தமிழ்மணி

சான்றோர் சென்ற நெறி

24th Sep 2023 06:53 PM | எஸ். சாய்ராமன்

ADVERTISEMENT

 

கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய ஆய் அண்டிரன் மீது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவரால் பாடப்பெற்ற புறநானூற்றுச்செய்யுள் (134): 

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
 அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும் 
சான்றோர் சென்ற நெறியென 
ஆங்குப் பட்டன்று அவன்கை  வண்மையே 

இதன்பொருள்: "இப்பிறப்பின்கண் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவுமென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; அமைந்தோர் பிறரும் போய வழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை என்றவாறு' என்பதாகும். 

ADVERTISEMENT

இம்மையில் செய்த நல்வினையும் தருமமும் மறுமையில் இன்பம் நல்குவதற்குக் காரணமாகும் என்னும் பயன்கருதிப் பொருளைக் கொண்டு அறஞ்செய்வது வணிக நோக்கமாகும். இந்த நோக்கமின்றி அறஞ்செய்கின்றவன்தான் ஆய் அண்டிரன். எனவே அவன் "அறவிலை வணிகன் அலன்' என்கிறார் முடமோசியார். இதுதான் சான்றோர் சென்ற நெறியாகும். எனவே இந்த நெறிப்படிதான் "ஆய்' என்னும் வள்ளல் அறஞ்செய்கின்றான் என்றும் பாடியிருக்கிறார்.  

"அறவிலை வணிகன் ஆய் அலன்' என்னும் அருமையான மணிமொழியின் அகண்ட பரிபூரண வெளிச்சத்தை மகாபாரதத்திலும் காணலாம். 

பஞ்சபாண்டவர் வனவாசம் செய்யும்போது தருமபுத்திரரிடம்  திரெளபதி "தருமத்தையே கடைப்பிடித்து ஒழுகுகிற உமக்கு இவ்வளவு துன்பங்களும் துயரங்களும் ஏன் வந்தன'   என்று கேட்டாள். உடனே தருமபுத்திரர், திரெளபதியிடம், "நான் தருமத்தின் பயனை விரும்பி தருமம் செய்யவில்லை. கொடுக்க வேண்டுமென்றே கொடுக்கிறேன். 

இவ்விஷயத்தில் பயன் இருக்கட்டும், அல்லது இல்லாமல் போகட்டும். சாஸ்திரங்களை மீறாமலும் ஸாதுக்களின் ஆசாரத்தைப் பார்த்தும் தருமத்தைச் செய்கின்றேனேயல்லாது தருமபலத்திற்கு வேண்டிச் செய்யவில்லை' என்கிறார். 

இங்கே தருமபுத்திரரால் எடுத்துரைக்கப்பெற்ற  ஸாதுக்களின் ஆசாரம் என்பதுதான் புறநானூற்றில்  சான்றோர் சென்ற நெறி என்று குறிப்பிடப்பெற்றது. தாமும் தமது குடும்பத்தினர் அனைவருமே கானகத்தில் கரந்துறைகின்ற நெருக்கடியான நேரத்தில்தான் திரெளபதியிடம் இவ்வாறு கூறியிருக்கிறார் தருமபுத்திரர். அவர் மொழிந்தது பாரததேசத்துக்கே உரிய தனிப்பெரும் பண்பாடாகும்.

எனவே, "அறவிலை வணிகன் ஆய் அலன்'  என்னும் புறநானூற்றுக் கருத்துக்கு மகாபாரதம் வனபருவத்தில் இடம் பெற்றுள்ள மேற்காணும் செய்திதான் ஒப்புமை எழில் ஊட்டி மெருகேற்றுகிறது. 

எனவே, புறநானூற்றின் அகத்தையே காட்டுகிறது மகாபாரதம். புறநானூறும் மகாபாரதத்தின் அகத்தையே காட்டுகிறது. இதனால் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் தருமபுத்திரனும் மொழிந்தவரிகளே பாரதப் பண்பாட்டின் முகவரியாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT