தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 22-01-2023

DIN


கோவையில் விஜயா வாசகர் வட்டம் சார்பில் நடந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் விருது நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்துகொண்டேன். அன்று அ. முத்துலிங்கத்தின் பிறந்த நாளும்கூட என்பது தனிச்சிறப்பு. தனது பெயரிலான விருதுக்கு, விருதாளரைத் தேர்ந்தெடுத்தவரும் அவர்தான். அவர் தேர்ந்தெடுத்த விருதாளர் எழுத்தாளர் ஜெயமோகனின் "அறம்' சிறுகதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த பிரியம்வதா ராம்குமார் என்பவர்.

விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சிக்குப் பதிப்பு மட்டுமே அல்ல முனைப்பு. அவர் வாரத்துக்குக் குறைந்தது பத்து புத்தகங்கள் படிப்பவர். நல்ல படைப்பு எது என்பதற்கான "உரைகல்' வேலாயுதம் அண்ணாச்சிதான். படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் குழுவுக்கு அவரைத் தலைவராக்கி தமிழக அரசு விருதாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்வு குறித்து விமர்சனங்களே எழாது.

விஷயத்துக்கு வருகிறேன். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுவதுபோல,  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிற மொழியில் பெயர்த்தலும் மிகமிக அவசியம். அப்போதுதான் தமிழின் பெருமை உலகமெலாம் பரவும். அந்தந்த மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழிலும், தமிழிலிருந்து நேரடியாக ஏனைய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டுமே தவிர, ஆங்கில மொழியாக்கத்தின் வாயிலாக மொழியாக்கம் என்பது படைப்பின் உணர்வை வெளிப்படுத்தாது என்பது என் கருத்து.

அ. முத்துலிங்கம் விருது ஒரு முன்னோடி முயற்சி. இதுபோன்று பல விருதுகள் நிறுவப்பட வேண்டும். தமிழர்கள் பல மொழிகளைக் கற்றுத் தேற வேண்டும். அதன் மூலம்தான் தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளைச் சென்றடையும். அதுதான் அங்கே நான் சொன்ன செய்தி. இங்கே மீண்டும் வலியுறுத்தும் செய்தி.

-------------------------------------------------------------------------


சென்னை புத்தகக் காட்சியில் எத்தனையோ புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றன. வழக்கமான படைப்புகள் மட்டுமல்லாமல், வித்தியாசமான ஆய்வுகளும், புதிய தகவல்களை வெளிப்படுத்தும் நூல்களும் வெளியாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பாரதியியல் ஆய்வாளர்களில் முனைவர் ய. மணிகண்டனுக்கு சிறப்பான ஓர் இடம் உண்டு. அவரால் தொகுக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டிருக்கும் புத்தகம் "ஓவிய பாரதி'. "பாரதியாரின் ஓவியங்களா' என்று கேட்காதீர்கள். அல்ல, இது வேறொருவர் வரைந்த ஓவியங்கள்.

மகாகவி பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய "சுதேசமித்திரன்' நாளிதழ், 1934 முதல் 1937 வரையிலான நான்கு ஆண்டுகள் ஒரு வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்தது. பாரதியாரால் தமது காலத்தில் செய்து பார்க்க முடியாமல் போன கனவொன்றை நனவாக்கும் முயற்சி அது. நூற்றுக்கும் மேற்பட்ட பாரதியாரின் கவிதைகளை, அவற்றுக்கேற்ற ஓவியங்களுடன் தொடர்ந்து வெளியிடுவது என்பதுதான் அந்த முயற்சி. அந்த முயற்சியை முன்னெடுக்க "சுதேசமித்திரன்' நாளிதழ் துணைக்கு அழைத்த ஓவியரின் பெயர் கே.ஆர். சர்மா.

கே.ஆர். சர்மா கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமான ஓவியர். "மணிக்கொடி'யின் முதல் இதழில் அவரது கருத்துப்படம் வெளிவந்திருக்கிறது. பாரதிதாசனின் "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' என்கிற கவிதைகளுக்கான இதழில் இவரது ஓவியங்கள் வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்.

தனது கவிதைகளைப் புகைப்படங்களுடன் வெளியிடுவது என்பது பாரதியின் கனவு. தனது நண்பர் தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில், அவரது சகோதரர் டி.எஸ். சொக்கலிங்கத்திடம் அந்த ஆசையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கவிதைகளை அச்சிட ஒரு லட்சம் ரூபாய் தேவை என்றும், சித்திரக்காரருக்கு அதில் அரை லட்சம் ரூபாயும், அமெரிக்காவில் அச்சிட மீதம் அரை லட்சம் செலவாகும் என்றும் பாரதியார் தன்னிடம் தெரிவித்ததாகப் பதிவு செய்திருக்கிறார் டி.எஸ். சொக்கலிங்கம்.

"சுதேசமித்திர'னில், கே.ஆர். சர்மா வரைந்த 119 ஓவியங்களில் 83 ஓவியங்களை தனது சேமிப்பைச் செலவழித்து, தேடிப்பிடித்துத் தொகுத்திருக்கிறார் முனைவர் ய. மணிகண்டன். அதில் 21 ஓவியங்களில் தலைப்பாகை இல்லாமலும், 13-இல் முண்டாசுக் கவிஞராகவும் தோற்றமளிக்கிறார் மகாகவி.

பாரதியியலில் ஓவியங்களுக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு. ஓவியர் கே.ஆர். சர்மாவுக்கு நன்றி செலுத்தும் வகையில், மகாகவி பாரதி ஓவியக் கண்காட்சி நடத்தி, பாரதியார் குறித்த ஓவியங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்த வேண்டும். பாரதியாரையும், அவரது பாடல்களையும் தங்களது தூரிகையின் வாயிலாகப் பதிவு செய்த அனைத்து ஓவியர்களின் படைப்புகள் இடம் பெறுவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் போட்டி நடத்தி அந்த ஓவியங்களையும் அதில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.

முனைவர் ய. மணிகண்டனின் "ஓவிய பாரதி'யைப் படித்தபோது, எனக்கு ஏற்பட்ட உற்சாகத்தில் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. முனைவர் மணிகண்டனின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------------


தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை, நாவல், சிறுகதை, விமர்சனம், தொகுப்பு, மொழி பெயர்ப்பு என எழுதிக் குவித்தவர் நகுலன். அவரை அகற்றி நிறுத்தி நவீன தமிழ் இலக்கியம் குறித்துப் பேச முடியாது. "அவர் கவிதைகளில் இதுதான் சிறந்தது என்று எதையும் எடுத்துக்காட்ட முடியாமல் எல்லாம் ஒரே தரத்ததாக இருக்கும்' என்று க.நா.சு.வால் குறிப்பிடப்பட்டவர் அவர்.

நகுலன் நூற்றாண்டு வெளியீடாக அவரது கவிதைகளைத் தொகுத்தும், பதிப்பித்தும் இருக்கிறார் "காவ்யா' சண்முக சுந்தரம். அதிலிருந்தது ஒரு கவிதை - 
வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு

 அடுத்த வாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT