தமிழ்மணி

இருவேறு நோக்கில் தலைவியின் கண்கள்

முனைவர் கா. ஆபத்துக்காத்த பிள்ளை

அன்று முதல் இன்று வரை தலைவியின் கண்களைச் சிறப்பிக்காத புலவர்களே இல்லை எனலாம். சிறப்பாக ஐயன் வள்ளுவனைக் குறிக்கலாம். குறிப்பறிதல், கண்விதுப்பழிதல், காதல் சிறப்புரைத்தல் ஆகிய அதிகாரங்களில் காதலில் கண்கள் பெறும் இடத்தை அற்புதமாகச் சித்திரிப்பார்.  

நற்றிணைப்புலவர் சற்று வித்தியாசமாக கண்களின் ஆற்றலை, களவிலும் கற்பிலுமாக இருவேறு நோக்கில் காண்பது சிந்திக்க வைக்கிறது. குறள் போல் நேரடியாகக் கூறாமல் நாடகப் பாணியில் அமைத்து செல்வதும் சுவை பயக்கிறது.

எப்போதும் இல்லாத வகையில் தலைவனிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட பாங்கன் அவனிடம், உன்னிடமிருந்த அரிய குணங்களெல்லாம் இன்று இல்லாதுபோக என்ன காரணம் என வினவ, தலைவன் பதில் கூறுமுகத்தான் இப்பாடல் அமைகிறது. பாங்கற் கூட்டத்தில் கழற்றெதிர்மறை துறையில்  புலவர் இப்பாடலை (160) அமைக்கின்றார்.

உடல் முழுக்க உதிர்த்து விட்டாற் போன்ற தித்தியும் (பெண்மேனியில் உள்ள நுண்ணிய, பொன்னிறப் புள்ளிகள்) தேமலும் கொண்ட எழுச்சி மிக்க அழகிய கொங்கையும் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்ட, தேன் நிறைந்த பூக்களைச் சூடிய கூந்தலானது சிவந்த நெற்றி மேல் பொலிவுடனே விளங்க, குளிர்ந்த நீரைக்கொண்ட பொய்கையில் மலர்ந்த இரு குவளை மலர்களை ஒன்றோடொன்று எதிரெதிரே தொடுத்தாற் போன்ற செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையும் உடைய தலைவியை, நான் காணும் முன்பு வரை, என்னிடத்தில் இருந்ததாக நீ கூறிய, எல்லோரிடத்தும் அன்பு, அன்புடையாரிடத்தும் பகைவரிடத்தும் காட்டும் நட்பு, பெண்ணிடத்திலிருந்து இரவாது பெற்ற நாணம், இரந்தவர்க்குச் கரவாது ஈயும் கொடை அறவழி நிற்கும் பண்பு உலக வழக்கை அறிந்து ஒழுகும் ஒழுக்கம் ஆகிய அத்தனை நற்பண்புகளும் உன்னைவிட கூடுதலாகவே எனக்கு இருந்தன. அவள் செவ்வரி படர்ந்த, மதர்த்த கண்களை, முதன்முதல் நோக்கிய பின்னர் அத்தனை நற்பண்புகளும் என்னை விட்டு நீங்கின. 

இதனை, 
நயனும் நண்பும் நாணும் நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
நும்மினும் உடையேன் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை
உதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன்
திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே.
(நற்றிணை: 160)
என்ற பாடல் உணர்த்துகிறது.

மேற்கூறப்பட்ட நற்றிணைப்பாடல் தலைவி நோக்கிய நோக்கு தலைவனது அத்தனை நற்பண்புகளையும் இழந்து துயருறச் செய்ததாகக் கூறுகிறது. இங்கு இழப்பு தலைவனுக்குத் தானேயன்றி தலைவிக்கில்லை. இந்நிகழ்வு திருமணத்திற்கு முந்தைய களவு நிலையில் சொல்லப்படுகிறது.    

மணத்திற்குப் பின் நிகழும் கற்புநிலையில் மேற்கூறிய களவுநிலைக்கு முரணாக, தலைவியின் கண்கள் பெறப்போகும் துயரத்தை 171.ஆவது பாடல் சித்திரிக்கக் காணலாம்.    தலைவனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவியை நோக்கிக் கூறுவதாக இப்பாடலின் துறை அமைகிறது. 

நீர் வேட்கையால் பிடியானை, வெப்பமிக்க மலைப் பக்கத்தில் செல்கிறது. அதன் கன்றோ அதனோடு செல்லாமல் சேரியில் உள்ள பசுங்கன்றுகளோடு சேரிப் பெண்டிர் அஞ்சும் வகையில் சேரியின் உள்ளே செல்கிறது. தலைவன் நம்மைப் பிரிந்து மலைகள் அடர்ந்த அருஞ்சுரம் நோக்கி செல்ல விருப்பம் கொண்டுள்ளான். அவன் செல்லும் பாதை, மணிகள் களையப்பட்ட கொல்லும் வேல் போன்ற கொடிய பேய்கள் நடமாடும் பாதையாகும். நடுயாமத்தில் ஆர்வ நெஞ்சமொடு, தலைவன் மார்பின் மீது நெருங்கிப் பொருந்திய தலைவியே, "உனது கண்கள் இனி எவ்வாறு துயில் கொள்ளும்?' என்பதாக அமைகிறது. 

இதனை,
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலஞ்செலக் செல்லா கயந்தலைக் குழவி
சேரியம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊரான் கன்றொடு புகுதும் நாடன்
பன்மலை அருஞ்சுரம் இறப்பின் நம்விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்
வினைப்பூண் தெண்மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்புறப் படுத்தல் மரீஇய கண்ணே.    
(நற்றிணை: 171)
என்ற பாடல் உணர்த்துகிறது.

யானை நீர் வேட்கையால் மலைப்பக்கம் செல்ல, அதன் கன்று அதனோடு செல்லாது பசுவின் கன்றுகளோடு சேரிப்புறத்திற்குச் செல்வதாகக் காட்டுவது இப்பாடலில் அமையும் உள்ளுறைப்பொருளாம். யானை, தலைவனையும் கன்று தலைவியையும் குறிக்கும். யானையின் நீர்வேட்கை தலைவனின் பொருள் வேட்கையைக் குறிக்கும். தலைவி தலைவனோடு செல்லாது சேரி மகளிரோடு ஆற்றியிருத்தல், கன்று தன் தாய் யானையோடு செல்லாது பசுங்கன்றுகளோடு இருத்தலைக் குறிக்கும். சேரிமகளிர் யானைக்கன்றைக் கண்டு நடுங்குவது, பிரிவால் தலைவி எவ்வாறு ஆற்றியிருக்கப் போகிறாள் என்பதையும் தலைவன் செல்லும் கொடிய பாதையையும் எண்ணி சேரிமகளிர்  நடுக்கம் கொள்வதை குறிப்பதால் உள்ளுறை  உவமம் பொருந்தி அமையக் காணலாம்.

தலைவியைச் சேரிமகளிர் ஆற்றுவிக்க முயலலாம். ஆனால் தலைவியின் இயல்பை முற்ற உணர்ந்தவள் தோழியாதலால் தலைவன் மார்பில் கண் புதைத்து தூங்கும் தலைவியின் கண்கள் தலைவனைப் பிரிந்து எவ்வாறு இருக்கும் எனக் கலங்குகிறாள். இங்கு தலைவியின் துயரம் பேசப்படுகிறதேயன்றி தலைவன் துயர் கொண்டதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.

களவில் ஆற்றல்மிக்க தலைவியின் கண்களைக் குளிர்ந்த பொய்கையில் மலர்ந்த இரு குவளை மலர்களை எதிரெதிர் வைத்துத் தொடுத்தாற் போன்று கட்டி வைத்த அழகுடைய கண் என்றும் "அரிமதர் மழைக்கண்' என்றும் சிறப்பிக்கிறது. கற்பில், ஆற்றல் இழந்த கண்களை எவ்வித அடைமொழியுமின்றி "கண்ணே' என்று மட்டும் குறிப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது.

களவில் தலைவனைக் கண்ட தலைவியின் கண்கள் அவனைத் தன்பால் ஈர்த்ததோடு அவன் உயர் பண்புகள் அனைத்தையும் இழக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. கற்பில், அவனைப் பிரிவதால் ஆற்றல் இழந்து துயருறப் போகின்றனவே. இனி எவ்வாறு அவை துயில் கொள்ளும் எனும் பொருளில் "யாங்கு வல்லுந' எனத் தோழி, தலைவியின் ஆற்றல் இழந்த கண்களை எண்ணி இரங்குவதாகக் காட்டப்படுகிறது. இங்கு தலைவியது கண்களின் திறனை இருவேறு நோக்கில் காணும் புலமைத்திறன் பாராட்டுக்குரியது.

களவில் தலைவியைத் தவிர வேறு எதையும் நினையாத தலைவன் கற்பில் "வினையே ஆடவர்க்கு உயிர்' என்று அவளைப் பிரிய நினைப்பதும் களவில் தலைவனைப் பற்றிச் சிந்திக்காத தலைவி, அவன் பிரிவை எண்ணி கலங்குவதுமாக நிகழும் இந்த மாற்றம் பழந்தமிழர் பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி நிற்கக் காணலாம்.

கட்டுரையாளர்:

முதல்வர் (ஓய்வு), அறிஞர் அண்ணா கல்லூரி,
ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT