தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 04-06-2023

4th Jun 2023 04:07 PM

ADVERTISEMENT

 

தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் அளப்பரிய பங்களிப்பு நல்கிவரும் பதிப்பகங்களில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தனியிடம் பெறுகிறது. இடதுசாரி சிந்தனையைப் பரப்புவது அதன் அடிப்படை நோக்கமாக இருந்தாலும், புனைவு இலக்கியத்துக்கும், சமூக சிந்தனையுடன் கூடிய படைப்புகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பதிப்பகங்களில் அதுவும் ஒன்று. 

75 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக நண்பர் ஸ்டாலின் குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஏற்கெனவே அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர்தான் என்பதும், அதன் வளர்ச்சியிலும் செயல்பாடுகளிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும், புதிய பொறுப்புக்கு அவரைத் தகுதியுடையவராக்கி இருக்கின்றன என்பதைவிடப் பொருத்தமானவராக்கி இருக்கின்றன என்பதே சரி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1950-இல் தொடங்கப்பட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வளர்ச்சிக்கு உரமிட்டவர்கள் பல முன்னோடித் தலைவர்கள். தோழர் ஜீவானந்தம் தொடங்கி தோழர் தா. பாண்டியன் வரையில் அந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டியுள்ளார்கள். சமீபகாலம் வரை மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அதன் தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.

ADVERTISEMENT

தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை, பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் ஏற்பட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒரு முக்கியமான காரணம். அந்தப் பதிப்பகத்தின் நடமாடும் விற்பனை நிலையம் ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்பனை செய்வது பள்ளிப் பருவத்தில் எனக்கு வியப்பை ஏற்படுத்தும். மாணவனாக நான் முதல் முதலில் அந்த நடமாடும் விற்பனை நிலையத்தில் புத்தகம் வாங்கியது என் நினைவிலிருந்து இன்னும்கூட அகலவில்லை. 

அப்படிப்பட்ட பழம்பெரும் புத்தகப் பதிப்பகத்தின் தலைவர் பொறுப்பு, புத்தகத்தை நேசிக்கும் நண்பர் ஸ்டாலின் குணசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர், கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் பிரம்மாண்டமாக புத்தகத் திருவிழா நடத்தி வருபவர்; தனது இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருப்பவர்; "விடுதலை வேள்வியில் தமிழகம்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர்; "மக்கள் சிந்தனைப் பேரவை' என்கிற வாசிப்பு இயக்கத்தை நடத்துபவர்; தலைசிறந்த மேடைப் பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனத்துக்கினிய நண்பர். நானே அந்த நிறுவனத்தின் தலைவரானது போன்ற பூரிப்பு எனக்கு...

செவ்வாய்க்கிழமை, தில்லி ரஃபி மார்க்கிலுள்ள வி.பி. ஹெளசில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் து.ராஜாவை சந்திக்கச் சென்றிருந்தேன். ஸ்டாலின் குணசேகரன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் தலைவரானது குறித்து பேச்சு வந்தது. அப்போது அவர் புதியதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான குணசேகரனும், ஈரோடு குணசேகரனும் து. ராஜாவுடன் மாஸ்கோ சென்றிருந்தனர். அப்போது, இரண்டு குணசேகரன்களுக்கும் இடையே ஏற்பட்ட பெயர்க் குழப்பத்தை தீர்க்க, ஈரோடு குணசேகரனுக்கு "ஸ்டாலின்' குணசேகரன் என்கிற அடைமொழியைக் கொடுத்தது தான்தான் என்று தோழர் து.ராஜா கூறினார்.

ஈரோடு தங்கமுத்து குணசேகரன், "ஸ்டாலின்' குணசேகரனாக நாமகரணம் சூட்டப்பட்ட பின்னணி இதுதான். தோழர் ராஜா வைத்த பெயர் நிலைத்துவிட்டது. 

-------------------------------------

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது "தூக்கம் (ஏன், எதனால், எப்படி)' என்கிற புத்தகம். ஹிப்னோ ராஜராஜன் என்பவர் எழுதியிருக்கும் அந்தப் புத்தகம் எனது ஆர்வத்தைத் தூண்டியது. எடுத்து வைத்துக் கொண்டேன். சமீபத்திய தில்லி - சென்னை விமானப் பயணத்தின்போது அதுதான் எனக்குத் துணையாக இருந்தது.

"நீங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாத நிலை. உங்களை நீங்களே உணர முடியாத நிலை' என்று தூக்கத்தை வர்ணிக்கிறார் ஹிப்னோ ராஜராஜன். தூக்கம் குறித்து அருட்பிரகாச வள்ளலார் சில கருத்துகளைக் கூறியிருப்பதையும் பதிவு செய்திருக்கிறார். "தீபம் இல்லாத இருட்டறையில் தூங்கக்கூடாது; இடதுகை பக்கம் கீழ் இருக்கும்படியும், வலது கை மேல் பக்கமாகவும் இருக்க வேண்டும்; மல்லாந்து, குப்புறப் படுத்து தூங்கக்கூடாது; உணவு உண்டவுடன் தூங்கக்கூடாது; பகல் தூக்கம் கூடாது; சூரியன் உதிக்கும் முன் எழுந்துவிட வேண்டும்' என்பவை வள்ளலாரின் அறிவுரைகள். 

தூக்கத்துக்கு மாத்திரை தேடினால் அது துக்கத்துக்கான யாத்திரை ஆகிவிடும் என்று எச்சரிக்கிறார் ராஜராஜன். அதற்கு பதிலாக ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை முறையைப் பரிந்துரைக்கிறார். அது மட்டுமல்லாமல், தூக்கம் வருவதற்கான தனது சில ஆலோசனைகளையும் அவர் கூறுகிறார். பிராண முத்திரை, பிராஞ்சியால் முத்திரை போன்ற வழிமுறைகளையும், தூக்கம் வருவதற்கான சில பயிற்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.

தூக்கம் குறித்த புத்தகம் என்று பார்த்தால், அதன் பிற்பகுதியில் "ஹிப்னாட்டிசம்' எனும் மனம் மயக்கும் கலையும், ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையும் முன்னுரிமை பெற்று விடுகின்றன. ஹிப்னாட்டிசத்தின் வரலாற்றில் தொடங்கி அதன் மூலம் மன நோய்களுக்குத் தீர்வு காண்பது வரை விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. தூக்கம் குறித்து மட்டுமல்லாமல், பல செய்திகளும் விளக்கங்களும் ஹிப்னோ ராஜராஜனால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

திருப்பூரில் மனநல மையம் நடத்தி வரும் ஹிப்னோ ராஜராஜன், உண்மை கண்டறியும் சோதனை செய்வதில் வல்லவர் என்றும், அதை பயன்படுத்தி மனநோய்களுக்கு ஆழ்மன சிகிச்சை மூலம் தீர்வு காண்பவர் என்றும் அவரது தன்விவரக் குறிப்பு தெரிவிக்கிறது.

-------------------------------------
                                                       

திருக்கோவிலூரைச் சேர்ந்த தே. சங்கர் என்கிற கவிஞர் தவசி, மத்திய கலால் மற்றும் சரக்கு வரி கண்காணிப்பாளர். அவரது இந்தக் கவிதையை நண்பர்கள் பலரிடம் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது உங்களிடமும்...

இந்திய அரசமைப்புச் சட்டத்தை
வடிவமைத்தபோது
அம்பேத்கார்
அரசியல்வாதிகளின் மனசாட்சியை
கணக்கிலெடுத்துக் கொண்டாரா
எனத் தெரியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT