தமிழ்மணி

ஆனையை வெல்லும் ஆளி

1st Oct 2023 12:42 PM | முனைவர் சீனிவாச கண்ணன்

ADVERTISEMENT

 

தமிழகம் உள்ளிட்ட பாரத தேசம் முழுவதிலும் ஆளி எனும் கொடிய காட்டு விலங்கு (யாளி எனவும் கூறுவர்) ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருக்கக் கூடும். 

ஆளி எனும் விலங்கின் வடிவை இன்றும் தமிழகக் கோயில்களில் , மண்டபத் தூண்களில் சிற்ப வடிவில் காணலாம். யானையைப் போல் நீண்ட துதிக்கையினையும், வெளிப்புறம் பிதுங்கிய நிலையில், சிவந்த பெரிய கண்களையும், சிங்கம் புலி போன்று பாத வடிவமைப்பையும் கொண்டு இரு கால்களையும் உயரத் தூக்கிய நிலையில், ஆளி செதுக்கப்பட்டிருக்கும். 

ஆளியின் கால்களுக்கு அடியில் யானையின் சிற்பமும் அமைந்திருக்கும். ஏனென்றால் யானையை ஆளி வேட்டையாடிக் கொன்றுவிடும். புராண காலத்தில் ஆயிரம் ஆளிகளின் முகம் கொண்ட  "ஆளிமுகன்' எனும் அசுரன் இலங்கையை ஆண்டான் என்று கந்தபுராணம் குறிப்பிடுகிறது .

ADVERTISEMENT

ஆளி, வேழம் எனும் இரண்டையும் இணைத்து சங்கப் புலவரொருவர்
 "ஆளி நல்மான் அணங்குடை ஒறுத்தல் மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப' 
(அகம்: 318) என்று பாடுகிறார்.

திருமங்கை ஆழ்வார், தம்முடைய பாசுரத்தில் "பைங்கன் ஆனக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேல் குன்றமே' (பெரிய திருமொழி)  என்று அகோபிலம் காட்டுப்பகுதியை வருணிக்கிறார்.

மற்றுமொரு பாசுரத்தில், "நீள்மொழி வாய் உழுவை திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே' என்று பாடுகிறார்.  

அங்ஙனமாயின் எவ்வாறு "ஆளி' மறைந்திருக்கக் கூடும்? டைனோசர் போன்ற மிகுபயங்கரத் தோற்றம் உடைய உயிரினங்கள் மறைந்து பட்டனவே! அதுபோல் ஆளியும் காலவெள்ளத்தில் கரைந்து போயிருக்கக் கூடும்! 

ADVERTISEMENT
ADVERTISEMENT