தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 01-10-2023

1st Oct 2023 12:45 PM

ADVERTISEMENT

 

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் பகுதி வழியாக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது நண்பர் கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கத்தின் நினைவு வந்தது. "வருகிறேன்' என்று நான் செல்பேசியில் தெரிவித்ததும் எனக்காக அவர் காத்திருந்தார்.

கவிதா சேது சொக்கலிங்கத்திடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவரது அனுபவங்களும் பல இலக்கிய ஆளுமைகளுடனான அவரது தொடர்புகளும் சுவாரஸ்யமானவை.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகள் அனைத்தையும் தொகுப்பாக வெளிக்கொணர வேண்டும் என்று முதலில் விழைந்தவர் கவிதா சொக்கலிங்கம்தான். அவருக்கும்  ஜெயகாந்தனுக்கும் இடையே இருந்த நட்பும் தொடர்பும் குறித்து பேச தொடங்கினால் சொக்கலிங்கம் நெகிழ்ந்து விடுகிறார். 

ADVERTISEMENT

இப்போது போல தேவையான அளவுக்கு மட்டும் புத்தகங்கள் அடித்துக் கொள்ளும் காலம் அல்ல அது. அதனால் பெருந்தொகுப்பாக வெளியிடுவதில் ஜெயகாந்தனுக்கே சற்றுத் தயக்கம் இருந்தது என்று சொன்னார் சொக்கலிங்கம்.

"மொத்தமாக வெளியிட்டு எதிர்பார்த்தது போல உடனடியாக விற்பனையாகாவிட்டால் பெரும் இழப்பை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்த அளவுக்கு விலை கொடுத்து தொகுப்புகளை வாசகர்கள் வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம்?  அதனால் தனித்தனியாக பிரித்து வெவ்வேறு பதிப்பகங்களின் மூலம் வெளியிடலாம் என்று கூறினார் ஜேகே' என்கிறார் சொக்கலிங்கம்.

அதனால்தான் சிறுகதைகள் கவிதா பப்ளிகேஷன்ஸ், நாவல்கள் வர்த்தமானன் பதிப்பகம், குறுநாவல்கள் மீனாட்சி புத்தக நிலையம், கட்டுரைகள் செண்பகா பதிப்பகம் என்று அவர் பிரித்துக் கொடுத்ததாக சொன்னார். ஜெயகாந்தனின் இறுதி காலம் வரை அவரது நல்லதிலும் கெட்டதிலும் முனைவர் ம. இராசேந்திரனும், கவிதா சேது சொக்கலிங்கமும் கூடவே இருந்தனர் என்பதை நான் நேரில் பார்த்தவன்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் மட்டுமல்ல, பிரபஞ்சன், க.நா.சு, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் படைப்புகளையும் தொகுப்பாக வெளியிட்டு இருக்கிறது கவிதா பப்ளிகேஷன்ஸ். இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் சேது சொக்கலிங்கத்தின் பதிப்பகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் பொன்விழா 
கொண்டாட இருக்கிறது.

நாங்கள் அது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் இன்னொரு தகவலையும் தெரிவித்தார். படப்பை அருகில் ஒரகடத்தில் கவிதா பதிப்பகமும் கற்பகம் புத்தகாலயமும் மிகப்பெரிய இடம் வாங்கி, தாங்கள் வெளிக்கொணரும் புத்தகங்களை பாதுகாக்க "குடோன்' அமைத்திருக்கிறார்களாம் (புத்தகங்கள் வைக்கும் இடத்தை "கிடங்கு' என்று சொன்னால் என்னவோ போல் இருக்கிறது). சுமார் 6,800 சதுர அடியில் 4,000 சதுர அடிக்குக் கட்டடம் கட்டப்பட்டு அதில் அச்சிடப்படும் புத்தகங்கள் விற்பனைக்குத் தயாராகப் பாதுகாக்கப்படுகின்றன.

கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கத்தைப் போன்ற பதிப்பக அனுபவசாலிகள் மறைந்த பெரியவர் வானதி திருநாவுக்கரசு "வெற்றிப்படிகள்' எழுதியது போலத் தங்களது அனுபவங்களைத் தொகுத்து வெளியிட வேண்டும். அப்போதுதான் பதிப்பகம் நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களும், எழுத்துலக ஆளுமைகளுடனான அவர்களது அனுபவங்களும் வெளியுலகுக்குத் தெரியவரும்...

-----------------------------------------------------------
 

பிரபலங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்கிற உந்துதலை என்னில் ஏற்படுத்தியவர் "சோ' சார்தான். கல்லூரி நாட்களில் சமூக அக்கறையும், அரசியல் நாட்டமும், தேசிய சிந்தனையும் உள்ள மாணவர்கள் அனைவருமே "துக்ளக்' பத்திரிகையின் வாசகர்களாகத்தான் இருந்தனர்; "சோ' சாரின் ரசிகர்களாகவும்... அந்த பிரிவினரில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அப்போது "துக்ளக்' மாதம் இருமுறை இதழ். கடைகளில் முன்கூட்டியே பணம் கட்டி பதிவு செய்து வைத்திருந்தால்தான் பிரதி கிடைப்பது உறுதி என்கிற அளவுக்கு வந்தவுடன் விற்றுவிடும். தலையங்கம், கேள்வி  பதில், நகைச்சுவைக் கட்டுரைகள் போன்றவற்றைவிட அவர் எடுத்த பேட்டிகளைப் படிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

மாநில அரசியலானாலும் தேசிய அரசியலானாலும் முக்கியமான எல்லா தலைவர்களும் "சோ' சாரால் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவரது கேள்விகளில் காணப்படும் தனித்துவம் என்னவென்றால், தன்னை மேதாவியாக காட்டிக் கொள்வதாக இல்லாமல் பேட்டி எடுக்கப்படுபவரின் கொள்கைகளையும், கருத்துகளையும் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாக அவை இருப்பதுதான். அவரது இந்த அணுகுமுறையைத்தான் நான் எனது இதழியல் பயணத்தில் இலக்கணமாகப் பின்பற்றுகிறேன்.

"சோ' சார் எடுத்த பேட்டிகளில் மிகவும் அசாதாரணமான, சுவாரஸ்யமான பேட்டி அன்றைய நடிகை ஜெயலலிதாவுடையது. ஏனென்றால் அவரை நடிகையாக பேட்டி எடுத்திருக்கிறார். அவர் அதிக முறை பேட்டி எடுத்த தமிழக அரசியல் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தக்கூடும். தேசிய தலைவர்களில் அவர் மிக அதிகமாக பேட்டி எடுத்திருப்பது சுப்பிரமணியன் சுவாமியாகத்தான் இருக்கும்.

தேசிய தலைவர்களில் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், சந்திரசேகர், வாஜ்பாய், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே என்று தொடங்கி அவர் சந்திக்காத, பேட்டி எடுக்காத முக்கியமான அரசியல் ஆளுமை என்று யாருமே இருக்க முடியாது. ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனான அவரது பேட்டி மறக்க முடியாதது.
அக்டோபர் 5  "சோ' சாரின் பிறந்த தேதி. அவரது "துக்ளக்' பேட்டிகள் "இவர்களைச் சந்தித்தேன்' என்கிற தலைப்பில் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது. அதைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு தோன்றிய எண்ணங்களைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

----------------------------------------------------------


சமுத்திரத்தின் மீது  பறந்து செல்லும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம், ஆழ்கடலில் தங்கு தடையின்றி நீந்திச் செல்லும் மீன்கள் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது,  கூடல் தாரிக் எழுதியிருக்கும் இந்தக் கவிதை
நீந்துவது போலவே 
பறந்து செல்லும் 
இந்தப் பறவைக்கு 
ஆகாயம் என்பது நதி!

ADVERTISEMENT
ADVERTISEMENT