தமிழ்மணி

பாரதியார் போற்றிய வள்ளுவர்

சீனி. விஸ்வநாதன்

வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிமுறைகளை உணர்த்திய தெய்வப் புலவர்களில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவ நாயனார் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுகிறார். மகாகவி பாரதியார் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை மிகத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். அந்த நிலையிலும் பாரதி நம் முன்னோர்களால் போற்றி வழிபட்ட திருவள்ளுவரிடத்திலும், அவர் செய்தருளிய திருக்குறளிடத்தும் தம் நெஞ்சத்தைப் பறிகொடுத்திருந்தார்.

திருவள்ளுவருக்கு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்றும், அவருக்கு நினைவுச் சின்னங்கள் நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவ நாயனார் கோயிலைச் செம்மையாகக் கட்ட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பாரதியார். வள்ளுவரின் குறளை "வான்மறை' என்றும், "தமிழ் வேதம்' என்றும் போற்றியவர் பாரதி. இன்னும் சொல்லப்போனால் "திருவள்ளுவரைப் போன்ற தெய்வம் கண்ட கவி பூமிதனில் எங்குமே பிறந்ததில்லை' என்றே பெருமிதம் கொண்டார் பாரதி.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று குரல் கொடுத்தவர் பாரதியார். "திருக்குறள்மீது அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழ் அபிமானம் உண்மையிலேயே பிறக்க நியாயம் இல்லை' என்று பாரதி எழுதினார்.

இவை மட்டுமல்ல, "தமிழ்நாட்டுப் பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய வருகின்றவர்களுக்கு திருக்குறளில் தகுந்த பயிற்சி இருக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரின் மகிமை குறித்தும், அவருடைய திருக்குறளின் சிறப்புத் தன்மை குறித்தும் பல இடங்களில் எடுத்துக் கூறியவர் பாரதியார்.

பாரதியார், ""திருவள்ளுவ நாயனார் "முப்பால்' என்ற பெயருடைய திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் செய்தருளினார். ஆயிரத்து முந்நூற்று முப்பது சிறிய சிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை'' என்று எழுதி வள்ளுவரைப் போற்றினார் (பாரதியார் கட்டுரைகள் - 1940 - பக்: 249)

வள்ளுவரைப் போற்றிப் புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தனக்கு வாய்ப்பு கிட்டிய போதெல்லாம் திருக்குறள் பாமணிகளை மேற்கோள்களாகத் தம் படைப்புகளில் எடுத்தாளவும் செய்தார் பாரதியார்.

பற்பல அறிஞர்கள் திருக்குறளை நுணுகி ஆய்ந்துள்ளனர்; ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தை எடுத்துக்காட்டியும் உள்ளனர். ஆனால், பாரதியின் அணுகுமுறை சற்றே வித்தியாசமான முறையில் அமைந்திருக்கக் காணலாம்.

குறிப்பாக, பாரதியார், அரசியல் கருத்துகளை விளக்க முற்பட்டபோதும், மக்களுக்கு தரும நெறிகளை எடுத்துக்காட்டாகத் தெரிவிக்க முற்பட்டபோதும் நெஞ்சில் பதியும் வண்ணம் குறட்பாக்களையே மேற்கோளாகக் கொண்டார்.
 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்கிற குறள் பாரதியின் நெஞ்சத்தில் ஆழப்பதிந்துவிட்ட குறள். அதனால், அவர் தம் படைப்புகளில் அக்குறளைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், குறட்பாவை பாரதி கையாண்ட முறையில் புதுமையைக் காணலாம்.


1907-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தென்னிந்திய கைத்தறி சங்கத்தின் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றியவர்களுள் முக்கியமானவர் மிஸ்டர் சாட்டர்டன் என்பவர் ஆவார். இவர் சுதேசிய முறைமையின் விரோதி ஆவார். இவரை, "நமது சுதேசிய முறைமையின் சத்துருக்களிலே ஒருவர்; சுதேசிய நிந்தனையாளர்' என்றே பாரதி குறிப்பிடுவார்.


ஆயினும் அன்றைய தினம் அவருடைய சொற்பொழிவில் நம்மவர்களுக்கு வேண்டிய சில நல்ல விஷயங்களும் இருந்தன. மிஸ்டர் சாட்டர்டன் சொற்பொழிவு வேறொரு பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. அந்தப் பத்திரிகையில் பிரசுரமான சொற்பொழிவைக் கண்ட பாரதி, சுதேசி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த பகுதியை மட்டும் அவசியம் கருதிப் பயன்படுத்திக் கொண்டார்.


மிஸ்டர் சாட்டர்டன் தெரிவித்த சுதேசிய ஆதரவுச் செய்தி இதுதான்: "இந்தியாவானது பூர்வம் தொழில், வியாபாரம் முதலியவைகளில் சிறப்புப் பெற்று வாழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அப்படி இனியும் அது வாழவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களானால், காலத்திற்குரிய வேற்றுமைகளைக் கூசாமல் மேற்கொண்டு, இப்போது மேல் நாடுகளில் தொழில்கள் என்ன விதமாய் நடத்தப்படுகின்றன என்பதைக் தெரிந்துகொண்டு, உங்கள் தலைவரை நீங்கள் முழுவதும் நம்பி உங்கள் பணத்தை அவர்கள் வசம் ஒப்புவிக்க வேண்டும்.


இந்தியாவில் நெசவுத் தொழில் விருத்தியாக வேண்டுமானால், இப்போது போடப்பட்டு வரும் நாட்டுத் தறிகளை விருத்தி செய்து, அந்தத் தறிகளில் 40 அல்லது 50 தறிகளை ஒரே இடத்தில் வைத்துப் போதுமான முதல்போட்டு நெசவுக்காரர்களை வேலைக்கு வைத்து நடத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் இப்போதைப் போல, அந்தத் தொழிலானது வறுமையால் வருந்தாமல் காலத்துக்குத் தக்கபடி விருத்தியாகி முன்னுக்கு வரும்.


வேண்டிய முதல்போட்டு, நடத்துவதுமல்லாமல், நெசவுச் சாலைகளை நடத்துவோர் படிப்பாளிகளாக இருக்க வேண்டும். தொழில் செய்வோருக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களது திறமை அதிகப்பட்டு, அவர்கள் நல்ல நிலைமைக்கு வரவேண்டும்.


சென்னை நகரில் தண்டையார்பேட்டையில் மிஸ்டர் தியாகராஜ செட்டியார் சுமார் 40 தறிகள் வைத்து நெசவு நடத்தி லாபம் பெற்று வருகிறார். அவரைப் போலவே அனேகர் செய்ய வேண்டும்'. இந்த பகுதியைத்தான் பாரதி தம்முடைய "இந்தியா' இதழிலே பிரசுரம் செய்தார்.


(இந்தியா: 2.2.1907 - பக்: 6)
ஆக, நமக்கு விரோதியாக இருப்பவர்கள் சொல்லும் விஷயங்களில்கூட நமக்கு ஹிதமான விஷயங்கள் இருக்குமேயானால் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டுவது நம்முடைய பெருங்கடமையாகும் என்பதை விளக்க வந்த பாரதி எடுத்துக்காட்டிய குறள்தான்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


இந்திய நாடெங்கும் அந்நியப் பொருள்களைப் புறக்கணித்து, நமது நாட்டுப் பொருள்களையே மக்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்கிற உயர் நோக்கத்தில் "சுதேசி இயக்கம்' மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், சுதேசிய இயக்கத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் மிஸ்டர் சாட்டர்டன் என்பதால், பாரதி அவருடையக் கருத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.


1909-ஆம் ஆண்டு வாக்கில் சென்னையிலிருந்து "பிழைக்கும் வழி' என்னும் மாதப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதன் 1909 ஏப்ரல் மாத இதழில் வி. கிருஷ்ணசாமி ஐயர், வாலிபர்களுக்கான கல்வி முறைமையைப் பற்றிக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். பொதுஜன நலத்திற்கு அனுகூலமான முறையைத் தெரிவித்த காரணத்தால், கிருஷ்ணசாமி ஐயரை பாரதி மனதாரப் பாராட்டி எழுதினார்.


கிருஷ்ணசாமி ஐயரும் பாரதியாரும் அரசியலில் எதிரெதிர் துருவங்களைப்போலத் திகழ்ந்தவர்கள். பொதுநல நன்மை கருதி கிருஷ்ணசாமி ஐயர் தெரிவித்த கருத்துகள் பாரதியின் தேசிய நெஞ்சத்தைத் தொட்டன.


அதனால் கிருஷ்ணசாமி ஐயர் தெரிவித்த கருத்து மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதனால் கருத்தின் சாரத்தை "இந்தியா' பத்திரிகையில் பாரதி பதிவு செய்தார். அதாவது, "நமது தேசத்து வாலிபர்களையெல்லாம் ஒரேயடியாக இங்கிலீஷ் பாடசாலைகளுக்கு அனுப்பி நாம் நாசம் செய்து விடுகிறோம். இனி, அங்ஙனம் செய்யலாகாது' என்பதே கிருஷ்ணசாமி ஐயருடைய கட்டுரையின் சாரம் ஆகும்.


மேலும், அவர் "இங்கிலீஷ் படிப்பையே நம்பி மூடத் தாய் - தந்தையர் தங்கள் வயிற்றைச் சுருக்கி, வாயைச் சுருக்கிச் சொல்ல முடியாத கஷ்டங்கள் பட்டு, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பல பிள்ளைகள் தவறுவது நிச்சயம். நாளுக்கு நாள் அந்நியன் தனது கூலியைப் படிப்புக்காக அதிகப்படுத்துகிறான். அனாவசியமும் கஷ்டமுமான பாடங்களைக் கொண்டு நுழைக்கிறான்.


இதனால், பிள்ளைகளின் பணச் செலவும், சிரமமும் அதிகப்படுகின்றன. எப்படியேனும் படிப்பை நிறுத்தித் தீர்தல் அவசியமாகிறது. இந்தப் படிப்பினால் பிள்ளைகளுக்கு என்ன லாபம் உண்டாகின்றது? யாதொரு தொழில் செய்வதற்கும் இது ஸாதகமன்று. பரம்பரையான தொழிலையும் - இந்த மோசப்படிப்பை நம்பி இளமையிலேயே கற்றுக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். பிழைப்புக்கு வழியில்லாமல் போகிறது.


பிழைப்புக்கு ஆதாரமாக எவ்வளவோ தொழில்கள் உண்டு. அவரவருக்கு ஏற்றபடி இரண்டொரு கைத்தொழில்களை ஒவ்வொருவரும் அவசியம் கற்று வந்தால் எப்படி பிழைப்புக்கு ஹானி வரும் ?


கைத்தொழிற்கல்வியே நமக்குப் பிரணாகாரம். நமது பால பாடசாலைகளிலே கைத்தொழில் வகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்துடன் ஊர்தொறும் தொழில் பாடசாலைகளைகளையும் ஏற்படுத்த வேண்டும்' என்று பதிவு செய்தார் பாரதியார் (இந்தியா: 22-5-1909, பக்: 3-4)


நமது தேசத்தார் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பெரிய விஷயத்தைப் பற்றி மிகத் தெளிவாக கிருஷ்ணசாமி ஐயர் எழுதியதைப் பார்த்து உளம் மகிழ்ந்து பாராட்டி எழுதியவர் பாரதியார்.


சொல்லப்போனால், பொதுநலம் கருதி நல்லதை எவர் சொன்னபோதிலும், வேற்றுமை பாராமல் ஏற்றுக்கொண்டு மெய்ப்பொருள் கண்டவர் பாரதி. இடம், பொருள், ஏவல் கருதி பாரதி சுட்டிக்காட்டிய குறள்மணி இதுதான் :


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் மெய்ப்பொருள் கண்டவர் பாரதி. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதை பாரதி பெரிதும் விரும்பினார்; அதனால் அக்கலை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் பாரதி பெரிதும் அக்கறை காட்டினார்.


கவிதைக் கலையில் "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்ற லட்சியம் கொண்டவர் பாரதி. சொற்செட்டுடன் சுருங்கிய கவிதை வடிவிலே பேருண்மைகளை அடக்கி விடலாம் என்பது பாரதியின் கொள்கை என்றுகூடக் கூறலாம்.


அந்த வகையில் ஜப்பானியப் புலவரிலே தலைசிறந்து விளங்கியவர் உயோநே நோக்குச்சி என்பவர் ஆவார். அவர் ஒரு சமயம் "இங்கிலாந்து, அமெரிக்க தேசங்களில் உள்ள இங்கிலீஷ் கவிதைகளைக் காட்டிலும், ஜப்பானியக் கவிதைகளே சிறந்தவையென்றும், ஜப்பானியக் கவிதைகளில் அனாவசியமான பதச்சேர்க்கை, அனாவசியமான கருத்து விளக்கம் - இவை இல்லாமல் முத்துப்போல பதங்கள் கோக்கும் முறையைக் காணலாகும்'' என்றும் தம்முடைய கருத்தைத் தெரியப்படுத்தி இருந்தார்.


ஜப்பானியப் புலவரின் கருத்தைப் படித்த அளவில், பாரதிக்குத் திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது. வந்தவுடன் பாரதியின் எழுதுகோல் இவ்வாறு எழுதியது: "நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். தமிழ்நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது.


நோக்குச்சி சொல்வதிலே அருமையான உண்மை இருக்கிறது என்று பலரும் கருத்துத் தெரிவித்த நிலையில்தான் பாரதி கீழ்க்கண்ட குறளைச் சுட்டிகாட்டினார்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
(பாரதி தமிழ் - 1953 - பக்: 154-155)


1920-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், திருநெல்வேலியில் மாகாண ஆசாரத் திருத்த மஹாசபையின் 22-ஆவது ஆண்டுக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தச் சபையின் அறிக்கையுடன் கூடிய அழைப்பிதழ் ஒன்றை, சபையார் பாரதிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.


அப்போது பாரதி சென்னை "சுதேசமித்திரன்' பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். ஆசாரத் திருத்தச் சபையின் செயல்பாடுகள் குறித்துத் தம்முடைய கருத்துகளை 17-6-1920 தேதியிட்ட "சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஒளிவு மறைவுக்கு இடமின்றிப் பதிவும் செய்திருந்தார்.


பொதுவாக, ஆசாரத் திருச்சபையானது, ராஜரீக விஷயங்களில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. சொல்லப்போனால், ஆசாரத் திருத்தச் சபையார் விவாதங்கள் நடத்திச் சில தீர்மானங்களைச் செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.


தாங்கள் செய்த தீர்மானங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளச் சபையார் முற்பட்டதாக விவரம் யாதும் தெரிந்துகொள்ளஅறிக்கையில் வழியில்லை என்பதாக பாரதி கருதினார்.


இந்தவிதமாக, நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நம்மவர் கடமை. இதற்கு அரசாங்கத்தின் தயவு தேவையில்லை என்பதாகப் பாரதி உணர்ந்தார்.


தெளிவாக, கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த 1920-ஆம் வருஷம் சபை கூடும்போதாவது ஆசாரத் திருத்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்பதாக பாரதி தம் கருத்தை "சுதேசமித்திரன்'பத்திரிகையில் எழுதிய "ஆசாரத் திருத்த மஹாசபை' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.


தம்முடைய கருத்தை வலியுறுத்திய பாரதியார், தமக்குத் தோன்றிய சில யோசனைகளையும் தாம் எழுதிய கட்டுரையில் தெளிவுபடுத்தி இருந்தார். முதலாவது, "ஆசாரத் திருத்த மஹாஸபையில் பேசுவோராவது, உண்மையிலேயே தாம் உபதேசிக்கும் கொள்கைகளின்படி நடப்பார்களா என்பதை நிச்சயித்துக்கொள்ள வேண்டும். மஹாஸபைக்கு பிரதிநிதிகளாக வந்திருப்போர் அத்தனை பேரிலும் பெரும்பகுதியார், இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் (சுதேசமித்திரன் 17-6-1920 - பக்: 6)


பாரதியார் இவ்விதமாக எழுதக் காரணம், ஆசாரத் திருத்தச் சபையின் கொள்கைகளில் பல உன்னதமானவை என்றும், நமது தேசத்தின் முன்னேற்றத்தின் பரம சாதனங்களில் ஒன்றாகவே சபை விளங்குகிறது என்றும் பாரதி நம்பியதே ஆகும். அதனால், மிகத் தெள்ளத் தெளிவாக, "இம் முயற்சி தொடங்கியவர்கள் உலகப் பொது நீதிகளை நன்கு உணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும் இப்போது இம்முயற்சி, தேச ஜனங்களின் பொதுக் காரியமாகப் பரிணமித்து விட்டது' ( சுதேசமித்திரன் 17-6-1920 : பக்: 6 ) என்று சுட்டிக்காட்டவும் பாரதி தயங்கவில்லை.


எனவே, ஆசாரத் திருத்தச் சபையின் விஷயத்தில் நம்மவர் அனைவரும் தம்மால் இயன்ற வகைகளில் எல்லாம் உதவி புரியும்படி வேண்டுகோளும் விடுத்தார் பாரதியார். ஆசாரத் திருத்தச் சபையார் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் தருணத்தில்தான்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்கிற குறள்மணியை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தினார் பாரதியார்.
ஆக, மகாகவி பாரதியார் எங்கும், எதிலும், எவரிடத்திலும் மெய்ப்பொருள் காணவே விரும்பினார் என்பது தெளிவு.

நாளை (ஜன. 16) திருவள்ளுவர் நாள்.

கட்டுரையாளர்: மூத்த பாரதியியல் ஆய்வாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT