தமிழ்மணி

திருவள்ளுவரின் நான்கு நெறிகள்

அரங்க. இராமலிங்கம்

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தாம் அருளிய திருக்குறளில் மனிதர்கள் ஏற்று வாழத்தக்க ஒழுக்கங்களாக அடக்கம் உடைமை, அருள் உடைமை, அறிவு உடைமை,  அன்பு உடைமை,  ஆள்வினை உடைமை, ஊக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பண்பு உடைமை, பொறை உடைமை, நாண் உடைமை ஆகிய  பத்து உடைமைகளைக் கூறியுள்ளார்.

கொள்ளத்தக்கப் பண்புகளைக் கூறிய திருவள்ளுவர், அழுக்காறாமை, இடுக்கண் அழியாமை,  இன்னாசெய்யாமை, கல்லாமை, கள்ளாமை, கள் உண்ணாமை, கொல்லாமை, சிற்றினம் சேராமை, பயனில சொல்லாமை, பிறனில் விழையாமை, பெரியாரைப் பிழையாமை,  பொச்சாவாமை, வெகுளாமை, வெஃகாமை, வெருவந்த செய்யாமை, புறங்கூறாமை எனப் பின்பற்றத் தகாத ஆமைகளையும் கூறியுள்ளார்.

திருக்குறளில் இடம்பெற்றுள்ள 1330 அருங்குறட்பாக்களில் நான்கு குறட்பாக்களில் மனிதர்கள் கடைபிடித்து ஒழுக வேண்டிய நான்கு நெறிகளைக் குறிப்பிட்டுள்ளார். 

அவையாவன:

1. பொய்தீர் ஒழுக்கநெறி (குறள்: 6)
2. கொல்லாமை சூழும்நெறி (குறள்: 324)
3. பொருள்போற்றி வழங்கும் நெறி (குறள்: 477)
4. மற்று ஈண்டு வாராநெறி (குறள்: 356)

பொய்தீர் ஒழுக்கநெறி: கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் பொய்தீர் ஒழுக்கநெறி பற்றிப் பேசுகிறார். கற்றதனால் ஆய பயன்னென் எனக் கேள்வி கேட்டு அதற்கு விடையாக, வாலறிவன் நற்றாளைத் தொழுதலே பயன் என்கிறார். 

வாலறிவன் என்பதற்குத் தூய்மையானவன், வெண்மையானவன், ஒளியானவன் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. 

தூய்மையானப் பெருஞ்சோதிப் பெருந்தெய்வத்தை வணங்குதலே கற்றதனால் ஆய பயன் என்கிறார் தெய்வப்புலவர். 

அந்தத் தெய்வம் அடியவர்களின் உள்ளக் கமலத்தில் வீற்றிருப்பதாகச் சொல்கிறார். மலர்மிசை ஏகினான் மாணடிச் சேர்ந்தவர் நிலமிசை நீடு வாழ்வார். அதாவது, மரணமிலாப் பெருவாழ்வு பெறுவர் என்பது பொருள்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள்: 6)

மெய்யான ஒழுக்கநெறியின்கண் வழுவாது நின்றவர், பிறப்பு இறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். அதாவது மரணமிலாப் பெருவாழ்வு பெறுவர். 

இறைவனை இடைவிடாது நினைத்தலும், நினைத்து வாழ்த்தலும், அவனது நெறியில் நிற்றலும் ஒருவரை மரணமிலாப் பெருவாழ்வில் ஏற்றிவைக்கும் என்பதைத் திருவள்ளுவர் தெற்றென விளக்குகிறார் (குறள் 3, 4, 5, 6). 

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தம்முடைய முதல் அதிகாரத்தில் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றிக் கூறியிருக்கிறார் என உரைநடைப்பகுதியில் அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெரும்பாலும் தம்மைப் படர்க்கை நிலையில் வைத்துக்கொண்டே கருத்துகளைப் பதிவுசெய்வார். தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு நான்கு குறட்பாக்களில் மட்டும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். 

அவற்றில் ஒன்று,
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை 
                                                              எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற (குறள்: 300)

நான் அறிந்தவற்றில் வாய்மையைவிட  சத்தியத்தைவிட மிக உயர்ந்தது வேறெதுவும் இல்லை எனக் குறிப்பிடுகிறார். வாய்மையே வெல்லும் என்பது தமிழக அரசின் இலச்சினையில் உள்ள தொடர். சத்தியத்தின் மேன்மையைக் குறிப்பதற்காக, பன்னெடுங்காலமாக, அரிச்சந்திரப் புராணமே வழக்கில் வழங்கி வருகிறது. 

இப் புராணத்தைப் படித்து வாய்மையைப் பேசி வாழ்ந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி தமது வரலாற்றைச் சத்திய சோதனை என்ற தலைப்பில் எழுதினார் என்பது கருதத்தக்கது.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று  (குறள்: 297)

வாய்மையின் சிறப்பைப் பற்றி இதிகாசங்கள் தொடங்கி, திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், தாயுமானவர், வள்ளலார், மகாகவி பாரதியார் வரை எடுத்துரைத்துள்ளனர். எனவே, பொய்தீர் ஒழுக்கநெறியில் ஒருவர் வாழ்ந்தால், தெய்வ நிலையை அடையலாம் என்பது கருத்து.

கொல்லாமை சூழும்நெறி: கொல்லாமை சூழும்நெறி பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும்  திருவள்ளுவர் கூறியுள்ளார்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி (குறள்: 324)

இந்தப் பிறப்பில் வாழுகின்ற நல்லநெறி எது என என்னைக்கேட்டால், எந்த உயிரையும் கொல்லாமையே ஆகும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். 
கொல்லாமை நெறியைப் பின்பற்றி வாழ்கிறவரை எமன்கூட தீண்ட அஞ்சுவான் என்கிறார்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் 
                                                                              வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று (குறள்: 326)

வாழ்நாள் நீண்டால், ஞானம் பிறந்து, உயிர் வீடுபெறும் என்பது கருத்து. 

இந்தக் கொல்லாமை அதிகாரத்தில் மிகக் கடுமையான கருத்தையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பதிவு செய்திருக்கிறார். சாலையோரத்தில் இருவரைக் காட்டுகிறார். ஒருவன், அழுகுகிற உடம்போடு அமர்ந்துத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்நோய்க்கு மருந்து இல்லை. இன்னொருவன் கொடுமையான பசித்துன்பத்தில் உழல்கிறான். அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. 

இவ்விருவரும் ஏன் இவ்வாறு நீண்டகாலம் துன்புறுகிறார்கள் என்றால், இவர்கள்  சென்ற பிறப்பில் பல்வேறு உயிர்களை அவற்றின் உடம்பில் இருந்து நீக்கியக் குற்றத்தைச் செய்திருப்பார்கள். அதாவது, கொலைகாரர்கள் என்கிறார்.

உயிர் உடம்பின் நீக்கியார்என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் (குறள்: 330)

இச்செய்திகளையெல்லாம், தன்னுடைய அறிவில் இருந்து அவர் சொல்வதாகக் கூறாமல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று நயமாகக் கூறிவிடுகிறார்.

பொருள்போற்றி வழங்கும்நெறி: பொருள்போற்றி வழங்கும்நெறியைப் போற்றி உரைக்கிறார் தெய்வப்புலவர். வலியறிதல் என்ற அதிகாரத்தில்வரும் இந்த நெறி, உலகியல் நெறியைச் சார்ந்தது.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும்நெறி (குறள்: 477)

வருவாய்க்கு ஏற்பப் பொருளைப் பிறர்க்குத் தானமாக வழங்க வேண்டும். அல்லது செலவழிக்க வேண்டும். அதுதான் பொருளைப் பாதுகாத்துக்கொள்ளும் வழி என்கிறார். 

பிரிதொரு இடத்தில் செய்க பொருளை என ஆணையிட்டும் சொல்கிறார். அப்படிப் பொருளைப் போற்றி வாழாதவனுடைய வாழ்க்கை அழிந்துபோகும் என்பதை,

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள்: 479)

தன்னிடம் உள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கேற்பப் பிறர்க்கு அளித்து மகிழவேண்டும் என்கிறார். 

மற்று ஈண்டு வாராநெறி: மற்று ஈண்டு வாராநெறி பற்றி மெய் உணர்தல் என்கிற அதிகாரத்தில் பேசுகிறார்.

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் 
                                                                            தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி (குறள்: 356)

இந்தப் பிறப்பிலேயே மெய்ஞ்ஞான நூல்களை மெய்குருபிரானிடம் கற்றுத் தெளிந்து, மெய்யாகிய உடம்பிற்குள்ளே கோடி சூரியப் பிரகாசமாக, பிரம்மப் பிரகாசமாக, ஒளிர்ந்துகொண்டிருக்கும் அருட்பெருஞ்சோதியைக் (மெய்ப்பொருள்) கண்டு உணர்ந்துவிட்டால், மீண்டும் வந்து பிறக்க மாட்டார்கள். 

மெய் உணர்தல் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களும் மரணமிலாப் பெருவாழ்வு 
பற்றிக் குறிப்பிடுகின்றன.
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் 
                                                                       சிறப்புஎன்னும்
 செம்பொருள் காண்பது அறிவு (குறள்: 358)

அறியாமையால் பிறப்பு உண்டாகிறது. பிறப்பு உண்டேல் இறப்புண்டு. அறியாமையால் ஏற்பட்ட பிறப்பு நீங்க வேண்டுமானால், பேரறிவுப் பெரும்பொருளாக இருக்கக்கூடிய செம்பொருளை இந்தப் பிறப்பிலேயே கண்டுவிட வேண்டும். அப்படிக் காண்பதற்குச் செய்யப்பெரும் முயற்சியால் பெறும் உணர்ச்சிக்குப் பெயர் அறிவு. 

மெய்ப்பொருள் காண்பது அறிவு, செம்பொருள் காண்பது அறிவு, வாலறிவினைக் காண்பது அறிவு, மலர்மிசை ஏகியவனைக் காண்பது அறிவு, பொறிவாயில் ஐந்தவித்தவனைக் காண்பது அறிவு, வேண்டுதல் வேண்டாமை இலானைக் காண்பது அறிவு, இருள்சேர் இருவினையும் சேராதவனைக் காண்பது அறிவு, தனக்குவமை இல்லாதவனைக் காண்பது அறிவு, பற்று அற்றவனைக் காண்பது அறிவு, அறத்திற்கே ஆழியாக இருப்பவனைக் காண்பது அறிவு. இத்தகு மெய்யறிவைப் பெறுவோம்.

இந்நான்கு நெறிகளில் வாழ்ந்து மனம் தூய்மை பெற்றால், அதுவே, ஒருவனது பிறப்பு இறப்பாகிய தொடர்ச்சியை நிறுத்தும் அடைக்கும் கல் ஆகும் என்கிறார் தெய்வப்புலவர்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்  
                                                                          அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (குறள்: 38)

தெய்வப்புலவர் திருவள்ளுவர் உணர்த்திய இந்நான்கு நெறிகளை ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுகினால், உணர்வு சிறக்கும்; உயிர் மலரும்; இறையருள் பெருகும்; மரணமிலாப் பெருவாழ்வில் வாழலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT