகிறான். இறைவனை பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிட்டர், பிருகு, மாடரர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தரிசித்துள்ளனர். இங்குள்ள பெருமாள் உத்பல விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்.
 பெருமாள் கிருஷ்ணாவதாரராக இருப்பதால் சியாமளமேனிப் பெருமாள், உலகப் பிரளய காலத்தில் ஆலிலையின் மீது உலகைக் காப்பதற்காக வந்த பெருமாள் ஆதலால் உலகநாதப் பெருமாள், கிருஷ்ணாவதாரத்துடன் தொடர்புடையவராதலால் மூலவர் தாமோதர நாராயணப்பெருமாள் என அழைத்து வணங்கப்படுகின்றார். தாயார் தனிக்கோயிலில் அரவிந்தநாயகி என்றும்; உற்சவர் தாயார் லோகநாயகி என்ற பெயரோடும் அருள் வழங்குகின்றனர்.
 பரம்பரை சொத்துக்கள் கைவிட்டு போகாமல் இருப்பதற்கும், குலமக்கள் வழி தவறி நடக்காமல் இருப்பதற்கும் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த தலம் நன்மையைச் செய்யும் எனப்படுவதற்கு குறிப்புகள் உள்ளன. இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்து அர்ச்சனை செய்தால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும் எனப்படுகிறது.

ஐந்து நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பத்தி உலாத்தல் மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபமும் கொண்ட மூலவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தன்னை தரிசிக்க விரும்பிய ரிஷிகளுக்கு முதலில் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் உருவை காட்டியதால் ஸ்ரீ ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 எதிர்வரும், 23.08.2019 அன்று இரவு 12.40 மணிக்கு மேல் நெல்லுக்கு பாலால் சந்திரார்க்யம் செய்த பிறகு சந்தான கிருஷ்ணனுக்கு திருமஞ்சனம் திருவாராதனம் செய்யப்படும். சீடை, முறுக்கு, சுயம், அப்பம், வடை, சுக்கு, வெல்லம், திருக்கண்ணமுது, பால் பாயசம், வெண்ணெய் ஆகியவையும் செய்து நைவேத்தியம் செய்து எழுந்தருளச் செய்யப்படும்.
 மறுநாள் உற்சவர் தாமோதர நாராயணப் பெருமாள் எழுந்தருளி திருவீதி கண்டருளி அங்கு உரியடி நடந்து திருவீதி உலா வந்து மீண்டும் கோயிலை அடைவார்.
 நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும் இந்தக் கோயில் உள்ளது.
 தொடர்புக்கு: 97513 75171 /
 94435 25907.
 - இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com