கோவையில் புதன்கிழமை நடை பெற்ற கவிஞர் "மரபின் மைந்தன்' முத்தையாவின் மகள் திருமண வரவேற்பிற்குப் போயிருந்தேன். சற்று காலதாமதமாகப் போனதால் கவிஞர் சிற்பி உள்ளிட்ட பல இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க இயலவில்லை. நான் உள்ளே நுழையும் வேளையில் வண்ணதாசனும் கவிஞர் கலாப்ரியாவும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
வண்ணதாசனைப் பார்த்தபோது எனக்கும், என்னைப் பார்த்தவுடன் அவருக்கும் தி.க.சி. நினைவு வந்தது இயல்புதானே... திருநெல்வேலி டவுன் 21இ சுடலைமாடன் (கோயில்) தெரு நினைவுகள் என் மனதில் ஓடி மறைந்தன.
திரும்பிப் பார்த்தால் தனது ரசிகர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்; அருகில் அவரது கணவரும். ஜெயந்தஸ்ரீயைப் பார்த்ததும் எனக்கு "சாவி' வார இதழ் கால நினைவுகள் வந்தன. அந்த நினைவுகள் வந்தவுடனே "திசைகள்' இதழ் குறித்த நினைவுகளும்...
மாலனை ஆசிரியராகக் கொண்டு "சாவி' குழுமத்திலிருந்து 80-களின் தொடக்கத்தில், அதாவது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது "திசைகள்' இதழ். இளைஞர்களுக்காக இளைஞர்களால் நடத்தப்பட்ட அந்த இதழ் எத்தனையோ இளம் எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கியது என்பதை காலம் உறுதிப்படுத்தியது. "திசைகள்' இதழில் போடப்பட்ட பதியத்தில் ஜெயந்தஸ்ரீயும் அடக்கம்.
வழக்கமான பத்திரிகை அலுவலகமாக இருந்த "சாவி' அலுவலகம், "திசைகள்' தொடங்கப்பட்ட பிறகு ஒரே ஆரவாரமும் கலகலப்புமாக மாறி விட்டது. கேமராவும் கையுமாக இயக்குநர் கே. பாலசந்தரின் மகன் பால கைலாசம்; பென்சிலும் பிரஷுமாக ஓவியர் அரஸ்; பரபரப்பாக வஸந்த், சாரு பிரபா சுந்தர், கார்த்திகா ராஜ்குமார் உள்ளிட்ட (அன்றைய) இளம் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்; அவர்களுக்கு மத்தியில் ஜெயந்தஸ்ரீயும் இருந்தார்; சுதாங்கனும்தான்.
ஆசிரியர் மாலன், டஜன்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து முற்றிலும் வித்தியாசமான, விரசமில்லாத ஆக்கபூர்வ இளைஞர் இதழ் ஒன்றை வெளிக்கொணர்ந்தார் என்பதை மறுக்க இயலாது. இப்போது போல காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில் (அதுவும் பேனா பிடித்து மட்டுமே எழுதும் காலத்தில்) இளைஞர்களின் எழுத்துப் பசிக்கும், படைப்புத் திறனுக்கும் தீனி போட்ட பெருமை "திசைக'ளுக்கு உண்டு.
எதிர்பார்த்தது போல "திசைகள்' இதழ் வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
மாலனுக்கு ஒரு கோரிக்கை. "திசைகள்' தொடர்புடையவர்களை எல்லாம் அழைத்து நாம் ஏன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாது? அது சென்னையில்தான் நடைபெற வேண்டும் என்பதில்லை. எங்கேயாவது ஓரிடத்தில் தங்கள் ஆசிரியரையும் உடன் பயணித்த நண்பர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அன்றைய இளம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும். அந்தக் காலமாக இருந்தால் இதை ஏற்பாடு செய்து நாலைந்து பக்கங்கள் கலகலப்பாக ஒரு "ஃபீச்சர்' செய்திருக்கலாம்.
----------------------------------------------------
கோவை சென்றபோது விமானப் பயணத்தில் படிப்பதற்காக நான் எடுத்துச் சென்ற புத்தகம் ராஜ்மோகன் காந்தி எழுதிய "தேசத் தந்தைகள்'. ராஜ்மோகன் காந்தி நடத்திய "ஹிம்மத்' என்ற ஆங்கில வார இதழில் சிறிது காலம் நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருந்ததால் அவர் எனக்கு ஆசிரியரும் கூட.
"அண்டர்ஸ்டாண்டிங் தி ஃபவுண்டிங் ஃபாதர்ஸ்' என்கிற அவரது ஆங்கிலப் புத்தகத்தை நான் ஏற்கெனவே படித்திருந்ததால், ஜனனி ரமேஷ் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அரசியல் தளத்தில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு ராஜ்மோகன் காந்தி தனது கோணத்தில் விடை பகர்ந்திருந்தார்.
ராஜ்மோகன் காந்தி குறித்து சில வார்த்தைகள். காந்திஜி, ராஜாஜி இருவரின் பேரன் என்பதற்கான துளியூண்டு அறிகுறியும் அவரது அணுகுமுறையில் இருக்காது. அவரது இளைய சகோதரர் கோபாலகிருஷ்ண காந்தி, "நான் ஒரு காந்தியன் அல்ல' என்று பட்டவர்த்தனமாகத் தெரிவிப்பதைப்போல, ராஜ்மோகன் காந்தி அறிவித்ததில்லை. "நீங்கள் காந்தியவாதியா' என்று கேட்டால் அவர் உதிர்க்கும் புன்னகைதான் அதற்கு விடையாக இருக்கும்.
எளிமை, நேர்மை, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவான சிந்தனை இவையெல்லாம்தான் காந்தியவாதியின் அடையாளங்கள் என்றால் அவை எல்லாம் ராஜ்மோகன் காந்திக்கு உண்டு. இந்தியாவின் குறிப்பிடத்தக்க சிந்தனாவாதிகளில் அவரும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் முக்கியமான பல விமர்சனங்களுக்கும் தேசத் தந்தைகள்' புத்தகம் விளக்கமளிக்கிறது. இந்தியாவின் விடுதலைக்கு யார் காரணம்? காந்தியும் அம்பேத்கரும் பகைவர்களா? ஹிந்துக்களை பலவீனப்படுத்தினாரா காந்தி? இந்தியா ஹிந்து ராஷ்டிரமாக இருந்திருக்க வேண்டுமா? காஷ்மீர் பிரச்னை வேறு விதமாகக் கையாளப்பட்டிருக்க முடியுமா? காந்தியையும் நேருவையும் விட, படேலும் போஸூம் சுதந்திர இந்தியாவை சிறப்பாக வழிநடத்தியிருப்பார்களா - இவையெல்லாம் இந்தப் புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி விவாதித்திருக்கும் கேள்விகள்.
"இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆளுமைகள், காலனிகள், சமஸ்தானங்கள், மாகாணங்கள், பிரிக்கப்படாத இந்தியா, வங்கதேசம், பஞ்சாப் பற்றிய தெளிவான நினைவுகளுடன் வாழும், குறைந்து கொண்டே வரும் கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன் நான்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ராஜ்மோகன் காந்தி, "நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டு, அவர் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்திருந்தால்' என்கிற கேள்விக்கும், "1947-இல் இந்தியாவில் ஜின்னாவுக்கு பிரதமர் பதவி தரப்பட்டிருந்தால்' என்ற கேள்விக்கும் தந்திருக்கும் விளக்கம் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது. படித்தாக வேண்டிய புத்தகம் இது என்பது எனது பரிந்துரை.
----------------------------------------------------
"நிழல் தேடும் வெயில்' தொகுப்பைத் தொடர்ந்து, வெளிவந்திருக்கும் கவிஞர் வலம்புரி லேனாவின் அடுத்த தொகுப்பு "பாதங்களில் படியும் நதி'. அதிலிருந்து ஒரு கவிதை இங்கே -
நிறையவே சொல்லின
நாட்குறிப்பில்
எழுதாத பக்கங்கள்