முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் - இன் இயற்கைப்
பைத்து அகன்ற அல்குலாய் - அஃதால், அவ்வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு. (பாடல்: 325)
இனிய இயல்புகளையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்த போது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டு விட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெய்யை வைத்து அது வெயிலில் உருகி மயிலின் கண்களை மறைத்துவிடும்போது மயிலைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.