தமிழ்மணி

ஊடல் கொண்ட தலைவி

17th Sep 2023 04:33 PM | முனைவர் கி. இராம்கணேஷ்

ADVERTISEMENT

 

தலைவன் தலைவியோடு புனலாடினானெனக் கேட்ட செவிலித்தாய், தோழியை நோக்கி, "நீர்விழா எவ்வாறு இருந்ததெனக் கூறுக' எனக் கேட்க தோழி, "வையை ஆற்றில் நீர்வரத்து மிகுந்திருந்தது. புதுப்புனலில் நீராட அனைவரும் சென்றனர். ஒருவரை ஒருவர் துரத்தி நீரை அள்ளி வீசினர். அந்நீரை அவர்களுடைய அழகான கண்கள் ஏற்றுக் கொண்டன. 

ஒருத்தி மட்டும் அதற்குத் தோற்றுத் தன் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டாள். அவள் தோற்றதை உணர்ந்த ஒருத்தி தன் கழுத்தில் அணிந்திருந்த பொன் கயிற்றினால் தோற்றவள் தோளினைக் கட்டி சிறைபிடித்தாள் இதைப் பார்த்த மற்றொரு பெண்ணானவள் தோற்றவளுக்குப் பரிந்து அவளுடைய கட்டை நீக்கும் வகையில் நீரில் பாய்ந்து சென்றாள். 

பாய்ந்தவளுடைய மாவடு போன்ற மை தீண்டப்பட்ட கண்களால் செந்நிறத்தில் இருந்த புதுப்புனல் கருநிறமாய் மாறியது. அப்பொழுது தலைவியொருத்தி மதுவைப் பருகினாள். அப்போது அவள் கண்கள் நெய்தல் மலர் போல் கருத்திருந்தன. மதுவைக் குடித்து முடித்த பின்பு அவள் கண்கள் சிவந்திருந்தன.

ADVERTISEMENT

கண்இயல் கண்டு ஏத்தி காரிகை 
                                                    நீர் நோக்கினைப்
 பாண் ஆதரித்துப் பலபாட அப்பாட்டுப்
 பேணாது ஒருத்தி பேதுற ஆயிடை
என்னை வருவது எனக்கு 
                                                      என்று இனையா
 நன்ஞெமர் மார்பன் நடுக்குற  நண்ணி
 சிகை கிடந்த ஊடலின் செங்கண் 
                                                                    சேப்புஊர
 வகைதொடர்ந்த ஆடலுள் நல்லவர் 
                                                                         தம்முள்
 பகைதொடர்ந்து கோதை பரியூஉ 
                                                       நனி வெகுண்டு
 யாறுஆடு மேனி அணிகண்ட 
                                                             தன் அன்பன்
சேறுஆடு மேனிதிரு நிலத்துஉய்ப்ப 
                                                                 சிரம்மிதித்து
 தீர்விலதாகச் செருவுற்றாள்
- (பரிபாடல் - வையை 7 - 65 - 75)

தலைவன் தலைவியின் அக்கண்களைப் பார்த்து, அவற்றின் அழகைப் பாராட்டிப் பாணரைப் போலவே பலவகையாகப் பாடினான். தலைவியை நினைத்து அவன் பாடினான் என்பதை அறியாத வேறொருத்தி அத்தலைவனிடம் கோபமுற்றாள். அதனையறிந்த தலைவன், இஃது என்ன விபரீதமாயிருக்கிறது? நமக்கு என்ன வரப்போகிறதோ என்று அஞ்சி தலைவியையடைந்து நடுக்கமுற்றான். 

அப்போது தலைவிக்குத் தலைவன் மேல் சினம் ஏற்பட்டு தன் மாலையைப் பிய்த்து எறிந்தாள். அப்பொழுது அவளைப் புகழ்ந்த தலைவன் கீழே விழுந்து வணங்கினான்.  அப்போதும் அவள்  சினம் அடங்காமல் ஊடல் கொண்டாள்.

தலைவன் தனக்குத்தான் சொந்தம் என்று கருதிய தலைவியின் மனநிலையே தலைவன் மேல் அவளுக்கு ஊடல் ஏற்படக் காரணமாயிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT