இந்திய இலக்கிய நெடும்பரப்பில் பெருங்கவிஞர்களான தாகூருக்கும், காஜி நசுருல் இசுலாமிற்கும், வள்ளத்தோளுக்கும், குமாரனாசானுக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் அளிக்கா வாய்ப்பைக் காலம் ஈரோடு தமிழன்பனுக்கும் சமகாலத் தமிழ்க் கவிதைக்கும் வழங்கியிருக்கின்றது. ஆம், இம்மாதம் 28-ஆம் தேதி தமிழன்பன் 90-ஆம் அகவையில் அடியெடுத்துவைக்கின்றார்.
இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது தொடங்கி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் வழங்கிய "உலகத் தமிழ்ப்பீட விருது' உள்ளிட்ட உச்ச விருதுகளால் பெருமைபெற்ற, விருதுகளைப் பெருமைப்படுத்திய இக்காலக் கவிதையுலகின் முன்னோடிக் கவிஞர் ஈரோடு தமிழன்பனாவார்.
தமிழ்க் கவிதை வரலாற்றில் கவியரங்கக் கவிதைக் களத்தில் தனித்தன்மை வாய்ந்த ஆளுமை அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, இசைப்பாடல் என மரபான கவிதை வடிவங்களிலும், புதுக்கவிதைத் தளத்திலும் தேர்ந்த திறங்காட்டி முத்திரை பதித்த முன்னணிக் கவிஞர் அவர்.
உலகக் கவிதை வடிவங்களான ஐக்கூ, சென்ரியூ, லிமரிக், லிமரைக்கூ, கசல் முதலிய கவிதை வடிவங்களிலெல்லாம் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுச் சாதனை நிகழ்த்திய வரலாறும் கவிதைக் களத்தில் அவருக்குண்டு; வானம்பாடிக் கவிஞராக வலம்வந்த வரலாறும் அவருக்குண்டு.
தமிழின் குருதியிலிருந்து பிறந்தவன் நான் என்னைப் பிழிந்தால் தமிழாய் வழிவேன் எனத் தமிழின் குருதியிலிருந்து தோன்றித் தமிழாய் வழியும் தமிழாய் வாழும் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
இவர் கவிதைக் களத்தில் மட்டும் சாதனை புரிந்தவரல்லர்; தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் அவர். சிறந்த சொற்பொழிவாளர். சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்றிலக்கியம் எனத் தமிழின் பன்முகப் பக்கங்களிலும் சிறந்த பங்களிப்பை அவர் ஆற்றியுள்ளார்.
கவிதைக் களத்தில் "தமிழன்பன் கவிதைகள்', "தோணி வருகிறது', "தீவுகள் கரையேறுகின்றன', "சூரியப் பிறைகள்', "கருவறையிலிருந்து ஒரு குரல்', "கிழக்குச் சாளரம்', "உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட் விட்மன்', "வணக்கம் வள்ளுவ!', "இரவுப் பாடகன்' எனத் தொடங்கி 83 கவிதைத் தொகுதிகள் இதுவரை அவரது கைவண்ணத்தில், கருத்து வண்ணத்தில் மலர்ந்திருக்கின்றன.
அண்மையில் கீழடிக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக்கொண்டு "கீழடியில் கேட்ட தாலாட்டுகள்' என அவர் படைத்த கவிதையிலக்கியம் புதிய பரிமாணமாகத் தமிழை அணிசெய்கின்றது.
அரைநூற்றாண்டுக்குமுன் ஈழத்துத் தமிழறிஞர் கலாநிதி க. கைலாசபதி, தமிழன்பன் முழங்கிய "திக்குகளின் புதல்வர்கள், தேசவரம் பற்றவர்கள்' என்னும் கவிதைத் தொடரையும் தொடர் இடம்பெற்ற கவிதையையும் எடுத்துக்காட்டி, "பாரதிதாசனிடமிருந்து பல படிகள் முன்னேறி வந்து விட்ட தமிழன்பனது வளர்ச்சி' என விதந்து பேசியுள்ளார். பிந்தைய அரை நூற்றாண்டில் தமிழன்பன் உலகப் பார்வை கொண்ட முக்கியமான கவிஞராக வளர்ந்து திகழுகின்றார்.
"தனிப்பாடல் திரட்டு' என்னும் தமிழின் முதன்மையான இலக்கியத் தொகுதியை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்த ஆராய்ச்சி அறிஞர் என்னும் இடத்தைத் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழன்பன் பெற்றிருக்கின்றார். சென்னைப் புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வீற்றிருந்து ஆயிரம் ஆயிரம் மாணவர்களைத் தமிழுணர்வோடு உருவாக்கியவர் அவர்.
இக்காலத்தில் உள்ளவற்றைப் போலப் பல காட்சி ஊடகங்கள் அற்ற கடந்த காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் அவர் செய்தி வாசிக்கும் பணியையும் செம்மாந்த தமிழ் ஒலிப்போடு மேற்கொண்டிருந்தார். தமிழின் அழகிய ஒலிப்பு நேர்த்திக்காக அவரது வாசிப்பு நேரத்திற்குத் தமிழ்ச் சமூகத்தின் செவிகள் காத்துக்கிடந்தன.
பாரதியியலிலும் பாரதிதாசனியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியிருக்கின்ற ஆய்வாளனாகிய என்னை மட்டுமல்ல எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களையும், கவிஞர்களையும், பேராசிரியர்களையும் உருவாக்கிய பெரும்பேராசிரியர் அவர்.
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக ஆய்வியல் நிறைஞர் ஆய்வை மேற்கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. முப்பத்துமூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு நாள். என் யாப்பியல் ஆய்விற்காக இன்று பலராலும் அறியப்படாத தி. வீரபத்திர முதலியார் என்னும் யாப்பியல் முன்னோடி படைத்த "விருத்தப்பாவியல்' என்னும் இலக்கணநூல் எனக்குத் தேவைப்பட்டது. ஒருமுறை என் ஆசிரியப் பெருந்தகையாகிய தமிழன்பனாரைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தேன்.
ஒரு பிற்பகலில் புகழ்பெற்ற நிலையிலிருந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இருக்கும் வளாகத்திற்குத் திடீரென வந்தார். என்னைத் தேடி அழைத்தார். கையிலே "விருத்தப்பாவிய'லை அளித்தார். உடன் புறப்பட்டுச் சென்றார்.
ஒரு மாணவனின் ஆய்வுத் தேவையை நிறைவு செய்தவதற்காக நூலைத் தேடிக் கண்டுபிடித்துக் கொணர்ந்து வழங்கி மகிழும் உயரிய மானுட உள்ளம், மாணவனின் வளர்ச்சிக்கு உதவுவதில் மகிழும் உன்னத நெஞ்சம் எத்தனை பேராசிரியர்களிடத்தில் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் தமிழன்பன் என்னும் மகத்தான மனிதரின் மாபெரும் இடம் அங்கை நெல்லியாய்ப் புலப்படும்.
தமிழ்க் கவிதையின் வளர்ச்சி வரலாற்றில் தமிழன்பன் கவிதைகளுக்குத் தனித்த இடமுண்டு; தமிழ்க் கவிஞர்களின் வரலாற்றில் தமிழன்பனுக்குத் தனித்த இடமுண்டு. தொண்ணூறு தொடும் பெருங்கவியைத் தமிழுலகம் வணங்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கின்றது.