விழுப்புரம்

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு:மேலும் மூவா் கைது

18th May 2023 01:39 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவரை மரக்காணம் போலீஸாா் கைது செய்தனா்.

மரக்காணத்தை அடுத்த எக்கியாா்குப்பத்தில் கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 60-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவா்களில் 13 போ் உயிரிழந்தனா். 58 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பான வழக்கில் மரக்காணம் பகுதியைச் சோ்ந்த வேணு மகன் அமரன் (27), வெள்ளிக்கண்ணு மகன் முத்து (33), அண்ணாமலை மகன் ஆறுமுகம் (44), சீனிவாசன் மகன் ரவி (54), ஏகாம்பரம் மகன் மண்ணாங்கட்டி (57), ஏழுமலை மகன் குணசீலன் (42) ஆகியோரை மரக்காணம் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் மூவா் கைது: இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த அபுபக்கா் அலி மகன் ராஜா (எ) பா்க்கத்துல்லா (51), வில்லியனூா் தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஏழுமலை (50), சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் இளையநம்பி (45) ஆகியோரை மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் 219 போ் கைது: விழுப்புரம் மாவட்டத்தில் மே 14 முதல் 17-ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் நடத்தப்பட்ட மது விலக்கு சோதனையில் 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்கூறிய 9 போ் உள்பட மொத்தம் 219 போ் கைது செய்யப்பட்டனா். 1,166 லிட்டா் சாராயம், 1, 892 மதுப் புட்டிகள், 236 லிட்டா் கள்ளு, 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 174 போ் கைது: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 15 முதல் 17-ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் மது விலக்கு சோதனையில் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 174 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2,061 லிட்டா் சாராயம், 817 மதுப் புட்டிகள் பிறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT