புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

ஸ்தான அமைப்பு!

DIN | Published: 19th April 2019 10:56 AM

பொதுவாக, ஜெனன லக்னத்திற்கு 3,6,11 ஆகிய ஸ்தானங்களில் ராகுபகவான் இருப்பது நல்லது. அதிலும் 6- இல் ராகுபகவான் இருப்பது மிக மிக நல்லது. அதிலும் அந்த ராகுபகவான் தனித்து இருப்பது நல்லது. அப்படிப்பட்ட ஜாதகர் அரசாங்கப் பிடியில் சிக்கமாட்டார். விஷ ஐந்துக்கள் கடித்தாலும் அவருக்கு விஷம் ஏறாது. எடுத்த காரியங்களை அடுத்து முடிக்கக் கூடியவராவார்.
 இதனால் 6-இல் ராகுபகவான் பன்னிரண்டில் கேதுபகவான் என்ற கிரக பலம் இருப்பதால் அந்த ஜாதகருக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகளும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி விடும்.
 ராகு- கேது பகவான்களின் விசேஷமே தனி. அவைகளுக்கு அஸ்தாங்கத தோஷம் கிடையாது. வக்கிரம் கிடையாது. திதி சூன்ய தோஷம் கிடையாது. கிரக சக்திகளில் ஏழு கிரகங்களை விட அதிக சக்தி வாய்ந்தது ராகுபகவான் என்றும், அதைவிட அதிக சக்தி வாய்ந்தது கேதுபகவான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
 மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் எங்காவது கருநாகம் என்று சொல்லக்கூடிய ராகுபகவான் இருப்பாரானால் அந்த ஜாதகருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையின் மீது படுத்து உறங்கும் பாக்கியம் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது முழுமையான பலன்களை எப்பொழுது தரும் என்று பார்த்தால் மேற்கண்ட வகையில் இடம் பெற்றுள்ள ராகுபகவானுக்கு 1, 4, 7, 10 -இல் பிற கிரகங்களும் கூட பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்லுகிறது.
 அதற்கான பாடல்:
 "ஆமேடம் எருது, சுறா நண்டு கன்னி
 ஐந்திடத்தும் கருநாகம் அமர்ந்து நிற்கில்
 பூமேடை தனிற்றுயிலும் ராஜயோகம்
 போற்றிடுவர் வேறின்னம் புகலக் கேளாய்
 ஏமாறாறே நான்கு கேந்திரத்தும்
 இடைவிடாமற் கிரகமிருந்த தாகில்
 தேமேற பர்வத மாம் யோகமாகும்
 சீமானாகுபவன் ராஜ யோகஞ் செய்யே''
 வளர்பிறை சந்திரனாக இருந்து அச்சந்திரபகவானுக்கு இரண்டில் அல்லது பன்னிரண்டில் ராகுபகவான் தனித்து இருந்தால், செய்யும் செயல்களில் அடிக்கடி முட்டுக்கட்டை ஏற்படும். முற்பிறவியில் விட்டுவந்த பூர்வஜென்ம வினைப்பயனையும் சேர்த்து இந்த ஜென்மத்தில் வாட்டி வதைக்கக்கூடியதாகவே இந்த ராகுபகவான் வாழ்நாள் முழுவதும் செயல்படுவார். குடும்பம், பொருளாதாரம் ஆகிய இரண்டும் பிரச்னைகளைத் தருவதாகவே இருக்கும்.
 அஷ்டமமான எட்டாமிடத்து கேதுபகவானும் ராகுபகவானும் அசுப பலன்களைத் தருவார்கள். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகுபகவான் இருந்தால் பிதுர்வழி முன்னேற்றம் தடைப்படும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவான் இருந்தால் ஜாதகரின் உடல் நலத்தை பாதிப்படையச் செய்வார். இப்படிப்பட்ட அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள் துர்க்கையம்மனையும், விநாயகப் பெருமானையும் வழிபட்டு வரலாம். திருபுவனம், திருப்பாம்பரம், நாகர்கோவில், பேரையூர், கீழ்ப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வர, கஷ்டங்கள் மறையும்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மன மாசு அகற்றும் மந்திரம்!
வெண்ணெய் கண்ணன்!
பொருநை போற்றுதும்! 54 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 21
நிகழ்வுகள்