வேகமாய் வந்த மாருதி! 

தன் அவதார நோக்கம் முடிந்தவுடன், ஸ்ரீராமபிரான் தன் தம்பிமார்கள் மற்றும் முக்கிய பந்துக்களுடன் சரயு நதியில் இறங்கி ஸ்ரீவைகுண்டம் ஏகும் தருணத்தில், ஆஞ்சநேய ஸ்வாமி மட்டும் வரமறுத்துவிட்டாராம்.
வேகமாய் வந்த மாருதி! 

தன் அவதார நோக்கம் முடிந்தவுடன், ஸ்ரீராமபிரான் தன் தம்பிமார்கள் மற்றும் முக்கிய பந்துக்களுடன் சரயு நதியில் இறங்கி ஸ்ரீவைகுண்டம் ஏகும் தருணத்தில், ஆஞ்சநேய ஸ்வாமி மட்டும் வரமறுத்துவிட்டாராம். ஏன்? என்று ராமர் வினவியதற்கு "ராம நாமத்தையே தான் சதா சர்வகாலமும் உச்சரித்துக் கொண்டு, ராமாயணம் சொல்லப்படும் இடங்களிலேயே தான் இருக்க விரும்புவதாகவும் அது இங்குதான் சாத்தியம்' என்றும் கூறிவிட்டாராம்.
 புராணங்கள் மூலம் அறியப்படும் இந்த அற்புத நிகழ்வை நிரூபணம் செய்வது போல் ஆஞ்சநேய பகவானின் சாந்நித்யம் இப்பூவுலகில் எங்கும் வியாபித்து அவ்வப்போது வெளிப்படுகின்றது என்பதே உண்மை. எங்கெல்லாம் ரகுநாதனுடைய புகழ்பாடப்படுகிறதோ அங்கெங்கெல்லாம் தலைக்கு மேல் கூப்பியகரங்களுடன் இருப்பவர் என்ற ஐதீகத்தில் ராமாயண பிரவசனங்கள் நடக்கும் இடங்களில் அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு பலகை ஆசனம் போடப்பட்டு, அதன்மேல் கோலமிட்டு வைக்கப்படும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
 இப்பாரததேசத்தில் ஸ்ரீ ராமபக்த அனுமான் பல்வேறு ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டோ அல்லது அவருக்கென்று அமைக்கப்பட்ட பிரத்யேக ஆலயத்திலோ அர்ச்சாவதார ரூபத்தில் பல்வேறு கோலங்களில் நமக்கு தரிசனம் தருகின்றார். அவ்வாறு அவர் திருக்கோயில் கொண்டு அருள்புரியும் ஆலயங்களில் ஒன்றுதான் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில், கே.ஆர்.புரம் அருகில் கல்கரே, என்.ஆர்.ஐ. லேஅவுட் என்ற பகுதியில் ராமமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயஸ்வாமி ஆலயம். தெய்வ சங்கல்பங்கள் மனிதன் மூலம் நிறைவேறுமென்ற உண்மை, இந்த அனுமன் ஆலயம் அமைக்கத் திட்டம் போட்டதிலிருந்தே அறியப்பட்டது.
 அது, 2006 -ஆம் ஆண்டு, இக்கலியுகத்தில் நாம் உய்வதற்கு ராமநாமத்தின் மகிமையை நமக்கு போதித்து வரும் குருஜி மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜியை இப்பகுதிக்கு அவருடைய அபிமானிகள் அழைத்து வந்தனர். ஒரு காலத்தில் தோப்புகள் நிறைந்த பகுதியாக இருந்ததாம். மைதானத்தில் அவர் அமர்ந்திருக்க, சுற்றிவர ஓரிரு பக்தர்கள் குழுமியிருந்தனர். அங்கு ஓர் ஆலயம், வேதபாடசாலை அமைய வேண்டும் என்று தங்கள் அவாவினை வெளிப்படுத்தி, அதற்கான இடத்தையும் அளிக்க முன்வந்து அவரின் அருளாசிக்கு காத்திருந்தனர். கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்த குருஜி சிறிது நேரத்தில் கண்விழித்து அப்பகுதி முழுவதும் ஆஞ்சநேயபகவானின் சாந்நித்யம் நிரம்பியிருப்பதாக உள்ளது என்று கூறிக்கொண்டே தன் கை விரலை மேலே சுட்டிக்காட்ட ஆகாயத்தில் மேகக்கூட்டங்களின் நடுவில் ஒரு மேகம், வாயுபுத்ரன் சஞ்ஜீவினி மலையை தூக்கிச் செல்லும் ரூபத்தில் புலப்பட்டது.
 அந்த அற்புதக் கோலத்தினை கண்டவர்கள் மெய்சிலிர்த்தனர். சில நொடிகளே காட்சி கொடுத்ததை, அத்தாட்சியாகக்கொண்டு கட்டப்பட்டதே இந்த சுந்தர ஆஞ்சநேயர் ஆலயம். குருஜியின் திருக்கரங்களினால் 2008 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இங்கு கோயில் கொண்டுள்ள மூலவருக்கு சுந்தர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் அவரால் சூட்டப்பட்டதேயாகும்.
 வேத வியாஸ புராண பாடசாலை வளாகத்தில் ஒரிஸா மாநில கட்டடக்கலை பாணியில் பூரி ஜகந்நாதர் கோயில் போன்று கட்டப்பட்டது இந்த ஆலயம். ஏக கலச விமானத்துடன், மிகவும் கண் கவரும் வண்ணம் முன்மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கலசத்தை தாங்கும் சிகரத்தின் கீழ் நான்கு புறமும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுதை உருவங்கள் அமைத்திருப்பது தொலைவில் இருப்பவர்களும் அது ஓர் அனுமன் ஆலயம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மகான் துளசிதாஸரின் "ஸ்ரீ ஹனுமான் சாலீஸா' ஸ்தோத்திரங்கள் கன்னடத்திலும், ஹிந்தியிலும் விதானங்களில் ஆலயத்தை சுற்றிலும் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதைப் பாராயணம் செய்து கொண்டே ஆலயத்தை வலம் வந்தால் சுந்தரகாண்டப் பாராயணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகின்றது.
 கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் கருவறையில் மூலவர் சுமார் 12 அடி உயரத்தில் திருமுகமண்டலம் தெற்கு நோக்கியிருக்க, வலது கை அபயஹஸ்தத்துடன் இடதுகை கதையை தாங்கிய வண்ணம் வலது பாதம் சற்று தூக்கிய நிலையிலும் நின்ற கோலத்தில் உள்ள அற்புதமான சேவையை நாம் பார்க்கலாம். கண் நிறைந்த காட்சி. கையில் ராமநாம இலச்சினையும், திருமார்பில் ராமர், சீதையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட ஆபரணமாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. வால் தலையைச் சுற்றுவர நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயபகவானின் திருமுகம் பார்க்கும் திசையில் கருவறையிலேயே ஸ்ரீராமபிரான் சீதாப்பிராட்டி, லட்சுமணருடன் காட்சியளிக்கின்றார்.
 ஓடி வந்து அனுக்கிரஹம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ள இந்த கோலத்தில் உள்ள சிறிய திருவடியை தரிசிப்பவர்களுக்கு நவக்கிரக தோஷம், துர்தேவதைகளால் பாதிப்பு முதலியவை விலகும் என்றும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கும், நல்லதெல்லாம் நடக்கவும் வாழ்வில் ஒரு முறையாவது இங்கு வந்து தரிசித்தால் நிச்சயம் பலன் உண்டு என்றும் குருஜி அமுத அருள்வாக்காக கூறியுள்ளார்.
 ஸ்ரீ முக்ய ப்ராண சேவா டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் திறம்பட நிர்வகிக்கப்படும் இவ்வாலயத்தில் தினசரி ஐந்துகால பூஜைகளும், பக்தர்களுக்காக வடைமாலை சாற்றுதல் போன்ற பிரார்த்தனைகளும், சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து முக்கிய விசேஷ நாள்களும் முறையாக நடத்தப்படுகின்றது. மகான் ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகளும், தேனி சுவாமிகளும் இங்கு விஜயம் செய்து அருளாசி வழங்கியுள்ளார். ஆலயத்தை ஒட்டியுள்ள கல்யாண மண்டபத்தில் ப்ரவசனங்கள், கல்யாண உத்ஸவங்கள், சிறப்பு பாராயணங்கள் நடந்த வண்ணம் இருக்கும்.
 இவ்வாலயத்தில் ஏப்ரல் 23 முதல் 29 வரை பிரதிஷ்டா தின விழாவை முன்னிட்டு சுந்தரகாண்ட பாராயணம், பாகவத பிரவசனம் போன்றவைகள் நடைபெறுகின்றது. ஏப்ரல் 24 -ஆம் தேதி, 11-ஆவது பிரதிஷ்டா தினத்தன்று ஹனுமந்த மூல மந்திர ஜபத்துடன், திருமஞ்சனம், அலங்காரங்கள், ஆர்த்தி, அன்னதானம் போன்றவைகளும், மாலை சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலாவும் நடைபெறும். இவ்வைபவங்களில் பங்கேற்கும் பக்தர்கள் ஆஞ்சநேயர் கிருபையுடன், குருஜியின் தரிசனமும், அருளாசியும் பெறலாம்.
 தொடர்புக்கு: 98450 22033 / 98860 06363.
 - எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com