செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சிந்தனையை சிறக்க வைக்கும் சித்ரா பௌர்ணமி!

DIN | Published: 19th April 2019 11:06 AM

யமதர்மராஜன் தன் வேலைப்பளுவின் காரணமாக தனக்கு உதவ ஓர் உத்தம உதவியாளர் தேவை என சிவனாரிடம் முறையிட்டான். நம் அனைவரின் செயல்களான பாவ, புண்ணிய விதியினை எழுதி, பொதுக்கணக்கை நிர்வகிப்பதற்காக சித்ரகுப்தனை (சம்ஸ்க்ருதத்தில் சித்ரம் என்றால் படம்/ ஓவியம் என்றும் குப்தா என்றால் மறைந்திருத்தல் என்றும் பொருள்) பார்வதி தேவிக்கு மகனாக ஓர் ஓவியம் மூலம் சித்ரபுத்ரன் என்ற பெயருடன் உருவாக்கி; பின்னர் காமதேனுவின் வயிற்றில் பிறக்க வைத்தார். தமிழ் சித்திரை மாத முழுநிலவான "சித்ரா பெüர்ணமி' அன்று சித்ரகுப்தன் பிறந்தார் என்று பத்ம புராணம் சொல்கிறது.
 தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் தன் குருவின் பேச்சினை இந்திரன் உதாசீனம் செய்து பல தவறுகளை செய்ய ஆரம்பித்தான். குரு ப்ருஹஸ்பதியும்; இந்திரன் தானே அனுபவப்பட்டு வரட்டும் என்று ஒதுங்கியிருந்தார். இதனால் இந்திரனின் பாவச்சுமை ஏறிக்கொண்டே சென்றது. ஒரு நாள் தன் குருவை பார்க்க வந்த இந்திரன் தன் தவறை உணர்ந்து வருந்தினான். இதற்கு ப்ராயசித்தமாக இந்திரனை; பூலோகத்திற்கு புனித யாத்திரை சென்று வர பணித்தார். அதன்படி, தன் கர்ம வினை அகல இப்பூவுலகிற்கு வந்து எம்பெருமான் சிவனடி தொழுதலே சிறந்தது என முடிவெடுத்து ஒரு சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து தங்கத்தாமரையினால் அர்ச்சிக்க தேர்ந்தெடுத்த நாளே சித்ரா பெüர்ணமி ஆகும்.
 சித்ரகுப்தருக்கு காஞ்சிபுரத்திலும், கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயிலிலும், திருவக்கரையிலுள்ள சந்திரமெüளீஸ்வரர் கோயிலிலும் சந்நிதி உள்ளது. நமக்குத் தெரியாமல் நம்மைத் தொடரும் முற்பிறவி எதிர்வினை கர்மாக்கள் இந்த நாளில் சித்ரகுப்தரை வணங்கி வழிபட்டால் நம்மை விட்டு அகலும் என்பது தீர்ப்பு.
 தென்தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த நாளன்று அங்கு ஓடும் சித்ரா என்ற ஆற்றில் நன்னீராடி, உபவாசம் இருந்து சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் உப்பில்லாத அனைத்து பண்டங்களும் படைத்து வழிபடுவார்கள். இப்படி வழிபாடு செய்தால் நம் பாவ வினைகள் அகலும் என்பது ஒரு மரபு. பசும்பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அருந்துவதை இந்த நாளில் தவிர்த்து (காமதேனுவின் புதல்வன் ஆகையால்); பூஜை முடிந்தபின் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளுடன் தட்சிணையை ஒரு முறத்தில் வைத்து ஆற்றங்கரையில் வறியோர்க்கு (ஏழை எளியோர்) தானம் செய்வார்கள்.
 தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் சித்ரா பெüர்ணமி அன்று அம்மனை விசேஷமாக அலங்கரித்து ஊர்வலம் வருவார்கள். மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருவிழா என்பது இந்த நாளில் வெகு சிறப்பாக 10 நாள் உற்சவம் நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது கோலாகலமாக ஊரே திரண்டு கொண்டாடுகிறது.
 காவிரிக்கரையோர கிராமங்களில் ஆடிப்பெருக்கன்று எப்படி ஆற்றங்கரையில் அன்னையை வழிபடுவார்களோ அதுபோல், ஒவ்வொரு வீட்டிலும் கலந்த சாதங்களை (சித்ரான்னங்கள்) செய்து கொண்டு வந்து காவிரியின் நடுவே உள்ள மணல் திட்டில் அமர்ந்து கொண்டு பெüர்ணமி சந்திர வெளிச்சத்தில் ஊரே சேர்ந்து சாப்பிடுவார்கள். தன் உறவினர்களையும் இதற்கு அழைப்பார்கள். இந்த சந்திப்பில் பலரும் கூடுவதால் பல நாள் தடைபட்ட திருமணங்கள் இந்த கூடலில் நிச்சயமாகும்; உறவுகள் வலுப்படும்.
 வருகிற ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை- சித்ரா பெüர்ணமி.
 - எஸ். எஸ். சீதாராமன்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மன மாசு அகற்றும் மந்திரம்!
வெண்ணெய் கண்ணன்!
பொருநை போற்றுதும்! 54 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 21
நிகழ்வுகள்