வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

பொருநை போற்றுதும்! 37 - டாக்டர் சுதா சேஷய்யன்

DIN | Published: 19th April 2019 11:05 AM

சிங்கம்பட்டி ஜமீன்தார்கள், சமூகப் பணிகளில் ஆர்வம் மிக்கவர்கள். மேற்கூறிய வழக்குப் பிரச்சனையின்பொழுது மூத்த ஜமீனாக இருந்தவர் 29- ஆவது பட்டம் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி அவர்கள் (சங்கரசிவசுப்பிரமணிய தீர்த்தபதி அவர்களின் தந்தை). அம்பாசமுத்திரத்தில் பொது மருத்துவமனை தொடங்குவதற்கும் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கும் உதவியதால், இன்றும் இவை, தீர்த்தபதி மருத்துவமனை என்றும் தீர்த்தபதி பள்ளி என்றும் அழைக்கப்படுகின்றன.
 1899- இல் தொடங்கப்பட்டு 120 ஆண்டுகளைக் கண்டிருக்கும் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்ற சான்றோர் பலரைத் தமிழகம் அறியும். தம்முடைய 39 வயதிலேயே உயர்நீதிமன்ற நீதிபதி ஆனவரும் திருப்புடைமருதூரில் பிறந்தவருமான நீதியரசர் ரத்னவேல் பாண்டியன், தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானும் நெல்லை ஆம்பூர்க்காரருமான பெரியவர் ஏ.என்.சிவராமன், மிகப் பெரும் தமிழறிஞரும் கீழப்பாவூர் அடைக்கலப்பட்டணம் பகுதியில் தமிழூர் என்னும் ஊரையே உருவாக்கிய வருமான பெரியவர் ச.வே.சுப்பிரமணியம் ஆகியோர் இப்பள்ளியில் பயின்றவர்கள் ஆவர்.
 தோழமைக்காகத் தூக்கேறிய
 சிங்கம்பட்டியார்
 திரை ரசிகர்களின் நாவில், சமீபகாலமாகப் புழங்கும் ஒரு பெயர் "தூக்குத் துரை'. இந்தத் தூக்கு துரைக்கும்கூட சிங்கம்பட்டியோடு சம்பந்தம் இருக்கிறது.
 அது 1834 -ஆம் ஆண்டு. அப்போதைய ஜமீன்தார் பெரியசாமித் தேவர், இள வயதுக்காரர். வயதின் முறுக்கும் வளமையின் செருக்கும் சேர்ந்து கலந்த சினத்துக்குச் சொந்தக்காரர். இவருடைய நண்பர் ஒருவர், கிழக்கிந்தியக் கம்பெனி அரசால் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த நண்பருக்குத் தூக்குத் தண்டனை என்னும் செய்தி இவர் செவிகளை அடைந்தது. நண்பரைக் காப்பாற்றுவதற்கான வழிகளைத் தேடினார். ஏகாதிபத்திய அரசிடம் என்ன சொல்லியும் பயன் இல்லை என்பதை உணர்ந்தார். வடநாட்டு நண்பர்கள் பலரோடு பழகியதால் தனக்குக் கிட்டிய பழக்கங்களையும் தன்னுடைய சிவந்த ஆஜானுபாகுவான தோற்றத்தையும் பயன்படுத்தி, யுக்தியொன்றை உருவாக்கிக் கொண்டார்.
 வடநாட்டுக்காரர் போல் நடை உடை பாவனையை மாற்றிக்கொண்டு ஹிந்துஸ்தானியும் கொச்சைத் தமிழுமாக மதுரைச் சிறையின் காவலரான நானா சாஹிப் முன்னர் நின்றார். இன்னொரு நண்பர் மூலமாக நானா சாஹிப்புக்கு அறிமுகச் சாற்று வாங்கிக் கொண்டு, பழங்களும் துணியும் பரிசுகளுமாக நின்றார். சிறைக் காவலரோடு நட்பு உருவானது.
 இந்த நட்பை வைத்துக் கொண்டு, சிறைக்குள்ளும் போக வரத் தொடங்கினார்; கைதிகளுக்கு இனிப்புகள் கொடுத்து பேச்சு வார்த்தையாடி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்; இடையே நண்பரைச் சந்தித்து தைரியமும் தந்தார். எப்படியாவது நண்பரைத் தப்புவித்து விடவேண்டும் என்று காத்திருந்தார்.
 ஒருநாள், நானா சாஹிப்பும் பெரியசாமித் தேவரும் வைகைக் கரைக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. வைகையாள் வாழ்த்தொலிக்க... நட்புரிமை சலசலக்க... தன்னுடைய நண்பரை விட்டுவிடும்படியாகத் தேவர் விண்ணப்பம் வைக்க... அரசு அதிகாரி என்னும் மதர்ப்பும் உள்ளே போயிருந்த மதுவும் கொடுத்த துணிச்சலில் நானா சாஹிப்பின் சொற்கள் கொந்தளிக்க... வாய்கலப்பு கைகலப்பாக... எப்படியோ நானா சாஹிப் இறந்து விடுகிறார்.
 தன்னுடைய குதிரைச் சேணத்துடன் காவலர் உடலைக் கட்டி, அவசர அவசரமாக வைகை மணலில் புதைத்துவிட்டுச் சிறைச்சாலைக்குச் சென்ற ஜமீன்தார், அங்கிருந்தவர்களிடம் நைச்சியமாகப் பேசி நண்பரை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்.
 காவலரைக் காணோம் என்று அனைவரும் தேட... வைகை மணல் உடலை நாய்கள் இழுத்துப் போட... சேணத்தின் அடிப்பகுதி முத்திரை சிங்கம்பட்டி ஜமீன் சின்னம் என்று அடையாளம் காணப்பட்டு, ஜமீன்தார் கைது செய்யப்பட்டு, ஆங்கிலேய அதிகாரிகள் முன்னர் வழக்கு நடந்து, பெரியசாமித் தேவருக்குத் தூக்குத் தண்டனை உறுதியானது.
 இறந்துபோன நானா சாஹிப்பின் மனைவிக்கு ஆத்திரமான ஆத்திரம். அதன் எதிரொலியாகக் கலெக்டர் ராட்டன் (Collector J.C.Wroughton) அவர்களிடம் ஆக்ரோஷமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். சிங்கம்பட்டி மக்கள் முன்னிலையில், சிங்கம்பட்டி ஜமீன் எல்லைக்குள்ளேயே, பட்டபகலில் ஜமீன்தார் தூக்கிலிடப்படவேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள்.
 1834 -ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி. தூக்குத் தண்டனை நிறைவேற வேண்டிய நாள். ஊர்ஜனமெல்லாம் குழுமிக் கண்ணீர் வடிக்க... "பரவாயில்லை, எனக்கென்ன குடும்பமா குட்டியா? மரணத்தைப் பற்றி நானேன் கவலைப்படவேண்டும்?' என்று கேட்டுக்கொண்டே நெஞ்சு நிமிர்த்தி வந்தார் ஜமீன்தார்.
 தூக்குமரத்தை இவர் நெருங்கமுடியாதபடிக்குக் கூட்டம் தடுத்தது. கட்டப்பட்டிருந்த தன்னுடைய கைகளை அவிழ்த்துவிடச் சொன்னவர், சிலம்பக் கம்பு ஒன்று கேட்டார். சிலம்பாட்டம் நன்றாகத் தெரிந்த தான், சிலம்பமாடிக் கொண்டே தூக்கு மரம் நோக்கி நடந்தால், சிலம்பம் படாமலிருக்க மக்கள் வழி விடுவார்கள் என்றும், அதை வைத்துத் தூக்கு மரம் வந்துவிடுவதாகவும் வழி கூறினார்.
 ஜமீன்தார் தூக்கிலிடப்படுவதை நேரடியாக மேற்பார்வை பார்க்க வந்து நின்றிருந்தார் கலெக்டர் ராட்டன். பெரியசாமித் தேவரின் துணிச்சலையும் முரட்டுத்தனமானவராக இருந்தாலும் ஏதோவொரு விதமான நேர்மை இவரிடம் இருப்பதையும் கண்டு வியந்த கலெக்டர், ஜமீன்தாரிடம் பேச்சுக் கொடுக்க, கிழக்கிந்திய கம்பெனியாரின் ஏகாதிபத்தியத்தால் வெறுப்பு கொண்டிருந்த ஜமீன்தார் இடக்கு மடக்காக விடை கூற... கலெக்டருக்கும் கோபம் தலைக்கேறியது. இதற்கிடையில், திருமணமாகாத ஜமீன்தார் இறந்துபோனால், வாரிசுப் பிரச்னை உருவாகுமே என்றெண்ணிய மதராஸ் கம்பெனி அரசாங்கம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக்கும்படி, கலெக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பியது.
 தன்னிடம் ஏடாகூடமாகப் பேசிய கோபத்திலிருந்த கலெக்டர், அவசரச் செய்தியையும் கண்டுகொள்ளவில்லை; நெஞ்சின் கடைக்கோடியில் தலைகாட்டிய அனுதாபத்தையும் கண்டுகொள்ளவில்லை. அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட... கம்பீரமாகத் தூக்குமரம் ஏறிய பெரியசாமித் தேவரும் நண்பரைக் காப்பாற்றும்பொருட்டுத் தாமே தண்டனைக்குள்ளான இவரின் பெருந்தன்மையும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டன.
 - தொடரும்...
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!
கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!
பொருநை போற்றுதும்!55 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22
உளமே உயர்வின் தளம்