புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 21

இயேசுவின் தந்தையின் சொந்த ஊர் அன்றைய யூதேயா தேசத்தின் பெத்லஹேம். யூதேயா தேசத்தை ஆண்ட தாவீது மன்னரின் சொந்த ஊரும் பெத்லஹேம் தான். தாவீதின் மகன் சாலமோன் மன்னர்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 21

இயேசு பிறந்த பெத்லஹேம் (பாலஸ்தீனம்)
இயேசுவின் தந்தையின் சொந்த ஊர் அன்றைய யூதேயா தேசத்தின் பெத்லஹேம். யூதேயா தேசத்தை ஆண்ட தாவீது மன்னரின் சொந்த ஊரும் பெத்லஹேம் தான். தாவீதின் மகன் சாலமோன் மன்னர் தான் எருசேலம் தேவாலயத்தை கட்டினார். இந்த வம்சத்தில் பிறந்தவர் தான் யோசேப்பு. யோசேப்புக்கு மகனாக, ராஜ வம்சத்தில் பிறந்தாலும் எளிமையாக, தாழ்மையான மாட்டுக்கொட்டகையில் தான் இயேசு பிறந்தார்.
பெத்லஹேம் என்றால் "அப்பத்தின் வீடு' என்று எபிரேய மொழியில் பொருள்படும். 
இப்போது பெத்லஹேம், பாலஸ்தீன நாட்டில் உள்ளது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் தான் பெத்லஹேம் உள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள எருசலேம் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் தான் பெத்லஹேம் உள்ளது. இது பாலஸ்தீன நாட்டில் இருந்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்பில் தான் வைக்கப்பட்டுள்ளது.
விவிலியத்தின்படி, யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன (லூக்கா 2:1-5). யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாளை கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லஹேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை சத்திரத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையை துணிகளில் பொதிந்து, அங்கிருந்த தீவனத் தொட்டியில் கிடத்தினார் (லூக்கா 2:1-7).
இயேசு பிறந்த சத்திரம் உள்ள குகைக்கு மேல் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இது CHURCH OF NATIVITY என அழைக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற 4 தேவாலயங்களில் இதுவும் ஒன்று. இந்த தேவாலயத்தில் தான் புனித பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. நீண்ட வரிசையில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாகவது காத்திருந்து தான் இயேசு பிறந்த இடத்தை காண முடியும்.
இயேசு பிறந்த பின்னர், கிடத்தப்பட்ட இடத்தில் தங்க நிறத்தில் ஒரு நட்சத்திரம் பதித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தை புனிதப் பயணிகள் முகம் குப்புற கவிழ்ந்து முத்தமிட்டு பின்னர் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். 
ஆடு மேய்ப்பர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்ட இடம்:
இயேசுவின் பிறப்பு முதலாவதாக, ஆடு மேய்ப்பர்களுக்குதான் வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள்.
விவிலியத்தின் லூக்கா 2-ஆம் அதிகாரம் 8 முதல் 18 வசனங்களின்படி அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: "பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்' என்றான்.
அந்த கணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக' என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: "நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்' என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகள் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 
இச்சம்பவம் நடந்த இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆடு மேய்ப்பர்கள் தங்கியிருந்த குகை இப்போதும் உள்ளது. இரு வகை குகைகள் உள்ளன. ஒன்று குளிர்காலத்தில் தங்குவதற்கும், மற்றொன்று கோடை காலத்தில் தங்குவதற்கும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
- ஜெபலின் ஜான்
(தொடரும் )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com