இன்று நாட்டின் தலைவரும் இராணுவ உயர் அதிகாரிகளும் போர் நடைபெறும் இடங்களில், வீரர்கள் நிறைந்த முகாம்களில், சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், அவர்களோடு இருந்து மகிழ்ந்து தேநீர் அருந்தும் உயர்ந்த பண்பாட்டை ஊடகங்களின் வாயிலாக நாம் அறிவோம்.
இத்தகு பண்பாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் போற்றி வந்த நெறியாகும். வேந்தன் மறவர்களைச் சந்தித்து உரையாடும் உயர்பண்பாடு பழந்தமிழகத்தில் இருந்ததைப் புறநானூற்றுப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
செறுத்தச் செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலர் என்று போற்றப்பட்ட கபிலரால் புகழ்ந்த செய்யுட் கழாத்தலை (எல்லோராலும் புகழப்படும் செய்யுட்களைத் தந்தவர்) என்று பாராட்டப்படும் கழாத்தலையார் எனும் புலவர் புறநானூற்றுப் பாடலொன்றில் வேந்தனின் அப்பண்பாட்டை நமக்குப் புலப்படுத்துகிறார்.
வெட்சிப்பூ சூடி தங்கள் நாட்டு ஆனிரைகளைக் கவர வந்த பகைநாட்டு மறவர்களை எதிர்த்து, ஆனிரைகளை மீட்க கரந்தைப்பூ சூடிச் செல்வது அக்கால மரபு. அன்று, போருக்கு ஆயத்தமாக, மன்னன் அவர்களுக்கு கரந்தைப்பூவை அளிக்கும் பூக்கோள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்காட்சியைக் காணும் பாணனை முன்னிலைப்படுத்தி கூறும் போக்கில் பாடல் அமைகிறது.
பாணனே.. நிலத்தின் ஈரப்பருவம் மாறுவதற்கு முன், உழுவதற்குப் பயன்படும் பல எருதுகளுள்ளும் நல்ல எருதுகளைத் தனித்தனியே பிரித்து தெரிவுசெய்து, நல்லேர் விழாக் கொண்டாட்டத்தில் ஏரில் பூட்டும் உழவனைப் போல, அரசன் முதுகுடி பிறந்த, வழிவழியாக தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து போருக்கு அனுப்புகிறான்.
போருக்கு ஆயத்தமாகும் அந்நேரம் அரசன் படை மறவர்களை உற்சாகப்படுத்த நேரில் வருகிறான். அப்போது அவனுக்குப் பொன்னாலாகிய கலத்தில் கள்ளைக் கொடுக்கிறார்கள். தனக்குத் தரப்பட்ட பொன்னாலாகிய கலத்தில் உள்ள கள்ளைத் தன் பக்கத்தில் நிற்கும் வீரனைக் காட்டி "அவனுக்குக் கொடுங்கள்' என்று அன்போடு கூறுகிறான்.
அரசன் அன்போடு கொடுத்து வீரனைச் சிறப்பித்ததைக் கண்ட பாணன் ஒருவன் வியந்து நோக்குகிறான். அவன் வியப்பைக் கண்ட புலவர், "பாணனே! வியக்க வேண்டியதில்லை, இது மன்னரின் இயல்பு; பாசறையில் போர்க்குரிய பூக்கள் வழங்கப்படும் நாள் இந்நாள்; அதை வழங்கப்போகும் அடையாளமாக தண்ணுமை எனும் போர்ப்பறையை இழிசினன் ஒலிக்கக் கேட்பாயாக என்கிறார்.
இதனை;
ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்லெருத் துள்ளும் நல்லெருது நோக்கி
வீறுவீ றாய்ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
மூதிலாள ருள்ளும் காதலின்
தனக்குமுகந் தேத்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னுமது அன்றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோள் இன்றுஎன்று அறையும்
மடிவாய் தண்ணுமை இழிசினன் குரலே (பா. 289)
என்ற பாடலில் உணர்த்துகிறார். இப்பாடலில் வீரரைத் தேர்ந்தெடுக்கும் சிறப்பும் தனக்குத் தந்த கள்ளை வீரனுக்கு அளிக்கும் வேந்தனின் உயர்பண்பும் சித்திரிக்கக் காண்கிறோம்.
இப்பாடலிலிருந்து கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்படக் காணலாம். பழந்தமிழர் போர், அறத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. எவ்வித அறிவிப்புமின்றி திடீரென போர் தொடுத்து நாட்டை அழிக்கும் அறக்கேடு அக்
காலத்தில் இல்லை.
ஆனிரைகவர்தல் போருக்கான முன்னறிவிப்பாக அன்று கொள்ளப்பட்டது. கரந்தைப்பூ சூடி அதைத்தடுப்பது நாங்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
அடுத்து வேந்தன், வீரர்களை தனக்கு நிகராகவே போற்றும் உயர் பண்பினை, தனக்குக் கொடுக்கப்பட்ட பொன்னால் செய்த கலத்தில் ஏந்திய கள்ளை அருகிலிருக்கும் மறவனுக்குப் பருகக் கொடுப்பதிலிருந்து அறியலாம்.
தொட்டு இமிழும் கழல் மறவர் மட்டு உண்டு மகிழ்தூங்கின்று (பு.வெ.மாலை. 14) என்ற உண்டாட்டு நிகழ்வும் இங்கே உணர்த்தப்படக் காணலாம்.