தமிழ்மணி

கம்பரின் ஏர்த் தொழில்நுட்பம்

24th Sep 2023 06:52 PM | பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்

ADVERTISEMENT

 

தமிழில் இராமாயணத்தைப் படைத்த கம்பர் இன்னும் பல நூல்களையும் படைத்துள்ளதாக அறிய முடிகிறது. சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை என்னும் நூல்கள் இவர் இயற்றிய நூல்கள் என்று அறியப்படுகின்றன. இவை தவிரவும் கம்பர் எழுதியதாகப் பல தனிப்பாடல்களும் கிடைத்துள்ளன. 
இவற்றில் ஏர் எழுபது என்னும் நூலில் எழுபத்தொன்பது பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் முதலில் உள்ள ஒன்பது பாடல்கள் இறைவாழ்த்து, நாட்டுவாழ்த்து முதலான பாடல்கள். இதனைப் பாயிரம் என்கின்றனர். மீதம் உள்ள எழுபது பாடல்களே இந்த நூலின் பாடுபொருள் சார்ந்த பாடல்கள். எனவே இந்த நூலின் தலைப்பில் எழுபது என்னும் எண்ணிக்கையைச் சேர்த்து ஏர் எழுபது எனப் பெயரிட்டுள்ளார்.  
உழவினைத் தொடங்குவதற்கு நாள் குறித்தல், உழவுத் தொழில் மேன்மை, கலப்பையின் சிறப்பு, கலப்பையின் ஒரு பகுதியான மேழி என்னும் கைப்பிடியின் சிறப்பு, கலப்பைப் பகுதியையும் ஏரின் பகுதியையும் இணைக்கும் ஆணியின் சிறப்பு முதலாக ஏரின் எல்லாப் பகுதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 
காளையின் கழுத்தில் பூட்டப்பட்டிருக்கும் நுகம், நுகத்தின் துளை, நுகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஆணி, காளையையும் நுகத்தையும் இணைக்கும் பூட்டாங்கயிறு முதலாக உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் எல்லாப் பொருள்களையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
போர்த்தொழிலுக்கு அடிப்படையானது ஏர்த்தொழில் தான் என்பதையும் செங்கோலை விடவும் ஏர் நடத்துவதற்குப் பயன்படும் சிறிய கோலே சிறந்த கோல் என்பதையும் தெரிவித்துள்ள கம்பர், இந்த எழுபது பாடல்களையும் உழவுத் தொழிலுக்கு உயர்வைத் தரும் வகையில் அமைத்துள்ளார்.
கார்மேகம் விண்ணில் நடந்தால் நல்ல மழை பொழியும். நல்ல மழை பொழிந்தால் ஆறுகளில் தண்ணீர் நடக்கும். நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அவற்றிலிருந்து கால்வாய் வழியாகத் தண்ணீர் நடக்கும். அந்தத் தண்ணீர் வயல்களில்  பாய்ந்து நடக்கும். அதனால் விளைச்சல் நல்லபடியாக நடக்கும். இப்படி எல்லாமே நல்லபடியாக நடக்கும். எப்போது தெரியுமா? வேளாண் பெருமக்கள் வேளாண்மைத் தொழிலை நல்லபடியாக மேற்கொள்ள விரும்பி, தங்கள் கலப்பையை எடுத்துக்கொண்டு போய் உழவு செய்தால் ஏரோட்டம் நன்றாக நடக்கும். 
ஏரோட்டம் நன்றாக நடந்தால் நாட்டில் உள்ள எல்லாத் தொழில்களும் நல்லபடி நடக்கும்; இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கலைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுச் சிறந்த முறையில் நடக்கும்; மேலோர், கீழோர் என்னும் வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோருக்கும் சீரான வாழ்க்கை முறை அமைந்து சமத்துவம் பரவி நடக்கும்; உணவில்லாக் கொடுமை இல்லாத காரணத்தினால் மக்களின் எல்லா விதமான திறமைகளும் வெளிப்பட்டுப் போற்றத்தக்க வகையில் நடக்கும்; உயர்வாக மதிக்கத்தக்க சிறந்த அறங்கள் எல்லாம் இடைவிடாமல் நடக்கும். 
இப்படி எல்லாம் சிறந்த முறையில் நடைபெறுகிற காரணத்தால் நாட்டில் ஆட்சி நல்லபடியாக நடக்கும். எல்லாமும் நடைபெறும் இந்த நாட்டில் ஒன்றே ஒன்றுதான் நடக்காது. அது எது தெரியுமா? பசி என்ற கொடுமைதான் எங்குமே நடக்காது என்று பாடியுள்ளார் கம்பர்.
கார் நடக்கும், படி நடக்கும், காராளர் தம்முடைய ஏர் நடக்குமெனில் இயல் இசை நாடகம் நடக்கும்,
சீர் நடக்கும், திறல் நடக்கும், திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் எங்கும் பசி நடக்காது!  (19)
கம்பனின் சொல் விளையாட்டு எப்படி எல்லாம் இங்கே நடந்துள்ளது என்று பார்த்தீர்களா? எட்டு வகையான நடக்கும் என்னும் சொற்களை இந்தப் பாடலில் பயன்படுத்தி, ஒரே ஒரு நடக்காது என்னும் எதிர்மறைச் சொல்லையும் பயன்படுத்தித் தனது மொழி நடையைப் பிறர் எவரும் எட்டாத உயரத்திற்கு உயர்த்தி நடத்திக் காட்டியுள்ளார் கம்பர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT