தமிழ்மணி

இந்த வார கலாரசிகன் - (15-01-2022)

தினமணி

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் அரங்கங்கள் அதிகரித்திருப்பது போலவே புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதைக் காண முடிகிறது. வழக்கத்தை விட அதிகமாக குடும்பத்துடன் பலர் வருவதைப் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த முறை சிறுவர்களுக்கான இலக்கிய நூல்களும், அவர்களது புத்திசாலித்தனத்தையும் பொது அறிவையும் மேம்படுத்தும் வகையிலான புத்தகங்களும் இருக்கும் அரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. குழந்தைகள் கூட ஆர்வமாக புத்தகங்களைத் தேடியும் கேட்டும் வாங்குவதைப் பார்த்தபடி புத்தகக் காட்சியை வலம் வந்தேன்.

புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்திருக்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். முன்பெல்லாம் மாணவர்களை மகிழ்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது போல, பள்ளிகளில் இருந்து புத்தகக் காட்சிக்கு அவர்களை அழைத்து வர வேண்டும் என்று நான் குறிப்பிட்ட போது, மாவட்ட புத்தகக் காட்சிகளில் அது கடைப்பிடிக்கப்படுகிறது என்கிற தகவலைத் தலைவர் வயிரவன் தெரிவித்தார். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் புத்தகக் காட்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் முன்னெடுப்பில்  அனைத்து பள்ளிக்கூடங்களில் இருந்தும் மாணவர்கள் அழைத்துவரப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தப்படும் என்கிற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் பாராட்டுதலுக்குரிய அறிவிப்புடன், அனைத்து பள்ளிக்கூடங்களும் மாணவர்களை அந்த புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


சென்னை புத்தகக் காட்சியில் "இந்த வாரம்' தொகுப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது குறித்துக் கடந்த வாரமே தெரிவித்திருந்தேன். ஆறு தொகுதிகள் அடங்கிய "இந்த வாரம்' தனிப்பிரதியாக விற்கப்படுவதில்லை. 2,216 பக்கங்கள். விலை ரூ.2,400. நமது "தினமணி' அரங்கு (578 - 579) உள்பட அல்லயன்ஸ், ரஹ்மத், வானதி, விழிகள், கண்மணி பதிப்பக அரங்குகளில் மட்டுமே "இந்த வாரம்' தொகுப்பைப் பெற முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

---------------------------------------------------------------


"தினமணி'யில் நல்ல கட்டுரை எது வந்தாலும் அழைத்துப் பாராட்டுவதும், சில செய்திகள் குறித்து விவாதிப்பதும் வேலூர் விஐடி வேந்தர் கோ. விசுவநாதனின் வழக்கம்.

ராஜாஜி மறைந்த 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, "தினமணி'யின் முன்னாள் செய்தி ஆசிரியர் பா. கிருஷ்ணன் நடுப்பக்க கட்டுரை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை குறித்துப் பாராட்டினார், வேந்தர் விசுவநாதன். அண்ணல் காந்தியடிகள் பற்றிய பேச்சு எழுந்தபோது வேந்தர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். பரவலாகவே அப்படி ஒரு கருத்து நிலவுகிறது.

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபோது செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாருக்கு உதவுவதற்காக பலராலும் அங்கே நிதி திரட்டப்பட்டது. அப்படி நிதி திரட்டியவர்களில் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். காந்தியடிகளுக்கும் வ.உ.சி.க்கும் இடையே தொடர்ந்து கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது. வ.உ.சி. எழுதிய எட்டு, காந்தி எழுதிய 11 - ஆக மொத்தம் 19 கடிதங்கள் கிடைத்துள்ளன. காந்திஜியே தனது கைப்பட எழுதிய ஒரு தமிழ் கடிதம் நீங்கலாக மற்ற அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்தவை.

வ.உ.சி.க்காக தென்னாப்பிரிக் காவில் வசூலிக்கப்பட்ட தொகையை அவரிடம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான பரப்புரை தமிழகத்தில் நிலவி வருகிறது. அதைத்தான் வேந்தரும் என்னிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டார்.

சட்டென எனக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய சில கட்டுரைகளும், அவரது "வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா' என்கிற புத்தகமும் நினைவுக்கு வந்தன. உடனடியாக காலச்சுவடு அய்யாசாமி மூலம் அந்தப் புத்தகத்தை வரவழைத்தேன். இதுவரை வெளிவராத வ.உ.சி. - காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஆ.இரா. வேங்கடாசலபதியின் புத்தகம்.

அந்தப் புத்தகத்தில், 1916 பிப்ரவரி 4-ஆம் தேதி, த. வேதியப் பிள்ளைக்கு வ.உ.சி. எழுதிய கடிதம் தரப்பட்டிருக்கிறது. அதில் "ஸ்ரீமான் காந்தி அவர்களிடம் இருந்து ரூபாய் 347-15-0  வந்தது. ஓர் அச்சாபீஸ்காரருக்கு புதிய டைப்புகள் வார்ப்பதற்காக ரூபாய் 100-0-0 கொடுத்தேன். பாக்கியைக் கொண்டு எனது கடன்களில் ரூபாய் 50 தவிர மற்ற எல்லாவற்றையும் நிவர்த்தித்து விட்டேன். காகிதம் வாங்கும்போதுதான் இனி பணம் வேண்டும்' என்று வ.உ.சி. குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் பிரதியை வேந்தருக்கு அனுப்பித் தர வேண்டும். இரண்டு பேராளுமைகளின் மாண்பையும் பதிவு செய்திருப்பதற்கு ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவருக்கு இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் "பாரதியார் விருது' வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

---------------------------------------------------------------

புத்தகக் காட்சியில் ரஹ்மத் பதிப்பக அரங்கில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரியை சந்தித்தேன். அரசியல்வாதியான அவர் ஓர் அற்புதமான கவிஞரும் கூட என்பதை என்னிடம் தந்த அவரது "புயலோடு போராடும் பூக்கள்' கவிதைத் தொகுப்பு அடையாளம் காட்டியது. அதிலிருந்த ஒரு கவிதை -
பச்சைக் கிளி
சிட்டுக்குருவி
செண்பகம்
தும்பி
அனைத்தையும்
எச்சரிக்கிறது
காற்றாலைக் கோபுரம்
ஆகாயம் தரும்
சுதந்திரத்தைப் பறிக்கிறது
மின்சார வணிகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT