இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று இக்குறட்பாவின் முதல் மற்றும் இரண்டாவது அடியில் இரண்டாவது எழுத்தாக "னி' எழுத்து அமைந்து அடி எதுகையாகிப் படிப்போருக்கு இன்பம் நல்குகிறது.
மேலும் இக்குறட்பாவின் முதல் அடியிலேயே முதலாவதாக அமைந்துள்ள "இனிய' என்னும் சொல்லுக்கு எதிரான "இன்னாத' என்னும் சொல் அமைந்துள்ளதும் சிறப்புக்குரியது. அதே போன்று இரண்டாவது அடியில் அப்பாடலுக்கு மிக முக்கியமான "கனி' என்னும் சொல்லுக்கு எதிர்சொல் "காய்' என்பதும் அந்த அடியிலேயே அமைந்துள்ளதும் பாவினுக்குச் சிறப்பைத் தருவதாகும்.
ஒன்றரை அடி குறட்பாவில் மேல் வரியில் இனிய என்பதற்கு எதிர்ப்பதமான இன்னாத என்றும் கீழ் வரியில் கனி என்பதன் எதிர்ச்சொல் காய் அமையுமாறு பாடலை அமைத்திருப்பதும் படிப்போருக்கு இன்பம் நல்குவதாகும்.
திருக்குறளில் தோய்ந்த திருநாவுக்கரசர் (அப்பர்) இக்குறட்பாவில் தன்னையே மறந்து இனிய உளவாக என்னும் வரியை, தான் பாடியுள்ள தேவாரத்தில் எடுத்தாண்டுள்ளார்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாழ் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி
உழி தந்து என் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்
கூவ மயில் ஆலும் ஆரூரரரைக்
கையினால் தொழாது ஒழிந்து
கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே
இந்தப்பாடலில் கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் எனத் திருக்குறளை எடுத்தாண்டுள்ளார் திருநாவுக்கரசர்.
ஒன்றே முக்கால் அடி குறட்பாவில் இரண்டு சொல்லும் அவற்றுக்கான எதிர்ச்சொற்களும் முதல் அடியிலும் இரண்டாவது அடியிலும் அமைத்து வள்ளுவர் பாடியிருப்பதும் அருமை.