தமிழ்மணி

வீரவிளக்கு வ.வே.சு.ஐயர்

28th May 2023 05:49 PM | சீனி. விசுவநாதன்

ADVERTISEMENT


வ.வே.சு. ஐயர் எனும் வரகனேரி வேங்கடசுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் காமாக்ஷி தம்பதிக்கு மகனாக 2.4.1881அன்று பிறந்தார்.
இவர் தம் 16ஆம் வயதில் பி.ஏ. வகுப்பில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். பி.ஏ. படிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு வந்து, தம் 19ஆம் வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார்.
திருச்சியில் சில காலம் வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். பின் இலண்டன் சென்று "பாரிஸ்டர்' பட்டப் படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றார்.
ஆனால், "பாரிஸ்டர்' பட்டமளிப்பு விழாவில், "இங்கிலாந்தின் அரசனுக்கு, இந்தியன் ஆகிய நான் ராஜவிசுவாச பிரமாணம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று கூறிப் பட்டத்தைப் பெற மறுத்துவிட்டார் வ.வே.சு. ஐயர்.
இலண்டனில் வ.வே.சு. ஐயருக்கு விநாயக தாமோதர சாவர்க்கர் அறிமுகம் ஆனார். சாவர்க்கரின் தீவிர தேசபக்தியால் வ.வே.சு. ஐயர் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாக, இந்திய நாட்டு விடுதலைக்கான பணிகளில்
ஈடுபட்டார்.
இந்திய நாட்டின் நிலைமைகளை விளக்கி பத்திரிகைகளுக்கு எழுதுவதைத் தம்முடைய கடமையாகக் கருதினார். குறிப்பாக, இலண்டனிலிருந்தபடியே புதுவையிலிருந்து பாரதியை ஆசிரியராகக் கொண்டு பிரசுரமான "இந்தியா" பத்திரிகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார்.
இலண்டன் மாநகரில், இந்திய மாணவர்
களைக் கண்காணித்து வந்தவர், கர்சன் வில்லி என்பவர். 1.7.1909 அன்று இந்தியா சங்கப் பேரவைக் கூட்டத்திற்குப் பேசச் சென்ற கர்சன் வில்லியை பஞ்சாப் மாநில மாணவர் மதன்லால் திங்க்ரா சுட்டுக் கொன்றார்.
இதன் காரணமாக இலண்டனில் வசித்து வந்த வ.வே.சு. ஐயரும் சந்தேகிக்கப்பட்டார்; அவர் கைது செய்யப்படலாம் என்றும் கருதப்பட்டது. இதன் காரணமாக வ.வே.சு. ஐயர் இலண்டனிலிருந்து போலீஸார் கண்களுக்குத் தப்பி பற்பல துன்பங்களுக்கிடையே 1910 அக்டோபர் மாதம் பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்தார்.
அங்குதான் முதல் முதலாக பாரதியை சந்தித்தார் வ.வே.சு. ஐயர். பாரதியும் வ.வே.சு. ஐயரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அரசியல், இலக்கியம் ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் பாராமலேயே ஈர்க்கப்பட்டு நேசம் பாராட்டினர்.
புதுவை வாழ்வில் பாரதி ஏராளமான கவிதை கட்டுரைகளை எழுதிக் குவித்தார். வ.வே.சு. ஐயரும் தேச பக்தர்களின் சரித்திரங்களை எழுதுவதில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரை 1911 ஜூன் மாதம் 11ஆம் தேதி வாஞ்சிநாதன் என்னும் இளைஞரால் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் வ.வே.சு. ஐயரின் பங்களிப்பு கணிசமானதாக இருக்குமென பிரிட்டிஷ் இந்திய காவல்துறையினர் முடிவு செய்தனர். அதனால் அவர்கள் வ.வே.சு. ஐயரை கைது செய்யவும் திட்டமிட்டனர்.
அவர் பாரீஸூக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய என்பவருடன் சேர்ந்து புரட்சிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரானார்.
கோபன்ஹேகன் நகரில் 1910 ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாளன்று தொடங்கிய சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸில் கலந்துகொண்டார். இதன் பின்னர் ஐயர் பாரீஸூக்குத் திரும்பினார்.
1910 அக்டோபர் தொடக்கத்தில் அவர் பாரீஸை விட்டுப் புறப்பட்டு ஜெனீவாவுக்கும், பின்னர் பெர்லினுக்கும் சென்றார். அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார் என்பது 1910 டிசம்பர் 4ஆம் தேதி அவர் பாண்டிச்சேரியில் இருந்ததைக் கண்டறிந்ததால் தெரிய வந்தது. அவர் முகமதியர் வேஷத்தில் எவரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
வ.வே.சு. ஐயர் ஏராளமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். எமர்சனின் "செல்ஃப் ரிலையன்ஸ்' என்னும் நூலைத் "தன்னம்பிக்கை' என்ற தலைப்பில் தமிழில் தந்தவர் வ.வே.சு. ஐயர்தான்.
தமிழின் மிகத் தொன்மையான இலக்கியமாகக் கருதப்படும் "குறுந்தொகை' நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். மேலும், திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் "தி குறள் ஆர் மேக்ஸிம்ஸ் ஆஃப் திருவள்ளுவர்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
இவர் எழுதிய நூல்களுள் "கம்பராமாயணச் சுருக்கம்', "சந்திரகுப்த சக்கரவர்த்தி சரித்திரம்', "குரு கோவிந்த சிங்', "கரிபால்டி சரித்திரம்', "மாஜினி சரித்திரம்', "மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்', "பிரயோக இலக்கணம்', "அகஸ்தீன் முனிவரின் விண்ணப்பம்', "காவிய உத்தியானம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
உலக மகா யுத்தம் முடிவுற்றதையொட்டி, 1920ஆம் ஆண்டில் அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பைப் பிரிட்டிஷ் அரசு அளித்தது. அதன் விளைவாக வ.வே.சு. ஐயர் 20.6.1920 முதல் புதுவையை விட்டுச் சென்னைவாசி ஆனார்.
சென்னையில் திரு.வி.க.வுக்கு அடுத்தபடியாக "தேச பக்தன்' தினசரி பத்திரிகைக்கு ஆசிரியரானார். வ.வே.சு. ஐயர் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக பிரிட்டிஷ் அரசு, அவர் பேரில் ராஜத்துவேஷக் குற்றம் சாட்டியது.
ஆசிரியர் என்ற முறையில், கட்டுரைக்குத் தாமே பொறுப்பேற்று, ஒன்பது மாத சிறைத்தண்டனையும் பெற்றார். அவர் பெல்லாரி சிறையில் இருந்தபோது ஆங்கிலத்தில் "கம்ப ராமாயணம்' நூலை மொழிபெயர்த்து எழுதினார்.
பின்பு "கம்ப நிலையம்" என்ற பெயரால் பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் "கம்பராமாயணா எ ஸ்டடி' என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். சிறையிலிருந்து வெளிவந்தபின் வட இந்திய யாத்திரையை மேற்கொண்டார்.
இதன் பின்னர் வ.வே.சு. ஐயர் 1922ஆம் ஆண்டு வாக்கில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மாதேவியில் "தமிழ்க் குருகுலம்' எனும் பாரத்வாஜஆசிரமத்தை நிறுவினார். இந்த அமைப்பின் நோக்கம், ஆன்மிகமும், தேசப்பற்றும் பிணைந்த தேசத் தொண்டுக்கு இளைஞர்களைத் தயார் செய்வதே என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
3.6.1925 அன்று தமிழ்க் குருகுலத்து மாணவர்களுடன் தம்முடைய அருமை மகள் சுபத்ராவையும் அழைத்துக்கொண்டு பாபநாசம் கல்யாண தீர்த்தம் அருவிக்குச் சென்றார்.
அதிவேகமாக நீர் பாய்ந்து செல்லும் குறுகிய ஆழமான பகுதியைக் கடக்கும்போது, சுபத்ரா கால் தடுக்கி நதியில் விழுந்து விட்டாள். அவளைக் காப்பாற்ற வ.வே.சு. ஐயரும் நதியில் குதித்தார். ஆனால், நதியின் வேகம் இருவரையும் இழுத்துச் சென்றதுடன் உயிரையும் பறித்து விட்டது.
வ.வே.சு. ஐயரின் 44ஆவது வயதில் கல்யாண தீர்த்தம், அவரைத் தன்னிடம் ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டது.

ஜூன் 3 வ.வே.சு. ஐயர் நினைவு நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT