தமிழ்மணி

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பெயர்

முனைவர் சே. கரும்பாயிரம்

பொதுவாக மழைநீரை மட்டும் எதிர்நோக்கி இருக்கும் நிலத்தை புன்செய் என்பர். இந்நிலத்திற்கு மானாவாரி நிலம் என்ற பெயரும் வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக ஆறு, ஏரி முதலான நீர்ப் பாசனம் கொண்ட நிலத்தை நன்செய் என்று கூறுவர். இந்த இரு வகையான நிலங்களையும் சேர்த்து நிலபுலம் எனச் சொல்வதுண்டு. 
நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்தலைச் செய்கால் (எட்டையப்பள்ளு, 85) என்பர். தொடர்ந்து பயிரிட்ட நிலம், சிறிது காலம் பயிரிடாமல் விட்டால் அதைக் கரம்பு என்பர் (கம்பராமாயணம் 33:4).  தரிசு நிலம் என்பது மக்கள் வழக்கு.
புன்செய் நிலத்தை காடு என்று சொல்வதுண்டு. அந்நிலத்தில் வளமுடைய செம்மண் இருப்பதால் அதைச் செம்புலம் 
(குறுந்தொகை, 40:4), செஞ்சுவல் (புறநானூறு.120:1), பூவல் (அகநானூறு, 194:3) என்று கூறினர். இன்றும் செம்மண் நிலத்தைச் செங்காடு என்று கொங்கு நாட்டில் வழங்குவர்.
புன்செய் நிலத்தில் தினை, வரகு, கடுகு, மலைநெல் முதலான பயிர்களை விளைவிப்பர். அப்பயிருக்குப் பாசனம் செய்ய மழை நீரோடு அருவி, சுனை, கிணறு முதலான நீர்நிலைகளைப் பயன்படுத்துவர். அவற்றினால் விளையும் நிலம் புனம் (கார் நாற்பது, 39:3), கொல்லை (ஐந்திணை எழுபது, 11:1), ஏனல் (நற்றிணை, 102:9), துடவை (குறுந்தொகை, 392:4) என்னும் பெயர்கள் பெறுவதை இலக்கியங்கள் கூறியுள்ளன.    
பயிர் செய்வதற்கு ஏற்றாற்போல் புன்செய் நிலத்தை உருவாக்க அந்நிலத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டித் தீயிட்டுக் கொளுத்துவர். இதனை எறிபுனம் என்கிறது புறநானூறு (231:1). அவ்வாறு உருவாக்கிய புதிய நிலத்தில் பயிரிடுதலை இதைப்புனம் (அகநானூறு, 394:3) என்றும் அப்புதிய நிலத்தில் நெடுங் காலமாகப் பயிரிட்டு வருவதை முதைச்சுவல் (மேலது, 88:1), முதைப்புனம் (குறுந்தொகை, 155:1) என்றும் கூறினர். 
நிலத்தில் விதைத்து விளைந்த பயிரை யானை முதலான விலங்கினங்களும் கிளி முதலான பறவையினங்களும் உண்ண வரும். அதற்குக் காவல் காத்தலைக் கடிப்புனம் (திருக்கோவையார், 143:4) என்றனர். 
முன்னோர் புன்செய் பயிர்கள் பயிரிடும் இடத்தைக் கொல்லை என்றதை இன்றைக்கும் காணலாம். இது படப்பை என்று பெயர் பெறுவதைப் பெருங்கதை (1:48:145) குறிப்பிட்டுள்ளது. அதில் மா, பலா போன்ற மரங்களை வளர்த்தால் தோப்பு என்றும் கத்திரி, மிளகாய் முதலான காய்கறிகள் பயிரிட்டால் தோட்டம் என்றும் கூறுவர். அத்தோட்டத்தில் ஒரு பகுதியை அடைத்துப் பயிரிடுவதைத் தொண்டி என்றனர். 
பொதுவாக நெல் விளையும் இடத்தை வயல் என்று கூறுவர். அவற்றில் நாற்று வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் நிலத்தை வித்திடுபுலம் என்று பரிபாடல் (7:35) குறிப்பிடுவதோடு நாற்றாங்கால் என்று மக்கள் வழங்குவதையும் காணலாம்.   
வளர்ந்த நாற்றைப் பிடுங்கி நடும் இடத்தை வயல் என்று கூறினாலும் அதற்குச் கழனி, செய், செறு, பண்ணை, பணை, பழனம், திருத்து, பற்று, வயக்கல், மா, வேலி, தடி, குண்டு, கண்டம், துண்டம், பத்து, அடி 
எனப் பல்வேறு பெயர்கள் இருப்பதை இலக்கியங்கள் விரித்துக் கூறும். அவற்றில் கழனி என்பது தொண்டை நாட்டிலும் குண்டு என்பது சோழ நாட்டிலும் வழக்கில் உள்ளதைக் காணமுடியும்.   
இத்தகைய விளைநிலங்கள் ஊரின் பொது காரியங்களில் ஈடுபடுவோர்க்கு ஊதியமாக மன்னர் அல்லது சபையோரால் கொடுக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. அந்நிலத்திற்கு வரி நீக்கப்படுவதால் இறையிலி (சீவகசிந்தாமணி, 2373:1) என்றனர். அவ்விறையிலி நிலத்திற்கு முற்றூட்டு (மேலது, 76), புறம் (திருப்புடைமருதூர் பள்ளு, 101), புரவு (புறநானூறு, 297:5), காணி (பெருங்கதை, 1:35:81), விருத்தி (மேலது, 4:3:24), மானியம் (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 99:1), உம்பளம் (கண்ணுயம்மன் பள், 93:2) என்னும் வேறுபெயர்கள் வழங்குவதை இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.  
இறையிலி நிலங்களை கோயிலுக்காகத் திருவிடையாட்டமும் (திருக்குற்றாலக் குறவஞ்சி, 81:3:4), அந்தணருக்காகப் பிரமதேயமும் (பதிற்றுபத்து, 2ஆம் பத்து, பதிகம், உரை), அர்ச்சகருக்காகப் படிப்புறமும் (சிலப்பதிகாரம், 30:151), வணிகருக்காக எட்டிப்புரவும் (நன்னூல், 158, மயிலைநாதருரை), உணவிற்காக அடிசிற்புறமும் (சீவகசிந்தாமணி, 2577:3), தருமத்திற்காக அறப்புறமும் (மேலது, 76:1) வழங்கியுள்ளதைக் காணமுடிகிறது.     
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர். 
கேசவன் திருத்து (முக்கூடற்பள்ளு, 92), ஐயனார் வயல் (கோட்டூர் நயினார் பள்ளு, 104) என்பன தெய்வங்கள் பெயராலும் அணைப்புரவு (திருப்புடைமருதூர் பள்ளு, 23), ஏரிப்புரவு (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 99:4) என்பன நீர்நிலைகள் பெயராலும், வன்னியடித்திட்டு (முக்கூடற்பள்ளு, 92) அரசடி (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 100:2) என்பன மரங்கள் பெயராலும் கரிசல்புரவு (மேலது, 100:2) என்பது நிறத்தின் பெயராலும் சம்பாச்செய் (கண்ணுடையம்மன் பள், 82:2) என்பது பருவத்தின் பெயராலும் அழைத்துள்ளதைக் காணலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT