தமிழ்மணி

மகளிர் கல்வியும் கலைமகள் பெருமையும்

சுபலட்சுமி பழனி


மகளிருடைய கல்வி முன்னேற்றத்தைக் கருதி அமைக்கப் பெற்ற இக்கலைமகள் கல்லூரியில் இந்த நன்னாளில் கலைமகள் திருக்கோயிலைத் திறந்து வைக்கும் நிலை வாய்த்தது குறித்து என் நல்வினையைப் போற்றுகின்றேன்.

அன்பர்களும் அறிஞர்களும் மிகுதியாகவுள்ள இந்தத் தமிழகத்தில் இந்த நற்செயலை என்னாற் செய்விக்க எண்ணிய இந்தக் கல்லூரியின் தலைவராகிய அ.மெ. மெய்யப்ப செட்டியாருடைய பேரன்பை நான் மறவேன். சில காலமாக எனக்கு இருந்த தேக அசௌகரியத்தால் வெளியிடங்களுக்குச் செல்வதை நிறுத்தியிருந்தேன். நான் வரவேண்டும் என்று செட்டியார் விரும்பியபோது, முதலில் மறுத்தேன். பின்னர், அவருடைய வற்புறுத்தலும் அன்பும் என்னை இங்கே வரச் செய்தன.

இப்போது நான் இங்கே காணும் காட்சி எனக்கு மிக்க ஆறுதலையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்த இடம் வந்திருந்தபோது, இந்தக் கலைமகள் கல்லூரி ஆரம்ப நிலையில் இருந்தது. அப்போது அதன் அமைப்புகளையும் மெய்யப்ப செட்டியாரின் முயற்சிகளையும் அவருக்கு ஊக்கமளித்து துணை நின்ற அவரது மனைவியின் இயல்பையும் அறிந்து நான் பெரும் வியப்படைந்தேன்.

ஒருவர் போன வழியிலேயே பெரும்பாலும் செல்லும் கொள்கையுடையோர் உள்ள இந்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றை இந்தப் பக்கங்களிலே காணப்படாத புதிய முறையில் எல்லோருக்கும் நன்மை உண்டாகும்படி அமைத்து நடத்திவரும் செட்டியாரவர்களை யாவரும் பாராட்டும் கடப்பாடுடையோர்.

நெடுநாள்களாக எண்ணி எண்ணி மேற்கொண்ட அவர்களுடைய விருப்பம் நிறைவேறி வருவதனால், அவர்களுக்கு உண்டாகும் உவகை மிகுதியானது. இதனால் என் போலியருக்குப் பின்னும் அதிகமாக மகிழ்ச்சி உண்டாகின்றது.
தமிழ்நாட்டினருக்கே இக்கல்லூரி ஓர் உதாரணமாகத் திகழ்கின்றது. சென்னையில் உள்ள úஸவா ஸதனம், சாரதா பாடசாலை போன்ற சில மகளிர் கல்லூரிகளின் முறைகள் இங்கும் காணப்படுகின்றன.

மகளிருக்கு கல்வி இன்றியமையாதது என்று காரணம் காட்டிப் பேச வேண்டிய காலம் ஒன்று முன்பு இருந்தது. இப்பொழுதோ அதற்கு அவசியம் இல்லை. மக்களுக்குள் பெண்பாலர் ஏனையோரைப் போலவே, கல்விப் பயிற்சி பெறுதல் அவசியம் என்பது யாவரும் உடம்படும் செய்தியாகிவிட்டது. ஆதலின் அதனை இங்கே மீண்டும் நான் வற்புறுத்துவது மிகை.

ஆயினும், பண்டைக் காலத்தில் மகளிருடைய நிலையையும் கல்வியில் அவர்கள் வளர்ச்சியுற்றிருந்த முறையையும் பழைய புலவர்கள் வாக்குகளால் புலப்படும் செய்திகளையும் சிறிது கூறலாமென்று எண்ணுகிறேன்.

மகளிரென்று நினைத்தபொழுதே நம் கருத்தில் தோன்றும் குணம் "கற்பு' என்பது. நம் நாட்டு நூல்கள் யாவும் ஒருமுகமாக மாதர்களின் கற்பு நிலையையே உயர்வாகக் கூறுகின்றன.

உயிரினுஞ் சிறந்ததன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்ததன்று
என்பது தொல்காப்பியம்.

அக்கற்பு என்னும் சொல்லை ஆராய்வோமாயின் அதுவே கல்வியோடு தொடர்புடையதென்று விளங்கும். "கற்பு', "கல்வி' என்னும் இரண்டு சொற்களும் "கல்' என்னும் பகுதியடியாகவே பிறந்தன. இரண்டுக்கும் கற்றலென்பதே சொற்பொருள்.

"எழுதாக் கற்பி னின்செய லுள்ளும்' என்பதில் கற்பு என்னும் சொல் கல்வியைக் குறித்து நிற்கின்றது. இதனை உணர்ந்தே கற்பென்பதன் பொருளை விளங்க உணர்த்த வந்த நச்சினார்க்கினியர், "கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுதுகுரவர் கற்பித்த லானும், அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று' என்றார்.

இதனால் மகளிர் தமக்கெனச் சிறப்பாக வகுக்கப் பெற்ற சில ஒழுக்கங்களையும் பிறவற்றையும் கற்றுக் கொள்ளுதல் இன்றியமையாததென்பதனை அறிந்து கொள்ளலாம். சென்னையிலும் சென்னையைச் சார்ந்த இடங்களிலும் கற்பித்தலென்பது மணஞ் செய்து கொடுத்தலைக் குறிக்க வழங்குகின்றது.

கல்விக்கும் பெண்மைக்கும் பல வகையிலேயே தொடர்பு உண்டு. வடமொழியிற் கல்வி என்பதைக் குறிக்கும் சொல்லாகிய "வித்யா' என்பது "ஸ்த்ரீலிங்கம்'. இதனை அறிந்தே ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் "கல்வியே கற்புடைப் பெண்டிர்' என்று கல்வியைக் கற்புடைய மகளாக உருவகம் செய்கின்றனர். கல்விக் கடவுளே கலைமகளாகிய பெண் தெய்வம்தானே?

பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்தால் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் இருபாலரும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது தெரியவரும். மகளிருக்குக் கல்வி இன்றியமையாதது என்பதை அக்காலத்தினர் நன்கு உணர்ந்திருந்தனர்.

அரசர்களுக்கு அவர் மனைவியர், மந்திரிகளைப் போல இருந்துயோசனை கூறினர். செல்வர்களுடைய மனைவியர் அச்செல்வத்தை நல்ல வழியிலேயே செலவிடத் துணை நின்றனர். வறியோர் குடும்பத்துப் பெண்கள் தம் அறிவுத்திறத்தினால் குடும்ப வாழ்க்கையில் பல நன்மைகளை உண்டாக்கினர்.

மனைக்குத் தலைவியாக இருந்த பெண், தன் தலைவன் ஈட்டிய பொருளை வரவுக்கேற்ப செலவு செய்து வந்தாள். அத்தகைய வாழ்க்கைத் துணைவி, "மனைத்தக்க மாண்புடையளாகித்தற் கொண்டாள் வளத்தக்காள்' என்று பெரியோர் பாராட்டும் வண்ணம் வாழ்ந்தனள். அவளால் மனை நலம் நிரம்பியது.

"இவள் வீடு புகுந்தாள். இவளுடைய திறமையினாலே இவ்வீட்டின் செல்வநிலை உயர்ந்தது' என்று சொல்லும் பெருமை அவளுக்கு இருந்தது. இக்கருத்தை,

ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரை
என்னும் குறுந்தொகைச் செய்யுள் (295) தெரிவிக்கின்றது.

"இவள் வருவதற்கு முன்னெல்லாம் இந்த வீட்டில் ஒரே ஒரு பசு இருந்தது. அதை வைத்துக் கொண்டு ஏதோ கிடைத்ததை உண்டு காலம் கழித்தார்கள். இந்தச் சிறு பெண் வந்தாள். இவளுடைய திறமையினால் இந்த வீட்டில் லட்சுமி விலாசம் உண்டாயிற்று. இப்போது நாள்தோறும் விருந்தும் விழாவுமாக இருக்கிறது வீடு' என்று பிறர் போற்றுவதாக ஒரு தோழி கூறுகின்றாள். அந்தப் பெண் புக்ககம் வந்த பிறகு அவளுடன் அதிர்ஷ்டம் குடி புகுந்ததென்று கொள்வதிற் பிழையொன்றும் இல்லை. ஆயினும், அவளுடைய முயற்சிகளும் அந்நிலைக்குக் காரணமாக இருந்தனவென்று கொள்வதே சிறப்பாகும்.

தன் கணவனது வருவாய் இன்னதென்று அறிந்து அதற்கு ஏற்றபடி செலவுகளை அமைத்துக்கொண்டும் அவ்வப்பொழுது தன் கணவனுக்கு ஊக்கம் அளித்துப் புது முயற்சிகளை மேற்கொள்ளும் வண்ணம் செய்தும் தன் வீட்டின் செல்வ நிலையை அவள் உயர்த்தினாள். அவள் மனையறம் பாதுகாத்துப் பொருள் நிலையைச் செவ்விதாக்கித் தன் நாயகனுக்கு இன்பம் வழங்கினாள்.

பல ஆண்டுகளாகியும் தமக்கு நரையில்லாததன் காரணத்தைக் கூற வந்த புலவர் ஒருவர் தம் மனம் திருப்தி அடைவதற்கேற்ற அமைப்புகள் தம் வீட்டிலும் ஊரிலும் நாட்டிலும் இருப்பதாக ஒரு செய்யுளில் கூறுகின்றார். அவர் கூறும் காரணங்களுள் முதற்காரணம், மாட்சிமைப்பட்ட அவர் மனைவி அறிவு மிக்கவளாக இருந்தமையே என்று தெரிகின்றது.

யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு
மக்களும் நிரம்பினர் (புறம்: 191)

இவ்வாறு நிரம்பிய அறிவுடையவளாக ஒரு பெண் இருக்க வேண்டுமாயின், இயற்கை அறிவோடு செயற்கை அறிவும் அவளுக்கு அமைவது அவசியமாகும். அவ்வறிவுக்குக் காரணமாவது கல்வி.

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு
என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

செல்வமும் அறிவும் ஒருங்கு வாய்க்கப் பெற்ற மகளிர் இல்லற வாழ்விற்குரிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி வந்தனர். செல்வத்தோடு கல்வியையும் பெறுவதனால் மகளிர் சிறப்புறுவர் என்பது கம்பர் கருத்து. இது,

பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே
என்னும் செய்யுளால் பெறப்படும்.

சங்க காலத்து புலவர்களில் பெண்கள் உண்டு. பிற்காலத்து பல மகளிர் சிறந்த புலமையுடையவர்களாகத் திகழ்ந்தனர். எவ்வகை ஜாதியினராயினும் எவ்வகை சமயத்தினராயினும் மகளிர் கற்றுத் தேர்ந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இவை பழைய செய்திகள். இன்று மகளிர் கற்றல் வேண்டும் என்னும் கொள்கை நாடு முழுவதும் பரவியிருக்கின்றது. ஆயினும் நம் நாட்டுக்கு ஏற்றபடி பெண்களைப் பயிற்றவேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர் மிக அரியர்.
இப்போதுள்ள கல்விமுறை நம் நாட்டு நாகரிகத்துக்கு முழுவதும் தக்கபடி அமையவில்லை. கல்வியினால் விளையும் பயன் முழுவதையும் இம்முறையினால் பெற இயலவில்லை என்பது பலர் கொள்கை. ஆடவருக்கே இம்முறை பெரும்பயனைத் தரவில்லை எனில் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. ஆடவருக்கு உரியன யாவும் பெண்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்பது தகுதியன்று.

பெண்களுக்கே உரிய தனிக்கலைகளும் ஆண்களுக்கே உரிய தனிக்கலைகளும் உண்டு. ஆதலின் நாட்டுமுறைக்கும் பெண் தன்மைக்கும் ஏற்ற வண்ணம் அமையும் கல்வியே மகளிருக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.
இந்த பிரார்த்தனா மண்டபத்தின் அமைப்பே இங்குள்ள பெண்மைக்கு அடையாளமாக விளங்குகின்றது. கல்வி கற்பார் யாவரும் கலைமகளின் திருவருளைப் பெற வேண்டும். நம் நாட்டில் சிறந்த கவிஞர்களாகப் போற்றப் பெறும் காளிதாஸர், கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் முதலியோர் கலைமகளுடைய திருவருள் நோக்கத்தைப் பெற்றவர்களே.

கம்பர் "சரசுவதியந்தாதி' பாடியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் கூத்தனூரென்னும் ஊரில் திருக்கோயில் கொண்டுள்ள கலைமகளை வழிபட்டுப் புலமை வாய்ந்தனர். குமரகுருபரரோ "சகலகலாவல்லி' மாலை பாடி ஹிந்துஸ்தானி பாஷையை அறிந்துகொண்டார். பரம சைவராகிய அவர் மனம் கரைந்து கலைமகளைத் துதித்துள்ளார். "கண்கண்ட தெய்வம்' என்று பாராட்டுகின்றார். அதனால் கலைமகள் சமயம் கடந்த தெய்வம் என்று அறிகின்றோம்.

பௌத்தர்களும் ஜைனர்களும் கூட கலைமகளை வணங்கி வந்தனர். பௌத்த சமயக் காப்பியமாகிய மணிமேகலையில் ஆபுத்திரன் என்னும் ஒருவனது வரலாறு வருகின்றது. அவன் பௌத்தன். அவன் மதுரையிலேயே சிந்தாதேவியின் திருக்கோயிலைச் சார்ந்த ஓரிடத்தில் இரவில் படுத்திருந்தபோது, அத்தேவி எழுந்தருளி அட்சய பாத்திரம் ஒன்றை அவனுக்குத் தந்தாள். அப்பாத்திரம் எடுக்க எடுக்கக் குறையாத அன்னத்தை அளிப்பது.

சிந்தாதேவி என்பவள் குலமகளே. அக்கோயில் கலைநியமம் என்று வழங்கும். கல்வியையும் குறைவற்ற உணவையும் கலைமகள் அளிக்கும் இயல்பினள் என்பதை இவ்வரலாறு விளக்குகின்றது.

சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி

என்று ஆபுத்திரன் சிந்தாதேவியைத் துதித்தாதென்று மணிமேகலை கூறுகின்றது. அந்தக் கலைமகளின் திருவுருவம் இன்றும் மதுரைத் திருக்கோயிலின் தென்பிரகாரத்தில் தென்பாக மண்டபத்தில் உள்ளது.

"சீவக சிந்தாமணி' ஆசிரியராகிய திருத்தக்க தேவர் அந்நூலின் முதல் இலம்பகமாகிய நாமகள் இலம்பகத்திலே கலைமகளைப் பற்றிச் சிறப்பிக்கின்றனர். சீவகன் கல்வி கற்றுத் தேர்ந்தனன் என்பதை அவ்விலம்பகம் சொல்லுகின்றது. அதனையே சீவகன் நாமகளை மணந்தனனென்று வேறு வகையாகப் புனைந்து கூறினர்.

சீவகனை வளர்த்தவர்கள் அவனுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினமையை,
குழைமுக ஞான மென்னுங் குமரியைப்
புணர்க்க லுற்றார்'
என்றும், அவன் கற்றுத் தேர்ச்சி பெற்றதை,
நாமக ணலத்தை யெல்லாம் நயந்துடன் பருகி
என்றும் அம்முனிவர் கூறினார்.

"கல்வியே கற்புடைப் பெண்டிர்' என்னும் கருத்து இத்தகைய பெரியோர் வாக்குகளின் நினைவிலிருந்தே குமரகுருபரருக்குத் தோன்றியிருத்தலும் கூடும். ஜைனர்களுக்குச் சிறந்த தலமாகிய சிரவணவெண்குளத்தில் கலைமகள் வடிவம் வழிபடப் பெற்று வருகின்றது.

தண்டியலங்காரத்தில் உள்ள மேற்கோட் செய்யுள் ஒன்று நாவலர்களுக்கு ஞானக் கண்ணாக இருந்து உதவும் கலைமகளை, மூன்று சக்திகளாகவும் எல்லாச் சமயத்தாருக்கும் பொதுவான தெய்வமாகவும் பாராட்டுகின்றது.

இமையவர்கள் மோலி இணைமலர்த்தாள்சூடச்
சமயந் தொறுநின்ற தையல் - சிமய
மலைமடந்தை வாச மலர்மடந்தை
எண்ணெண்
கலைமடந்தை நாவலோர் கண்
என்பது அச்செய்யுள்.
சமயந்தொறும் நின்ற தையல் என்பதைக் காண்க.

ஆடவர் ஆண் தெய்வங்களின் பெயரைச் சூட்டிக் கொள்ளுதலும், பெண்கள் பெண் தெய்வங்களின் பெயரை வைத்துக் கொள்ளுதலும் மரபு. இம்முறை மாறி இயற்பெயராக வழங்குதல் சிறுபான்மையாகும். ஆயினும் கல்விச் சிறப்புடையாருக்குக் கலைமகளாகிய பெண் தெய்வத்தின் பெயர் சிறப்புப் பெயராக வழங்குகின்றது.

"சரசுவதி', "பாரதி' என்ற பெயர்கள் ஆடவர்களுடைய இயற்பெயரோடு சேர்ந்து வழங்குவதைக் காண்க. கலைமகளுடைய அருள்நிலை சமயம் கடந்தும் பால் வேறுபாடு கடந்தும் ஒளிர்கின்றது.

இத்தகைய சமரஸ தெய்வத்தின் திருக்கோயில் இங்கே அமைந்திருப்பது எல்லா வகையிலும் பொருத்தமுடையதே ஆகும். கலைமகள் திருவுருவத்தை வருணிக்கையில் கம்பர், தூய உருப்பளிங்கு போல்வாள் என்று பாராட்டுகின்றார். இந்தத் திருவுருவத்தில் கலைமகள் தூய உருப்பளிங்கேயாகிக் காட்சியருள்கின்றாள். இதன் அமைப்பில் அழகும் கலைத்திறமையும் தெய்வத் தன்மையும் ஒருங்கே இலங்குகின்றன.

(புதுக்கோட்டை சமஸ்தானம் கொப்பனாப்பட்டி கலைமகள் கல்லூரியில் கலைமகள் திருக்கோயில் திறப்பு விழா 1939-ஆம் ஆண்டு ஜூன் 1-இல் நடைபெற்றது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்து டாக்டர் உ.வே. சாமிநாதையர் ஆற்றிய உரை:)

இன்று (பிப். 19) மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் பிறந்தநாள்.

தகவல் உதவி : முல்லை மு. பழநியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

SCROLL FOR NEXT