தமிழ்மணி

திருப்பாவைக்கு மூலக்கூறான புறப்பாட்டு!

1st Oct 2023 12:40 PM |  முனைவர் கி. சிவா

ADVERTISEMENT


ஓர் இலக்கியம் மற்றோர் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கும் ஓர் இலக்கியக் கூறு இன்னுமோர் இலக்கியக் கூறு உருவாதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். தமிழ் போல் நெடும்பரப்பில் தோன்றிய இலக்கியங்கள் இப்பணியைச் செவ்வனே செய்கின்றன. அவ்வகையில், புறநானூற்றுப் பாடல்கள் திருப்பாவைப் பாடல் உருவாக்கத்திற்குத் தோற்றமூலக்கூறுகளாய் அமைந்துள்ள விதத்தினை இப்பகுதியில் காணலாம்.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய் (பா.13)

என்ற திருப்பாவைப் பாட்டிற்கு "வரிபடர்ந்த குவளைமலரை ஒத்த கண்களையுடைய பெண்ணே! கொக்கு உருவில் வந்த பகன் எனும் அசுரனின் வாயைப் பிளந்தவனும் பொல்லா அரக்கனின் (இராவணனின்) தலையைக் கிள்ளி எறிந்தவனுமாகிய திருமாலின் புகழைப் பாடிக்கொண்டே, பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பு மேற்கொள்வதற்கான களத்தினை அடைந்தனர்; வியாழமீன் உறங்கிவிட்டது; அதிகாலையில் உதிக்கின்ற வெள்ளி மீன் வந்துவிட்டது; பறவைகள் ஒலிக்கின்றமையைக் காண்பாய்; நன்கு குளிர்ந்த நீரில் மூழ்கி, ஒலியெழுப்பிக் குளிக்காமல் நீ உறங்குகின்றாயே? பாவையே! நீ இந்த நல்ல நாளில் உன் விளையாட்டுத்தனத்தை விட்டுவிட்டு நோன்பில் கலந்துகொள்வாயாக' என்பது பொருள். 

இப்பாடலில் வரும் குடைந்து என்னும் சொல்லிற்கு ஒலியெழுப்பி எனப்பொருள். புரைதீர் புனல்குடைந்து ஆடினோம் என்று சிலப்பதிகாரத்தில் (குன்றக்குரவை, பா.7) குறிப்பிடப்பட்டுள்ளது. கயம்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை என்ற மதுரைக்காஞ்சியின் பாடலடியில் (364) குளத்தைக் கையால் குடைந்து விளையாடுதல் சொல்லப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதற்குக்குளத்தின்கண் நீரைக் கையாற்குடையின் துடும் துடும் என ஒலிக்குமன்றே, அங்ஙனம் ஒலிக்கும் இயம் என்க என்று உரைவரைந்துள்ளார் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார். ஆகவே, குடைந்து ஆடுகின்றபோது ஒலி எழும் என்பது அறியலாகிறது.

இப்பாட்டிற்கான தோற்ற மூலக்கூறு, புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகிறது. 

வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப்
புலரி விடியல் பகடுபல வாழ்த்தி  (385:12) 

என்ற பாடலடிகளில் அதிகாலையில் வெள்ளிமீன் தோன்றியபோதில் பறவையினங்கள் ஒலிக்கும் காட்சியும் அதனைத் தொடர்ந்து பொழுது புலர்கின்ற காட்சியும் காட்டப்பட்டுள்ளன. அவ்வேளையில் தடாரிப் பறையை ஒலித்து எருதுகளை (பகடு) வாழ்த்தும் வழக்கம் இருந்துள்ளது. 

இரவலர் ஒருவர் புரவலர் வீட்டின்முன் நின்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இச்சமூக வழக்கம், பிற்காலத்தில் கடவுள் சார்ந்ததாக மாற்றம்பெற்றுள்ளது. இக்காட்சியின் மாற்று வடிவமாக  இறைவனைப் பாடுவதாக ஆண்டாளின் பாடல் அமைந்துள்ளது.  

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோன் றினவே;
பொய்கையும் போதுகண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
வைகறை அரவம் கேளியர் பலகோள்
செய்தார் மார்ப எழுமதி துயில்  (397:19)

என எனத்தொடங்கும் புறப்பாடல்  முழுமையும் இப்பாட்டிற்குத் தோற்ற மூலக்கூறாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT