தமிழ்மணி

நெற்களமும்  உப்பளமும்

ச. சுப்புரெத்தினம்

சங்க காலத்தில் மருத நிலத்தில் நெல் விளைவிக்கும் கழனி உழவர்களுக்கும், கடற்கரைப் பனித்துறையில் உப்தமிழ்மணிபு விளைவிக்கும் பரதவர்களுக்கும் இடையே சிறு சண்டையொன்று நடந்தது என்பதான பதிவு அகநானூற்றுப் பாடலொன்றில் அழகுற வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நெல் அறுவடை நடைபெறும் மகிழ்ச்சியான தருணம் அது.
குடவாயில் கீரத்தனார் என்ற புலவரால் புனையப்பட்ட இப்பாடல், "பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய விடத்துத் தோழி சொல்லியது' என்னும் அகத்துறையில் ஆனது.
பொற்பூண் அணிந்த "எவ்வி' என்பவனது ஊர் "நீழல்' என்பதாகும். அவ்வூரினைப் போன்று, மிக்க அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் நல்ல நெற்றியையும் உடைய பரத்தையொருத்தியுடன், மலர்மணம் வீசுகின்ற சோலையொன்றில் முந்தைய நாளில் தங்கி மகிழ்ந்திருந்த தலைவன் ஒருவன், மறுநாள் தன் தலைவியைக் காண வருகின்றான்.
தலைவனின் செயலை எண்ணித் தலைவி அழுத கண்களுடன் கலங்கி நிற்கிறாள். இக்கலக்கத்தைத் தோழி தலைவனிடம் எடுத்துக் கூறுகின்றாள்.
"எவ்வி' என்பவனது, வளமுடைய அழகான "நீழல்' என்ற அவ்வூர், தலைவன் சேர்ந்திருந்த அழகிய அப்பரத்தைக்கு உவமையாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
மருத நிலப் பகுதியில் தாழ்ந்த கிளைகளை உடைய மருத மரம் வளர்ந்து சிறந்த அழகு பெற்றிருக்கும், நீர் சூழ்ந்த அகன்ற, நெற்கதிர்களை அடிக்கும் நெற்களம் ஒன்றுள்ளது. அதில் குவிக்கப்பட்டிருக்கும் நெற்கதிர்ப் போரினைப் பிரித்துத் தரையில் பரப்பிவிட்டு, அதன்மேல் எருதுகளைப் பிணைத்துக் கட்டிப் போரடிக்கிறார்கள் உழவர்கள்.
அவ்வாறு போரடிப்பவர்கள் சிறிது ஓய்வு கருதி, எருதுகளை அப்படியே விட்டுவிட்டு அகன்று சென்று கள்ளுண்டு வந்து மீண்டும் போரடிக்கின்றனர். பின்பு எருதுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். எருதுகளால் மிதித்துத் துவைக்கப்பட்ட வைக்கோலிலிருந்து இற்று வீழ்ந்த நெல்மணிகளைத் தொகுத்தெடுத்துக் காற்றில் தூற்றுகின்றனர்.
இந்த நெல்தூற்றுதலில், நெல்மணிகள் மட்டும் உதிர்ந்து கீழே விழ, வீசும் காற்றில் பறந்து போகும் துரும்புகள் முழுவதும் அந்நெற்களத்தின் அருகிலிருக்கும் உப்பளத்திலுள்ள சிறிய உப்புப் பாத்திகளின் முழுவதும் வீழ்ந்து பரவிவிடுகின்றன. இதனால் அவ்வெள்ளுப்புப் பரப்பானது நிறம் மாறிப் போய்விடுகிறது.

இவ்வாறு உப்பின் தன்மை மாறிக்கிடப்பதைக் கண்ட பரதவர்கள், நெல்லைத் தூற்றிய உழவர்கள் மீது சினம் கொள்கின்றனர். கீழே கிடக்கும் சேற்றுக் குழம்பினை அள்ளி உழவர்களின்மீது வீசியெறிந்து சண்டையிடுகின்றனர்.

உழவர்கள் மற்றும் பரதவர்களிடையேயான இச்சண்டையைக் கண்ட முதியோர்களாகிய அம்மருத நிலச்சான்றோர், சண்டையிடும் அவ்விரு பிரிவினரின் கைப்பிணைப்பினை விடுவித்து, அவ்விரு சாராரையும் விலக்கி விடுகின்றனர்.

உழவர்களின் அலட்சியப் பாங்கிலான நெல் தூற்றுதல் என்னும் செயலால்தான் பரதவர்களின் வெள்ளுப்பு நிறைந்த அந்த "உப்பளம்' மாசுபட்டது. பரதவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. ஆதலால், நரைமூதாளர்களாகிய மருத நிலத்தார் பரதவர்களுக்கு இனிய கள்ளினை அளித்துச் சமாதானப் படுத்தினார்களாம்.

சிறு சண்டையை அழகுற விவரிக்கும் அப்பாடல் இதுதான்:

தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பழித்துக்
கள்ளார் களமர் பகடுதளை மாற்றிக்
கடுங்காற்(று) எறியப் போகிய துரும்புடன்
காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்
இருநீர்ப் பரப்பிற் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி
வெள்ளுப்புச்
சிதைதலிற் சினைஇக்
கழனி உழவரொடு
மாறெதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்(று) அள்ளல்
எறிச்செருக் கண்டு
நரைமூ தாளர்
கைபிணி விடுத்து
நனைமுதிர் தேறல்
நுளையர்க்(கு) ஈயும்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன நலம்
பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை
நீதற் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னாளே.
(அக.366)

இத்தகைய பாடல்கள் செவ்வியல் இலக்கியங்களுக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT